Published : 14 Jul 2017 10:33 AM
Last Updated : 14 Jul 2017 10:33 AM
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கால் இறுதி சுற்றில் காயம் காரணமாக வெளியேறிய செர்பியாவின் ஜோகோவிச் நீண்ட காலம் ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் நேற்று முன்தினம் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், 11-ம் நிலை வீரரான செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்கொண்டார். இதில் தாமஸ் பெர்டிச் 7-6, 2-0 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்தபோது ஜோகோவிச்சுக்கு வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்ட அவர், தொடர்ந்து விளையாட முடியாமல் வெளியேறினார். இதனால் தாமஸ் பெர்டிச் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
முழங்கையில் ஏற்பட்ட காயம், விம்பிள்டனில் 4-வது முறையாக பட்டம் வெல்லும் ஜோகோவிச்சின் கனவை கலைத்துள்ளதுடன் நீண்ட காலம் ஓய்வு எடுக்க வேண்டிய நிலைக்கும் தள்ளி உள்ளது. 30 வயதான ஜோகோவிச்சுக்கு கடந்த ஓராண்டு காலமாக முழங்கை காயம், தொல்லை கொடுத்து வந்தது. தற்போது காயத்தின் தன்மை மோசமான நிலையை அடைந்துள்ளதால் அவரால் சில மாத காலங்கள் விளையாட முடியாத நிலை உருவாகி உள்ளது.
ஜோகோவிச் கூறும்போது, “காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்க வாய்ப்புள்ளது. ஆனால் அது நல்லது என்று நான் கருதவில்லை. அறுவை சிகிச்சை என்பது எனக்கு நானே விஷம் வைத்துக் கொள்வதற்கு சமம். இதனால் அறுவை சிகிச்சை ஒருபோதும் சிறந்த தீர்வாக இருக்காது.
தர்க்கரீதியான முடிவு என்னவென்றால் ஓய்வு மற்றும் நீண்ட இடைவேளை தேவை. இதுதான் தர்க்கரீதியான தீர்வாக இருக்க முடியும். நீண்ட கால ஓய்வு அவசியமாக இருக்கலாம். இது காயத்துக்கு மட்டும் அல்ல என்னுடைய மனதுக்கும் தான். எனது டென்னிஸ் வாழ்க்கையில் நான் பள்ளி பருவ அட்டவணையை கடைபிடித்து வருகிறேன். ஒருபோதும் நான் தவறு செய்தது இல்லை. ஒருவேளை அடுத்த பருவத்தில் நான் விலகுவேன்” என்றார் .
முழங்கை காயத்துக்கு முன்னதாக விம்பிள்டன் 4-வது சுற்றில் ஜோகோவிச், தோள்பட்டை காயம் காரணமாகவும் அவதிப்பட்டார். இந்த காயங்களுக்கு நிச்சயம் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் மனநிலையில் ஜோகோவிச் இல்லை. இதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா என ஜோகோவிச்சிடம் கேட்டபோது, “மருத்துவ வல்லுநர்களிடம் பேசிய போது அவர்கள் எதையும் தெளிவாக கூறவில்லை. மருத்துவ சிகிச்சையையும், வேறு வழிமுறைகளையும் குறிப்பிடுகின்றனர். எதை செய்ய வேண்டும் என்பதில் யாரும் தெளிவாக இல்லை. எப்படியும் இதில் இருந்து விடுபட 7 மாதங்கள் ஆகக்கூடும். இதனால் தற்போது இடைவெளி தேவை உள்ளது. இதை நான் பரிசீலிக்க வேண்டும்” என்றார்.
அடுத்த 6 வாரங்களில் அமெரிக்க ஓபன் தொடங்க உள்ளது. காயத்தால் அவதிப்படுவதால் இந்த தொடரில் ஜோகோவிச் கலந்து கொள்ள வாய்பு இல்லை என்றே கருதப்படுகிறது. ஜேகோவிச் கடைசியாக கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்று தனது கேரியர் கிராண்ட் ஸ்லாம் கனவை நிறைவேற்றினார். ஆனால் அதன் பின்னர் அவர், கிராண்ட் ஸ்லாமில் பட்டம் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT