Published : 14 Jul 2016 03:25 PM
Last Updated : 14 Jul 2016 03:25 PM
மந்தமான மே.இ.தீவுகள் பிட்சில் சோர்வூட்டக்கூடிய அளவுக்கு பொறுமை இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அதனால் தன் பந்து வீச்சும் சோர்வூட்டக்கூடிய அளவுக்கு நிதானப்போக்கையே கடைபிடிக்கும் என்று கூறுகிறார் அஸ்வின்.
பிசிசிஐ.டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடுமையான உஷ்ணம், மந்தமான பிட்ச்கள்... நிச்சயம் மே.இ.தீவுகள் ஒரு சவால்தான். வார்ம் அப் மேட்சில் பார்த்த போது பிட்சில் பந்துகள் ஆடி அசைந்து நிதானமாக வருவதைத்தான் பார்த்தேன். எனவே நான் சோர்வூட்டக்கூடிய அளவுக்கு பொறுமையுடன் நாள் முழுதும் வீச வேண்டும்.
பிட்ச் ஸ்பின் எடுக்க ஆரம்பித்தால் நாங்கள் எங்கள் இயல்பு ஆக்ரோஷத்துக்கு திரும்ப முடியும் அதுவரையில் பொறுமையே கை கொடுக்கும், இதனால் சோர்வு ஏற்பட்டாலும் கவலையில்லை. மேலும் அது தவிர்க்க முடியாத ஒன்று.
அன்று அமித் மிஸ்ரா 15-16 ஓவர்கள் வீசி விக்கெட்டுகள் விழவில்லை, ஆனால் ஒரு பிரேக் த்ரூ கிடைத்தது சீரான இடைவெளியில் விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். எனவே முதல் 2 நாள் அல்லது 3 நாட்களுக்குக் கூட ஸ்பின்னர்களுக்கு இங்கு வாய்ப்பிருக்காது போல்தான் தெரிகிறது. ஆகவே சோர்வூட்டக்கூடிய வகையில் லைன் மற்றும் லெந்த்தை துல்லியமாகக் கடைபிடித்து பிளைட் ஆகியவற்றைச் செய்து பேட்ஸ்மென் தவறு செய்யும் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியதுதான்.
வலையில் அனில் கும்ப்ளே பந்து வீசுவதை பார்த்தேன் அது மிக்க பயனளித்தது. அவர் அணி வீரர்களிடையே ஒரு உன்னிப்பான கவனத்தை உருவாக்கியுள்ளார். வலைப்பயிற்சிகளில் மிகச்சிறந்த கட்டுக்கோப்பு உள்ளது. சரியான நேரத்தில் வலைப்பயிற்சிக்கு பேட்ஸ்மென்கள் வருகின்றனர். இது சில காலங்களாக நடைபெறாத ஒன்று.
அனில் கும்ப்ளே ஏற்கெனவே வலையில் பந்துவீசத் தொடங்கி விட்டார், நான் குறிப்புகள் எடுத்து வருகிறேன். இதுவரை எனக்கு அவர் பெரிய அளவில் தன்னம்பிக்கையையும் பொறுப்பையும் அளித்துள்ளார். அதாவது நான் என் திறமைகளை சூழ்நிலைகளைப் பார்க்காமல், தயங்காமல் வெளிப்படுத்துவதற்கான ஊக்கமாகும் இது, இத்தகைய தன்மை அவரிடத்தில் நாம் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. நாங்கள் இருவரும் நிறைய பேசினோம், என்னிடமிருந்து நிறைய எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
பேட்டிங்கில் பங்களிப்பு செய்வதற்கும் கவனமாக பயிற்சி செய்து வருகிறேன். பேட்டிங்கில் வெறும் ரன்கள் எடுப்பது மட்டுமல்ல, நல்ல திண்மையான பேட்ஸ்மெனாக பங்களிப்பு செய்வது பற்றியும் பயிற்சியாளரிடம் சில இலக்குகள் வைத்துள்ளேன்.
முதல் கட்டமாக விக்கெட்டை தூக்கி எறிந்து விடக்கூடாது, பிறகு ரன்குவிப்பில் ஈடுபடுதல் என்ற நடைமுறை சார்ந்ததாகும் அது. சஞ்சய் பாங்கர் என்னுடன் நாள் முழுதும் பணியாற்றி வருகிறார்.
இவ்வாறு கூறினார் அஸ்வின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT