Published : 11 Feb 2017 06:03 PM
Last Updated : 11 Feb 2017 06:03 PM

ஷாகிப் 82; முஷ்பிகுர், மெஹதி ஹசன் போராட்டம்: வங்கதேசம் 322/6

ஹைதராபாத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று வங்கதேச அணி தன் முதல் இன்னின்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் எடுத்துள்ளது.

ஆட்ட நேர முடிவில் முஷ்பிகுர் ரஹிம் 81 ரன்களுடனும், மெஹதி ஹசன் மிராஸ் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்காக இதுவரை ஆட்டமிழக்காமல் 87 ரன்களைச் சேர்த்துள்ளனர்.

முதல் 2 மணி நேர ஆட்டத்தில் முக்கிய விக்கெட்டுகளை இழந்தது வங்கதேசம், ஆனால் ஷாகிப் அல் ஹசன் தொடக்கத்தில் உமேஷ் யாதவ்வின் ஆக்ரோஷமான, அருமையான பந்து வீச்சை கடும் பீட்டன்களுடனும், அப்பீல்களுடனும் சமாளித்து 103 பந்துகளில் 82 ரன்களை வேகமாக எடுத்த நிலையில் அஸ்வின் பந்தை தேவையில்லாமல் அடித்து ஆட முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அவர் ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், முஷ்பிகுர் கடுமையான பொறுமையுடன் அருமையான தடுப்பாட்ட உத்தியுடன் 81 ரன்களில் நாட் அவுட்டாக இருப்பதற்கு இந்தியாவை விக்கெட் கைப்பற்ற விடாமல் திணறடித்திருக்கலாம். இந்த வகையில் ஷாகிப் அல் ஹசனின் அவுட் ஆனது பொறுப்பற்றதே.

இசாந்த் சர்மா முதல் 5 ஓவர்களில் 30/0 என்று சரியாக வீசவில்லை, ஆனால் அதன் பிறகு மிகச்சிறப்பாக வீசியதில் அவரது பந்து வீச்சு இதுவரை 16-5-54-1 என்று மேம்பட்டது.

அஸ்வினுக்கு ரிதம் சுத்தமாக இல்லை அவரிடம் வழக்கமாக காணப்படும் ட்ரிஃப்ட் இல்லை, பேட்ஸ்மென்களை அவர் எந்த வித சவால்களுக்கும் உட்படுத்தவில்லை. பந்துகள் திரும்பவும் இல்லை. கடந்த 3 இன்னிங்ஸ்களில் அஸ்வின் 110 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளையே கைப்பற்றியுள்ளார். சென்னையிலிருந்து அவரது இந்தத் திணறல் தொடர்ந்துள்ளது.’

இத்தனைக்கும் இவர் விக்கெட்டுகளை வீழ்த்துவதை சவுகரியம் செய்து கொடுக்கும் விதமாக வேகப்பந்து வீச்சாளர்கள் ரவுண்ட் த விக்கெட்டில் வீசி எதிர்முனையிலிருந்து அஸ்வின் பந்துகள் எழும்பி திரும்புவதற்காக தங்கள் கால்தடங்களை பதித்தனர், ஆனாலும் அஸ்வினால் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியவில்லை என்பதே எதார்த்த நிலை. பவுலர் கால்தடங்களை விட அவருக்கு குட்லெந்தில் நடுவில் குழி இருந்தால்தான் சரிப்பட்டு வரும் போல் தோன்றுகிறது. எனவே அவர் 24 ஓவர்களில் 6 மெய்டன்களுடன் 77 ரன்களுக்கு ஷாகிப் விக்கெட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

இதனால் இங்கிலாந்தை விடவும் வங்கதேச பேட்டிங் நன்றாக ஆடுவது போல்தான் தெரிகிறது. 5-வது முறையாக டெஸ்ட் போட்டிகளில் 300 ரன்களை வங்கதேசம் கடந்துள்ளது. ஆனால் முஷ்பிகுர் ரஹிம் 18 ரன்களில் இருந்த போது ஜடேஜாவின் அற்புத பீல்டிங் மற்றும் த்ரோவுக்கு மிகவும் நெருக்கமான ரன் அவுட்டில் ரீப்ளேயில் தப்பியதும் கவனிக்கத்தகுந்தது. ஷாகிப் அல் ஹசன் பேட்டிங் ஹை ரிஸ்க் பேட்டிங், உமேஷ் யாதவ் அவரது பேட்டிங் உத்தியை இரு புறமும் ஸ்விங் செய்தும், ரிவர்ஸ் செய்தும் ஆட்டிப்படைத்தார், ஸ்பின்னர்களையும் ஷாகிப் திருப்திகரமாக ஆடவில்லை. அஸ்வினின் 249-வது விக்கெட்டாக வெளியேறினார்.

51 ரன்களில் மெஹதி ஹசன் மிராஸ் 10 பவுண்டரிகளை விளாசினார். இசாந்த், யாதவ், ஜடேஜா, அஸ்வின் என்று அனைவரது பவுலிங்கிலும் பவுண்டரி அடித்தார். கடைசியில் அஸ்வின் பந்தை அருமையாக லேட் கட் செய்து அரைசதம் கண்டார் மெஹதி. முஷ்பிகு ரஹிம் 3000 டெஸ்ட் ரன்களை எடுத்த 4-வது வங்கதேச வீரரானார். ஹபிபுல் பஷார், தமிம், ஷாகிப் ஆகியோருக்கு அடுத்ததாக இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தினார். ஆட்டம் முடியும் தறுவாயில் இசாந்த் சர்மா பவுன்சர் ஒன்று இவரது விரல்களைப் பதம் பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.

உமேஷ் யாதவ்வின் ஆக்ரோஷ பந்து வீச்சு:

இன்று காலை 3-வது ஓவரிலேயே தமிம் இக்பால், உமேஷ் யாதவுக்கு எதிராக 2 ரன்கள் எடுக்கும் முயற்சியில் ரன் அவுட் ஆனார். உமேஷ் த்ரோ அருமையாக அமைய பவுலர் புவனேஷ் ரன் அவுட் செய்தார்.

உமேஷ் யாதவ் மிக இயல்பாக ரிவர்ஸ் ஸ்விங் செய்தார், ஷார்ட் பிட்ச், அவுட் ஸ்விங்கர்கள் அதிவேகமாக வந்தன, 140கிமீ வேகத்துக்கு மேல் சீராக வீசினார். இதனால் 5-2-7-1 என்று இருந்தார் உமேஷ், பிறகு மொமினுல் ஹக் விக்கெட்டை எல்.பி.முறையில் வீழ்த்தினார். இன்ஸ்விங்கர் மிக கூர்மையாக ஸ்விங் ஆனது.

ஷாகிப் இறங்கியவுடன் ரவுண்ட் த விக்கெட்டில் அசவுகரியமான லெந்த்தில் வேகமாக இருபுறமும் ஸ்விங் செய்து அவரை திணறடித்தார், வெளியே செல்லும் பந்துக்கு சந்தேகமாக மட்டையைக் கொண்டு செல்வதும், உள்ளே வரும் பந்தில் காலில் வாங்குவதுமாக ஷாகிப் திணறினார், ஒருமுறை கடுமையான முறையீடும் எழுந்தது. உமேஷ் யாதவ் லெந்த் மிகவும் அபாரமாக இருந்தது, இதே முறையில் அவர் வீசினார் ரபாடா ஆஸ்திரேலியாவுக்குச் செய்ததை இவரும் ஆஸ்திரேலியாவுக்குச் செய்ய முடியும்.

மஹமுதுல்லா, ஷாகிப் இணைந்து 45 ரன்களைச் சேர்த்தனர். அப்போது இசாந்த் சர்மா இன்ஸ்விங்கரில் இவரை எல்.பி.செய்தார்.

பிறகுதான் ஷாகிப், முஷ்பிகுர் இணைந்து 107 ரன்களை போராடி 5-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், அப்போதுதான் ஷாகிப் உல் ஹசன் தன்னை ஏதோ ஒரு கில்கிறிஸ்ட் என்று நினைத்துக் கொண்டு சூழ்நிலை தெரியாமல் பொறுப்பற்ற ஒரு ஷாட்டில் அஸ்வினிடம் ஆட்டமிழந்தார். சபீர் ரஹ்மான் 16 ரன்களில் ஜடேஜாவிடம் எல்.பி.ஆனார். 235/6 என்ற நிலையிலிருந்து 322/6 என்று 3-ம் நாள் ஆட்டத்தைச் சேதமில்லாமல் முடித்தது வங்கதேசம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x