Last Updated : 16 Nov, 2013 12:00 AM

 

Published : 16 Nov 2013 12:00 AM
Last Updated : 16 Nov 2013 12:00 AM

சச்சினின் நீங்கா நினைவுகள்!

சர்வதேச கிரிக்கெட்டில் ஒன்றல்ல, இரண்டல்ல… 24 ஆண்டுகள் கோலோச்சிய சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் தருணம் இது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயநாயகனான சச்சின், இந்த 24 ஆண்டுகளில் தன் மீது தொடுக்கப்பட்ட விமர்சன கணைகளுக்கு பேட்டால் மட்டுமே பதில் சொன்னவர். அமைதியின் வடிவமாய், சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டு, வளர்ந்து வரும் வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.

வெள்ளைக்காரர்களின் விளையாட்டான கிரிக்கெட்டில் படைக்கப்பட்டுள்ள தனிநபர் சாதனைகளில் பெரும்பாலானவை இன்று இந்தியரான சச்சினுக்கு சொந்தமானவை. இன்று படைக்கப்படும் சாதனைகள் நாளை மற்றொருவரால் முறியடிக்கப்படக்கூடியதே என்றா லும், சச்சினின் சாதனைகளில் பெரும்பாலானவை எந்தக் காலத்திலும் யாராலும் உடைக்க முடியாததாகவே இருக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

சேவாக், யுவராஜ் சிங், தோனி போன்ற வீரர்கள், இந்திய கிரிக்கெட்டில் நுழைவதற்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் அவுட்டாகிவிட்டால், இனி இந்தியா ஜெயிக்காது என்றுகூறி பெரும்பாலான ரசிகர்கள் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு தங்கள் வேலையைப் பார்க்கப் போய்விடுவது வழக்கமாக இருந்தது. இதனால் 1990-களில் சச்சினை வீழ்த்திவிட்டால் இந்தியாவை வென்றுவிடலாம் என எதிரணிகள் நினைத்தன. அது ஓரளவு உண்மையாகவும் இருந்தது.

24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த சச்சின், தனது சிறப்பான ஆட்டத்தால் தனக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கும் என்றுமே மறக்கமுடியாத, எண்ணற்ற பசுமையான நினைவுகளை தந்திருக்கிறார். இந்த உலகமும் கிரிக்கெட்டும் வாழும் வரை சச்சின் மற்றும் அவருடைய ஆட்டத்தைப் பற்றிய நினைவுகள் அனைவருடைய மனதிலும் நீங்காமல் இருக்கும். அவரைப் பற்றி மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரரும், சச்சினுக்கு மிகப் பிடித்த வீரருமான ரிச்சர்ட்ஸ் கூறுகையில், “கிரிக்கெட்டின் எந்த காலகட்டத்திலும், எந்த அணியிலும் சச்சின் இடம்பிடிக்கத் தகுதியானவர். இந்த உலகில் கடைசி முறையாக பந்து வீசப்படும்போதும் சச்சினின் புகழ் நிலைத்திருக்கும்,” என்று கூறியதே அதற்குச் சான்று. அவருடைய மறக்க முடியாத ஆட்டங்கள் சிலவற்றை காணலாம்:

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய சச்சின்

1993-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி ஈடன் கார்டனில் நடைபெற்ற ஹீரோ கோப்பை போட்டியின் முதல் அரையிறுதியில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் மோதின. கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது பயிற்சியாளராக இருந்த அஜித் வடேகர், கபில்தேவ் கடைசி ஓவரை வீசட்டும் எனக்கூறி, அந்த செய்தியை சொல்வதற்காக 12-வது வீரரிடம் தண்ணீரைக் கொடுத்து அனுப்பினார்.

அப்போதைய கேப்டன் அசாருதீன், கடைசி ஓவரை யாரிடம் கொடுக்கலாம் என தெரியாமல் திணறிக்கொண்டிருந்தார். அப்போது அசாருதீனிடம் இருந்து பந்தை வாங்கிய சச்சின், அந்த ஓவரில் 3 ரன்களை மட்டுமே கொடுத்து இந்தியாவுக்கு த்ரில் வெற்றியைத் தேடித்தந்ததை யாராலும் மறக்க முடியாது.

வார்னுக்கு வார்னிங்

1998-ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியா வந்தது. அந்தத் தொடர் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடர் என்பதைவிட சச்சின்-ஷேன் வார்னுக்கு இடையிலான தொடராகவே பார்க்கப்பட்டது. லெக் ஸ்பின்னரான வார்ன், எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த நேரம் அது. அதனால் சச்சின், வார்னை பதம்பார்ப்பாரா அல்லது சச்சினை வார்ன் வீழ்த்துவாரா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

கடுமையான உழைப்புக்கும், பயிற்சிக்கும் பெயர் பெற்றவரான மாஸ்டர் சச்சின், இந்திய அணியின் முன்னாள் லெக் ஸ்பின்னர்களான சிவராம கிருஷ்ணன், சாய்ராஜ் பகதுலே ஆகியோரை லெக் ஸ்டெம்புக்கு வெளியில் பந்துவீசச் சொல்லி பயிற்சி பெற்று வார்னின் சவாலை சந்திக்க தயாரானார். “லெக் ஸ்டம்ப் கார்டு” எடுத்து வார்னை எதிர்கொள்ள வியூகம் வகுத்தார்.

அந்தத் தொடருக்கு, முன்னதாக ஆஸ்திரேலிய அணி மும்பை அணியுடன் பயிற்சிப் போட்டியில் விளையாடியது. அதில் 4-வது வீரராக களமிறங்கிய சச்சின், வார்ன் பந்துவீச்சை வெளுத்துக் கட்டி, முதல் தர போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தைப் பூர்த்தி செய்தார். அவர் 192 பந்துகளில் 2 சிக்ஸர், 25 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 204 ரன்கள் குவித்தார். வார்ன் 16 ஓவர்களை வீசி 111 ரன்களை வாரி வழங்கினார். அந்தப் போட்டியில் மும்பை அணி அபார (விக்கெட் இழப்பின்றி) வெற்றி கண்டது.

அதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் சச்சின் ஆட்டமிழக்காமல் 155 ரன்கள் குவி்க்க, இந்தியா 179 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இந்த டெஸ்ட் போட்டி என்றுமே மறக்க முடியாத போட்டியாகும். எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த வார்னுக்கு இந்தத் தொடரில் வார்னிங் (எச்சரிக்கை) கொடுத்தார் சச்சின்.

ஷார்ஜாவில் சச்சின் புயல்

1998-ல் ஷார்ஜாவில் கோகோ கோலா கோப்பை போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்றன. இந்திய அணி, நியூஸிலாந்தைவிட சிறந்த ரன் ரேட்டை பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், ஆஸ்திரேலியாவுடன் மோதியது.

ஏப்ரல் 22-ம் தேதி நடைபெற்ற அந்த ஆட்டத்தில் இந்தியாவுக்கு 285 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா. பின்னர், சார்ஜாவில் வீசிய மணல் புயல் காரணமாக ஆட்டம் 46 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் இந்தியா தோற்றாலும், 237 ரன்கள் எடுத்தால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. இந்தியா அவ்வளவு ரன்களை எட்டாது என ஆஸ்திரேலியர்கள் நினைத்த வேளையில், பாலை வணம் புயலை விஞ்சும் வகையில் புயல் வேகத்தில் ஆடினார் சச்சின். டேமியன் பிளெமிங், காஸ்பரோவிச், ஷேன் வார்ன், டாம் மூடி, ஸ்டீவ் வாஹ் ஆகியோரின் பந்துவீச்சை வெளுத்து வங்கிய சச்சின், 131 பந்துகளில் 5 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் குவிக்க, இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 273 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. சச்சின் இந்தப் போட்டியிலும சதமடிக்க, இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. ஷார்ஜாவில் வீசிய மணல் புயல், சச்சினின் அதிரடி புயலில் காணாமல் போனது. இறுதிப் போட்டி அன்றுதான் சச்சினுக்கு பிறந்தநாள். அதனால் சார்ஜா கோப்பை சச்சினின் பிறந்த நாள் பரிசாகவும் அமைந்தது.

துக்கத்திலும் தூள் கிளப்பிய சச்சின்

1999-ல் உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றிருந்தார் சச்சின். அப்போது திடீரென சச்சினின் தந்தை ரமேஷ் டெண்டுல்கர் மாரடைப்பால் மரணத்தைத் தழுவ சச்சின் நாடு திரும்பினார். அப்போது, இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களிலும் தோல்வி கண்டது. அதனால் அடுத்த சுற்றான சூப்பர் சிக்ஸுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள கென்யாவுடனான அடுத்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தனது தந்தையின் இறுதிச் சடங்கை முடித்த அடுத்த நாளே இங்கிலாந்து சென்று அணியுடன் சேர்ந்தார் சச்சின். சோகத்தின் பிடியில் இருந்த சச்சின், கென்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரராக களமிறங்காமல் 4-வது வீரராக களமிறங்கினார். சதமும் கண்டார். அப்போது அவர் தனது தந்தையை நினைத்து வானத்தை நோக்கிப் பார்த்தபோது உலகமே மெய்சிலிர்த்துப் போனது. அவர் ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் குவிக்க, இந்திய 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. தனது தந்தை இறந்த துக்கம் தாளாமல் இருந்தபோதும்கூட, நாட்டுக்காக அதே அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆடி சச்சின் சதம் கண்டது நெஞ்சை விட்டு அகலாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x