Published : 29 Jan 2016 04:27 PM
Last Updated : 29 Jan 2016 04:27 PM
மெல்பர்னில் நடைபெறும் டி20 கிரிக்கெட்டில் இந்தியா முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்துள்ளது.
மெல்பர்ன் டி20 போட்டியில் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி மீண்டும் விராட் கோலியின் அதிரடி அரைசதம், ரோஹித், தவண் ஆகியோரின் அபாரத் தொடக்கத்துடன் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் குவித்துள்ளது.
ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள் முதல் ஒருநாள் போட்டியில் 91 ரன்கள் என்று அசத்திய கோலி முதல் டி20 போட்டியில் 55 பந்துகளில் 90 ரன்கள் விளாசியது இந்திய வெற்றியை உறுதி செய்தது, இன்று கோலி 33 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 59 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.
தொடக்க ஓவர்களில் பந்துகள் ஸ்விங் ஆகின, சில வேளைகளில் பேட்ஸ்மென்களை பீட் செய்தன.
ரோஹித் சர்மா, ஷிகர் தவண் இருவரில் தவண் முதலில் கடும் ஆக்ரோஷம் காட்டினார். ஹேஸ்டிங்ஸ், பாக்னர் ஆகியோரை ரோஹித், தவண் இருவருமே நன்றாக வாங்கினர். வாட்சன் ஓரள்வுக்கு நன்றாக வீசினார். முதல் 6 ஓவர்களில் 50 ரன்கள் வந்தது. 11 ஓவர்களில் 97 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் 32 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுத்த தவண் மேக்ஸ்வெல் பந்தில் லயனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இன்னும் இவர் சர்வதேச டி20-யில் அரைசதம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹேஸ்டிங்ஸ் வீசிய ஆட்டத்தின் 4-வது ஓவரில் ரோஹித் ஒரு பவுண்டரி அடிக்க, தவண் ஒரு பவுண்டரி பிறகு மிட்விக்கெட்டில் ஒரு பந்தை சுழற்ற அது மிகப்பெரிய சிக்ஸ் ஆனது. இந்த ஓவரில் 17 ரன்கள் விளாசப்பட்டது.
பிறகு பாக்னர் ஓவரில் ரோஹித் சர்மா 3 பவுண்டரிகளை விளாச இந்த ஓவரில் 15 ரன்கள் வந்தது. பிறகு பாக்னரை தவண் மேலேறி வந்து மிட் ஆனில் ஒரு பவுண்டரியையும், கீப்பர் தலைக்கு மேல் பவுன்சரை ஒரு சிக்சரும் அடித்தார். லயன் பந்து வீச வந்தவுடன் ரோஹித் ஒரு சிக்ஸ் அடித்தார்.
இடையில் மேக்ஸ்வெல், போலண்ட் சிக்கனமாக வீசி 2 ஓவர்களில் 9 ரன்களையே கொடுத்தனர். பிறகு மேக்ஸ்வெல்லை ரோஹித் லாங் ஆஃபில் ஒரு அற்புதமான வேகமான சிக்சரை அடித்தார். அந்த ஓவரில்தான் தவண் ரிவர்ஸ் ஸ்வீப் செய்து ஆட்டமிழந்தார்.
பிறகு ரோஹித் சர்மா வாட்சனை தேர்ட்மேனில் பவுண்டரிக்கு திருப்பிவிட்டு 36 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் அரைசதம் கடந்தார்.
ஹேஸ்டிங்ஸ் ஓவரில் கோலி 3 அபார பவுண்டரிகளை அடித்தார். பிறகு போலண்ட் பந்தில் லாங் ஆஃபில் ஒரு சிக்ஸ் விளாசினார். 16-வது ஓவரில் ரோஹித் சர்மா 47 பந்துகளில் 5 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். கோலி 2-வது ரன்னுக்கு வரவில்லை. அதாவது கோலி ரன் ஓடும்போது சற்றே தடுமாறியதால் 2வது ரன் வேண்டாம் என்றார், இதனால் ரோஹித் ரன் அவுட் ஆனார்.
29-வது பந்தில் கோலி டை வீசிய யார்க்கரை மிக அற்புதமாக எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார்.
ரோஹித் அவுட் ஆனவுடன் யுவராஜ் சிங் வருவார் என்று பார்த்தால் தோனி இறங்கிவிட்டார். தோனி 9 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்து லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து டையிடம் அவுட் ஆனார். இந்தியா 20 ஓவர்களில் 184/3. ஆஸி. தரப்பில் 3 பவுலர்கள் ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் விட்டுக் கொடுத்தனர்
ஆஸ்திரேலியா 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்து அபாரத் தொடக்கம் கண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT