Published : 06 Mar 2015 02:14 PM
Last Updated : 06 Mar 2015 02:14 PM
பெர்த்தில் நடைபெற்ற உலகக்கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் கடைசி வரை போராடிய மே.இ.தீவுகள் அணியை இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரின் முக்கியத்துவம் வாய்ந்த அதிரடி அரைசதம் மூலம் 182 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி சில சமயம் நல்ல பந்துவீச்சுக்கும், சில சமயம் அனாவசியமான ஷாட் தேர்வுலும் துரத்தலை சிக்கலாக்கிக் கொண்டது. ஆனால் கடைசியில் தோனி, அஸ்வின் நிதானிக்க இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சற்றே போராடி வெற்றி பெற்றது.
40-வது ஓவர் முதல் பந்தை சாமுயெல்ஸ் வீச தேர்ட் மேன் திசையில் தோனி அதை பவுண்டரி அடிக்க இந்தியா 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தோனி 56 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றி தேடித் தந்தார். மறுமுனையில் எந்த விதமான அனாவசிய முயற்சியையும் மேற்கொள்ளாமல், பவுண்டரியே இல்லாமல் 16 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அஸ்வினும், தோனியும் இணைந்து வெற்றிக்கூட்டணியாக 9.4 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தனர்.
இந்த வெற்றி மூலம் இந்திய அணியின் காலிறுதி வாய்ப்பு உறுதியாகியுள்ளது. பி-பிரிவில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 8-வது போட்டியை வென்றுள்ளது. இதற்கு முன்னதாக 2003 உலகக்கோப்பையிலும் இந்தியா தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்றது. அந்தச் சாதனை தற்போது சமன் செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக அயர்லாந்து அணியுடன் மார்ச் 10ஆம் தேதி நியூசிலாந்தின் ஹேமில்டனில் இந்திய அணி மோதுகிறது.
துரத்தலை சரியாகத் திட்டமிடாத இந்திய அணி, ஓரளவுக்கு பிட்சின் தன்மையை புரிந்து கொள்ளாமல் ஆடியது போல் தெரிகிறது. கோலி ஆட்டமிழந்த பிறகு இந்தியாவுக்கு பதட்டம் அதிகரித்தது. மே.இ.தீவுகளும் அப்போது நன்றாக வீசிவந்தனர்.
ஆட்ட நாயகனாக மொகமது ஷமி தேர்வு
தேவையில்லாத ஷாட்டில் ஜடேஜா அவுட்
ரெய்னா தேவையில்லாமல் வெளியே சென்ற பந்தை கட் செய்ய முயன்று அவுட் ஆன பிறகு தோனி, ஜடேஜா இணைந்து 6-வது விக்கெட்டுக்காக 40 பந்துகள் நிதானித்து 27 ரன்களைச் சேர்த்தனர்.
இந்நிலையில் 30-வது ஓவரை ரசல் வீச வந்தார். 13 ரன்களில் இருந்த ஜடேஜா, நன்கு உயரம் எழும்பிய, விட்டால் வைடு ஆகியிருக்கக் கூடிய பவுன்சரை ஹூக் ஆடினார். பந்து நேராக டீப் ஸ்கொயர் லெக்கில் சாமுயெல்ஸ் கையில் விழுந்த்து. அவர் கையிலிருந்து பந்து எகிறியது பிடித்தார் மீண்டும் வழுக்கியது கடைசியில் பிடித்தே விட்டார். இந்தியா 6-வது விக்கெட்டை இழந்தது.
அஸ்வின் களமிறங்கியுள்ளார். தோனி ஒரு முனையில் 16 ரன்களுடன் ஆடி வருகிறார். இந்தியா 30 ஓவர்களில் 136/6.
ரெய்னாவும் அவுட்: என்ன செய்யப்போகிறது இந்திய அணி?
விராட் கோலி, ரஹானே அவுட் ஆன பிறகு 78/4 என்ற நிலையிலிருந்து தோனி, ரெய்னா இணைந்து மேலும் 29 ரன்களைச் சேர்த்தனர் ஸ்கோர் 107 ரன்களை எட்டிய போது 22 ரன்கள் எடுத்திருந்த ரெய்னா, டிவைன் ஸ்மித் வீசிய மற்றொரு ஷாட் பிட்ச் பந்தை கட் செய்ய முயன்றார் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ராம்தின்னிடம் கேட்ச் ஆனது. நல்ல அடிக்க வேண்டிய பந்துதான், அல்லது ஆடாமல் விட்டும் இருக்கலாம், ஆனால் ரெய்னாவின் முடிவு அவருக்கு எதிராகப் போய்விட்டது.
அதன் பிறகும் தோனி ஒரு ஷாட் பிட்ச் பந்தை ஹூக் செய்தார் பந்து மட்டையின் மேல் விளிம்பில் பட்டு கீப்பர் தலைக்கு மேல் பவுண்டரி ஆனது. அவர் தற்போது 10 ரன்களுடனும் ஜடேஜா 1 ரன்னுடனும் ஆடி வருகின்றனர்.
இந்தியா 25 ஓவர்கள் முடிவில் 114/5
கோலி 33 ரன்களிலும் ரஹானே 14 ரன்களிலும் அவுட்
183 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிவரும் இந்தியா சற்று முன் மிக முக்கியமான விராட் கோலி விக்கெட்டை இழந்தது. 36 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் எந்த வித சிரமும் இல்லாமல் அருமையாக ஆடிவந்த விராட் கோலி, ஆந்த்ரே ரசல் வீசிய துல்லியமான ஷாட் பிட்ச் பந்தை ஆஃப் ஸ்டம்பிலிருந்து புல் ஆட முயன்றார். பந்து சற்று அதிகம் எழும்பியது, கோலியால் கட்டுப்படுத்த முடியவில்லை, லாங் லெக் திசையில் சாமுயெல்ஸிடம் கேட்ச் ஆனது.
அடுத்ததாக 14 ரன்கள் எடுத்திருந்த ரஹானே, ரோச் வீசிய பந்தை தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்தார். பந்து ராம்தின்னிடம் சென்றது. கேட்ச் கேட்டனர் அவுட் கொடுத்தார் நடுவர். உடனேயே ரிவியூ செய்தார் ரஹானே. பந்து மட்டையில் பட்டதா, அல்லது பேட் கால்காப்பில் பட்டதா என்பதெல்லாம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவுட் உறுதி செய்யப்பட்டது. இதனால் இந்தியா 19-வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் என்று தடுமாறி வருகிறது.
1983 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 183 ரன்கள் எடுத்தது. இன்று மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்தியாவின் இலக்கு 183 ரன்கள். அன்று இலக்கைத் துரத்திய மே.இ.தீவுகள் அணியின் நட்சத்திர அதிரடி வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் 33 ரன்களில் மதன்லால் பந்தை புல் ஆடி கபில்தேவின் கேட்சிற்கு வெளியேறினார். ஆட்டம் மொத்தமாக மாறிப்போனது.
இன்று இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மென் விராட் கோலி அதே 33 ரன்களில் கிட்டத்தட்ட விவ் ரிச்சர்ட்ஸ் போலவே சரியாக சிக்காத புல் ஷாட்டில் விராட் கோலி ஆட்டமிழக்கிறார்.... மே.இ. தீவுகள் அப்போது 57/3, இப்போது இந்தியா 63/3. அதன் பிறகு அன்று கோம்ஸ் அவுட் ஆனார். இங்கு ரஹானே அவுட் ஆகியுள்ளார்.
தற்போது இந்தியா 19-வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்துள்ளது. ரெய்னா 6 ரன்களுடனும் தோனி ரன் எடுக்காமலும் ஆடி வருகின்றனர்.
மோசமான துவக்கம்
பெர்த்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் பி-பிரிவு ஆட்டத்தில் மே.இ.தீவுகளின் 182 ரன்களை எதிர்த்து ஆடி வரும் இந்தியா சற்று முன் தொடக்க வீரர்களான ஷிகர் தவன் மற்றும் ரோஹித் சர்மா விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.
ஆட்டத்தின் 5-வது ஓவரை ஜெரோம் டெய்லர் ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து வீச லேசாக உள்ளே வந்த பந்து சற்றே வெளியே ஸ்விங் ஆக தவன் அதை தொட்டார். டேரன் சமி கேட்சை தன் வலது புறத்தில் 2-வது ஸ்லிப்பில் பிடித்தார். இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது.
டெய்லர் பந்தில் பாயிண்டில் அழகான முதல் பவுண்டரியை அடித்த தவன் 14 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
சற்று முன் 7-வது ஓவரில் 7 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, டெய்லர் வீசிய அருமையான அவுட் ஸ்விங்கரை டிரைவ் ஆட முயன்று ராம்தின்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்தியா 7.4 ஓவர்களில் 2 விக். இழப்புக்கு 25 ரன்கள். ரஹானே, கோலி ஆடி வருகின்றனர்.
உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி பின்னர் மீண்ட மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் ஹோல்டரின் உத்வேக அரைசதத்தால், இந்தியாவுக்கு 183 ரன்கள் என்ற ஓரளவு மரியாதைக்குரிய வெற்றி இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.
பெர்த்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்கள் சேர்த்தது.
ஹோல்டர் விளாசல்: ரோஹித் சர்மா விட்ட கேட்ச்
35-வது ஓவரில் 120/7 என்று இருந்த மே.இ.தீவுகள் அணி ஜேசன் ஹோல்டரின் அதிரடி ஆட்டத்தினால் பவர் பிளேயில் 42 ரன்களை விளாசியது. இத்தனைக்கும் 36-வது ஓவரில் டேரன் சமி விக்கெட்டை இழந்தது. ஆனால் அதன் பிறகு ஹோல்டர் இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று ஆடத் தொடங்கி முதலில் ஜடேஜாவை சிக்ஸ் அடித்தார்.
பிறகு ஷமி பந்தில் ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸ். அஸ்வினைக் கொண்டு வந்தார் தோனி, அதுவும் பயனளிக்கவில்லை, ஹோல்டர் இறங்கி வந்து எக்ஸ்ட்ரா கவரில் அற்புதமாக ஒரு சிக்ஸ் அடித்தார். மீண்டும் யாதவ் பந்தில் ஒரு பவுண்டரி. பவர் பிளே முடிந்த போது ஸ்கோர் 162 ஆனது. 41-வது ஓவரில் டெய்லர் கொடுத்த உயரமான கேட்ச் ஒன்றை ரோஹித் சர்மா ஷாட் மிட்விக்கெட்டில் நழுவ விட்டார். மிகவும் எளிதான கேட்ச்.
ஆனால் கடைசியில் யாதவ், டெய்லரை பவுன்சர் வீசி தானே கேட்ச் பிடித்து வீழ்த்தினார் டெய்லர் 11 ரன்களில் அவுட். ஜேசன் ஹோல்டர் 57 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 51 ரன்களில் இருக்க, கிமார் ரோச் களமிறங்கினார்.
முதலில் டேரன் சமி, ஹோல்டர் 85/7-லிருந்து 124 ரன்களுக்கு ஸ்கோரை உயர்த்தினர். ஜடேஜா கேட்சை விட்டார் சமிக்கு. பிறகு 124/8 இலிருந்து 175 ரன்களுக்கு டெய்லரும், ஹோல்டரும் ஸ்கோரை உயர்த்தினர் ஹோல்டர்தான் இதில் நாயகன். 7 ஓவர்களில் 51 ரன்களை 9-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.
முதல் 3 போட்டிகளில் ஒரேயொரு கேட்சை மட்டும் கோட்டை விட்டிருந்த இந்திய அணி இந்தப் போட்டியில் மட்டும் ஏகப்பட்ட கேட்ச்களை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.
அன்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ் ஒன்றுமில்லாத நிலையில் ஆடிய இன்னிங்ஸ். ஆனால் இன்று ஹோல்டர் ஆடிய இன்னிங்ஸ் முக்கியத்துவம் பெறவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.
கடைசியாக 64 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிச்கர்கள் அடித்த ஹோல்டர் 45-வது ஓவரின் 2வது பந்தில் ஜடேஜாவிடம் அவுட் ஆனார். லாங் ஆஃபில் கோலி கேட்ச் பிடித்தார். மே.இ.தீவுகள் 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அவர் 57 ரன்களில் கடைசி விக்கெட்டாக வெளியேறினார்.
இந்தியத் தரப்பில் மொகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், யாதவ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற அஸ்வின், மோஹித் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஒட்டுமொதமாக இந்திய பவுலர்கள் ஒருவரும் 4.4 ரன்கள் என்ற சராசரியைத் தாண்டவில்லை. இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 183 ரன்கள்.
கிறிஸ் கெயிலுக்கு நெருக்கடி கொடுத்த பந்து வீச்சு
பெர்த்தில் நடைபெறும் இந்திய-மே.இ.தீவுகளுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் மே.இ.தீவுகளின் அபாய வீரர் கிறிஸ் கெயிலுக்கு இந்திய வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்து கடைசியில் அதற்கு சரணடைந்தார் கெயில்.
மொகமது ஷமி அபாரமான வேகத்துடனும் துல்லியத்துடனும் வீசினார். முதல் ஓவரிலேயே கிறிஸ் கெயில் மட்டையின் விளிம்பை தொட்டும் தொடாமலும் அருமையான பந்து ஒன்று தோனியிடம் சென்றது. லேசான முறையீடு, பட்டது போல் தெரிந்தது. படாதது போலும் தெரிந்தது. நாட் அவுட்.
உமேஷ் யாதவ்வும் நல்ல வேகத்தில் கிறிஸ் கெயிலுக்கு அருமையாக வீசினார். பெரிதாக கால்களை நகர்த்தி ஆடும் வீரர் அல்ல கிறிஸ் கெயில் இதனால் உமேஷ் யாதவ் மற்றும் ஷமியின் ஸ்விங்குக்கு அவர் கடும் நெருக்கடிக்கு உள்ளானார்.
இதற்கிடையே தொடக்க வீரர் டிவைன் ஸ்மித், கட் செய்ய அவ்வளவாக இடமில்லாதா பந்தை கட் செய்ய முயன்று ஷமி பந்தில் தோனியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.
ஒன்றும் செய்யமுடியாத கிறிஸ் கெயில், மொகமது ஷமியை உடனடியாக மேலேறி வந்து ஒரு சுழற்று சுழற்றினார் பந்து மட்டையைக் கடந்து சென்றது. இந்நிலையில் ஒரு பந்து ஃபுல் லெந்த்தில் விழ அதனை அடித்தார் கெயில் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு தேர்ட் மேனில் கேட்சாகச் சென்றது விரைவாகச் சென்றது ஓடி வந்து அருமையான முயற்சி ஒன்றை மேற்கொண்டார் உமேஷ் யாதவ் முடியவில்லை.
நெருக்கடி அதிகரிக்க, 8-வது ஓவரில் யாதவ் வீசிய 2-வது பந்து வேகம் கூட, பந்து எழும்பியது, புல் ஆட போதிய இடமில்லை, ஆனாலும் ஆடினார் கிறிஸ் கெயில் பந்து சரியாக சிக்காமல் மிட் ஆனில் மொகமது ஷமி முன்னால் வர அவருக்கும் முன்னால் பந்து விழுந்தது. ஆனால் மறுமுனையில் சாமுயெல்ஸ் விறுவிறுவென ஒரு சிங்கிளுக்கு ஓட கிறிஸ் கெயில் தனது ஷாட் கேட்ச் ஆகிவிடுமோ என்று பார்த்துக் கொண்டிருந்தார்.
கோபமுற்ற கெயில்
சாமுயெல்ஸால் திரும்ப முடியவில்லை. ஒரு நேரத்தில் கெயில், சாமுயெல்ஸ் இருவரும் பேட்டிங் முனையில் இருந்தனர். மோஹித் த்ரோ செய்த பந்தை கோலி எடுத்து வந்து ரன்னர் முனையில் கில்லியைத் தட்டிவிட்டார். சாமுயெல்ஸ் அவுட். இதனால் கெயில் கடும் கோபமுற்றார்.
அதன் பிறகு யாதவ்வை ஒரு பவுண்டரி, அதே ஓவரில் மிட்விக்கெட்டில் ஒரு கெயில் ரக சிக்ஸ். மீண்டும் ஷமி பந்தில் ஒரு பவுண்டரி. தோனி பீல்டை பரவலாக்கினார்.
அதே ஓவரில் வேகமாக வந்த ஷாட் பிட்ச் பந்தை புல் ஆடினார். கட்டுப்படுத்த முடியவில்லை டீப் மிட்விக்கெட்டில் மோஹித் சர்மா கேட்சை நிதானமாகப் பிடித்தார். 21 ரன்களில் கெயில் அவுட்.
தினேஷ் ராம்தின் களமிறங்கி யாதவ் பந்தை மட்டையை ஏதோ ஒரு கோணத்தில் வைத்து கவர் திசையில் ஆட முயல பந்து உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது.
மே.இ.தீவுகளின் நம்பிக்கை சிம்மன்ஸ், டேரன் சாமி மட்டுமே. இந்நிலையில் சிம்மன்ஸ் 9 ரன்கள் எடுத்து மோஹித் வீசிய ஷாட் பிட்ச் பந்தை சரியான நிலையில் இல்லாமல் ஹூக் செய்ய லாங் லெக்கில் உமேஷுக்கு எளிதான கேட்ச்.
கார்ட்டர் ஓரளவுக்கு நின்று ஆடி 3 பவுண்டரிகளுடன் 43 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆடிவந்த நிலையில் அஸ்வின் பந்தை ஸ்வீப் செய்ய முயன்றார். பந்து கொஞ்சம் கூடுதல் பவுன்ஸ் ஆனதால், டாப் எட்ஜ் எடுத்து ஷமியிடம் கேட்ச் ஆனது. நன்றாகப் பிடித்தார் ஷமி அந்தக் கேட்சை.
ஆந்த்ரே ரசல் இறங்கி மோஹித் சர்மா பந்தில் ஒரு காட்டடி லெக் திசை சிக்ஸ் அடித்தார்.
டேரன் சமி, மோஹித் சர்மா பந்தை புல் ஆட முயன்றார். படுமோசமான ஷாட், சரியாகச் சிக்காமல் பாயிண்டில் ஜடேஜாவிடம் உயரமாகச் சென்றது அவர் அதனை கோட்டைவிட்டார்.
ஆனால், விட்ட கேட்சிற்கு பதிலாக ஆந்த்ரே ரசல் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். டேரம் சமி சற்று முன் 26 ரன்களில் மொகமது ஷமி வீசிய ஆட்டத்தின் 36-வது ஓவரில் ஆட்டமிழந்தார். ஷமி, வீசும் கை விக்கெட்டிலிருந்து விலகி வர சற்றே தள்ளிப்போய் வீசினார். ஒதுங்கிக் கொண்டு ஆட நினைத்தார் சமி பந்து மட்டையில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆனது. மே.இ.தீவுகள் 125/8.
இதுவரை…
உலகக் கோப்பையில் இதுவரை இவ்விரு அணிகளும் 8 முறை மோதியுள்ளன. அதில் இந்தியா 4 முறையும், மேற்கிந்தியத் தீவுகள் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1992-க்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெறவில்லை. கடைசி இரு உலகக் கோப்பை ஆட்டங்களில் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில் 7-ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT