Published : 08 Dec 2013 12:00 AM
Last Updated : 08 Dec 2013 12:00 AM
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்தின் வெற்றிக்கு 33 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் திடீரென கனமழை பெய்ததால் கடைசி செசன் கைவிடப்பட்டது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது. நியூஸிலாந்தின் வெற்றி மழையில் கரைந்தது. பாலோ ஆன் பெற்ற மேற்கிந்தியத் தீவுகளை வருண பகவான் காப்பாற்றினார்.
நியூஸிலாந்தின் டுனெடின் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 153.1 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 609 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் 62.1 ஓவர்களில் 213 ரன்களில் சுருண்டு பாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் டேரன் பிராவோ இரட்டைச் சதமடிக்க, 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 139 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் குவித்திருந்தது. பிராவோ 210, டேரன் சமி 44 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
507 ரன்களில் ஆல்அவுட்
கடைசி நாளான சனிக்கிழமை பிராவோ 218 ரன்களில் (416 பந்துகளில் 31 பவுண்டரிகளுடன்) டிரென்ட் போல்ட் பந்துவீச்சில் போல்டு ஆனார். கடைசி விக்கெட்டாக சமி 80 ரன்களில் ஆட்டமிழக்க, மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாகவே மேற்கிந்தியத் தீவுகளின் இன்னிங்ஸ் 507 ரன்களில் (162.1 ஓவர்களில்) முடிவுக்கு வந்தது.
மழையால் டிரா
இதையடுத்து 112 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணியில் பீட்டர் ஃபுல்டான் 3, ரெட்மான்ட் 6, ரூதர்ஃபோர்ட் 20, பிரென்டன் மெக்கல்லம் 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணி 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அப்போது டெய்லர் 16, கோரே ஆண்டர்சன் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
தொடர்ந்து மழை பெய்ததைத் தொடர்ந்து கடைசி செசன் கைவிடப்பட்டது. இதனால் நூலிழையில் நியூஸிலாந்தின் வெற்றி பறிபோனது. இரட்டைச் சதமடித்த நியூஸிலாந்தின் ராஸ் டெய்லர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 11-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.
போட்டிக்குப் பிறகு பேசிய நியூஸிலாந்து கேப்டன் பிரென்டன் மெக்கல்லம், “மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம் என நம்புகிறேன். 33 ரன்கள் எடுக்க வேண்டிய நேரத்தில் மழையால் வெற்றி நழுவியது ஏமாற்றமளிக்கிறது” என்றார்.
கடந்த ஆண்டு நவம்பரில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்ட நியூஸிலாந்து, அதன்பிறகு இதுவரை வெற்றியை சுவைக்கவில்லை. மெக்கல்லம் கேப்டனாக பதவியேற்ற பிறகு நியூஸிலாந்து 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால் அதில் ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை.
மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் டேரன் சமி கூறுகையில், “இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் தோல்வி கண்ட நிலையில், இப்போது டிரா செய்திருப்பது எங்கள் அணிக்கு கிடைத்த தார்மீக வெற்றியாகும். இந்த டிரா எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்றார்.
நியூஸியின் துரதிருஷ்டம்
இந்தப் போட்டியோடு சேர்த்து நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 600 ரன்களுக்கு மேல் குவித்த 4 போட்டிகளுமே டிராவில்தான் முடிந்துள்ளன. அதேநேரத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இதுவரை 29 முறை பாலோ ஆன் பெற்ற போட்டிகளில் 7 முறை தோல்வியில் இருந்து தப்பியுள்ளது. -பிடிஐ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT