Published : 30 Mar 2017 03:08 PM
Last Updated : 30 Mar 2017 03:08 PM

‘ஆஸி. வீரர்கள் நண்பர்கள் இல்லை’ கருத்துக்கு விராட் கோலி புதிய விளக்கம்

ஆஸ்திரேலிய வீரர்கள் நண்பர்கள் அல்ல என்று விராட் கோலி தரம்சலா டெஸ்ட் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார், அது குறித்து பல்வேறு தரப்புகளிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் தான் கூற வந்தது என்ன என்பது பற்றி புதிய விளக்கம் அளித்துள்ளார் விராட் கோலி.

இது குறித்து அவர் தன் ட்விட்டரில் கூறும்போது,

“ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் நான் கூறியது மிகவும் ஊதிப்பெருக்கப்பட்டுள்ளது. நான் முழு ஆஸ்திரேலிய அணியையும் அந்த வகையில் சேர்க்கவில்லை.

இரண்டு வீரர்களை மட்டுமே அவ்வாறு குறிப்பிட்டேன், மற்றபடி அந்த அணியின் மற்ற வீரர்களுடன் நான் நல்ல உறவிலேயே உள்ளேன் அவர்களுடன் நான் ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் ஆடியுள்ளேன் எனவே அவர்களுடனான என் நட்பில் எந்த வித மாற்றமும் இல்லை” என்று கூறினார்.

இந்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகே இரு அணிகளுக்கும் இடையே களத்தில் வார்த்தைப் பரிமாற்றங்கள் மோதல்கள், கிண்டல் பேச்சுக்கள் இருந்து வந்தன, ஸ்மித் ரிவியூவுக்காக பெவிலியன் உதவியை நாடிய சர்ச்சைக்குப் பிறகே இரு அணிகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. மாறி மாறி கருத்துகளை வீசி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.

கடைசியில் முரளி விஜய் தரையில் பட்டு கேட்ச் எடுத்த போது, ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் கெட்ட வார்த்தை அடைமொழியிடம் அவரை ஏமாற்றுக்காரர் என்றார். ஜடேஜாவை பேட் செய்த போது கடுமையாக கேலி செய்த வேட், ஸ்மித் கூட்டணி என்று விரிசல் அதிகமானது, மேலும் விராட் கோலியின் தோள்பட்டை காயத்தை நையாண்டி செய்தது என்று ஆஸ்திரேலிய அணியினர் பலவிதங்களிலும் சீண்டிப்பார்த்தனர்.

இந்நிலையில்தான் நட்புக்கு லாயக்கற்றவர்கள் என்ற தொனியில் விராட் கோலி கருத்து தெரிவித்திருந்தார், இதில் ஆஸ்திரேலிய அணி கடுமையாக அதிர்ச்சியடைந்தது.

இந்நிலையில் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x