Published : 20 Jun 2015 02:55 PM
Last Updated : 20 Jun 2015 02:55 PM
பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், மைதானத்தில் முறைதவறி நடந்தததற்காக கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது.
கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரின் முக்கிய நட்சத்திரமான பிரேசில் வீரர் நெய்மர் இந்த தொடரில் இனிவரும் போட்டிகளில் விளையாட தடைவித்து தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு அதிரடி முடிவெடுத்துள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் காலிறுதியின் போது நெய்மரின் உடல் உபாதைக்கு காரணமான கொலம்பிய அணி இம்முறை அவரை மேலும் ஒருமுறை தொடரில் பங்கேற்க முடியாமல் செய்துள்ளது.
தொடர்ந்து நெய்மரை வெறுப்பேற்றி, நீண்டகால அவரது கோபத்தை கிளறி அவரை மோதலில் ஈடுபடவைத்து இப்போது தடையையும் வாங்கிக் கொடுத்துள்ளது கொலம்பியா. முக்கியப் போட்டிகளில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். யுஏஃபா சாம்பியன் லீக், ஸ்பானிய லீக் என்று கோபாவேசப்படாமல் ஆடும் நெய்மர் பிரேசில் அணிக்காக ஆடும் போது பொறுப்பை உணர்ந்து நடந்து கொண்டிருக்கலாம், ஆனால் அவரது பொறுமையை சோதித்தது கொலம்பியா என்பதும் உண்மையே.
அன்று கொலம்பியா அணிக்கு எதிரான லீக் சுற்றில் நடுவர் இறுதி விசிலை ஊதிய பிறகு நெய்மர் பந்தை கொலம்பியாவின் பாப்லோ அர்மீரோவிடம் ஆக்ரோஷமாக அடித்துள்ளார். மேலும் அவர் இன்னொரு வீரரை தலையால் முட்டியதாகவும் கூறப்படுகிறது, இந்நிலையில் மோதலில் ஈடுபட்ட கொலம்பியாவின் கார்லோஸ் பாக்காவுக்கும் 2 போட்டிகள் தடை விதிக்கப்பட்டது. இவர் நெய்மரை பின்னாலிலிருந்து இடித்தார்.
நாளை (ஞாயிறு) வெனிசூலாவுக்கு எதிரான போட்டியில் இயல்பாகவே நெய்மர் பங்கேற்க முடியாத நிலை இருந்தது, காரணம் அவர் ஏற்கெனவே 2 மஞ்சள் அட்டைகள் பெற்றுவிட்டார்.
பிரேசில் அணி நாக் அவுட் சுற்றுக்குச் சென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினால் நெய்மரின் தடை முடிவுக்கு வரும் இல்லயெனில் அடுத்த கோப்பா அமெரிக்கா வரை இந்தத் தடை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது 4 போட்டிகள் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரேசில் உள்ள பிரிவு சி-யில் கொலம்பியா, வெனிசூலா, பிரேசில் என்று அனைத்து அணிகளும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கிறது. மூன்று பிரிவுகளிலிருந்து முறையே 2 டாப் அணிகள் காலிறுதிக்கு முன்னேற, 3-ம் இடம் பிடிக்கும் இரண்டு சிறந்த அணிகளும் காலிறுதிக்கு முன்னேறும்.
நெய்மருக்கு பதிலாக ராபின்ஹோ அவரது இடத்தில் விளையாடலாம் என்று தெரிகிறது. சரி இது பற்றி நெய்மர் என்ன நினைக்கிறார்? “அனைத்தும் பலவீனமான நடுவரால் வந்த விளைவு” என்கிறார் நெய்மர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT