Published : 20 Apr 2014 01:08 AM
Last Updated : 20 Apr 2014 01:08 AM

கார்த்திக், டுமினி அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் லீக் சுற்றின் 6-வது போட்டியில், டெல்லி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



டாஸை இழந்த டெல்லி அணி முதலில் பவுலிங் செய்ய நேரிட்டது. முதல் ஓவரிலேயே முன்னணி வீரர் காலிஸ் விக்கெட்டை முகமது சமி வீழ்த்தினார். மற்றொரு துவக்க வீரர் காம்பிரும் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்த ஓவரிலேயே ஆட்டமிழந்தார். களத்தில் இருந்த பாண்டே மற்றும் உத்தப்பா ஜோடி, கொல்கத்தாவை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தது.

மெதுவாக கொல்கத்தா அணி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த நிலையில் பாண்டே 42 பந்துகளில் 48 ரன்களுக்கு ஆட்டமிழ்ந்தார். தொடர்ந்து ஷகிப் உல் ஹசன், உத்தப்பா இணை 36 பந்துகளில் 57 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தது. உத்தப்பா 55 ரன்களுக்கு வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை கொல்கத்தா இழந்திருந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷகிப் உல் ஹசன் 22 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்திருந்தார்.

தொடர்ந்த டெல்லி அணி, தனது இன்னிங்ஸின் 5-வது பந்திலேயே துவக்க வீரர் முரளி விஜய்யை இழந்தது. பாண்டே அடித்த டைரக்ட் ஹிட்டினால் விஜய் ரன் அவுட்டாகி வெளியேறினார். வேகமாக ரன் சேர்க்க முற்பட்ட அகர்வல் 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த டைலரும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் தந்தார்.

பின்பு டுமினியுடன் கைகோர்த்த தினேஷ் கார்த்திக் ஆட்டத்தின் போக்கை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார். ஒரு ஓவருக்கு 8 ரன்களுக்கு மெல் தேவைப்பட்ட நிலையில் 36 பந்துகளில் அரை சதம் கடந்தார் கார்த்திக். 56 ரன்களுக்கு அவர் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் இருந்த டுமினி தனது அதிரடியைத் தொடர்ந்தார். மார்கெல் வீசிய ஆட்டத்தின் 18-வது ஓவர், ஆட்டத்தின் முடிவை டெல்லிக்குச் சாதகமாகத் திருப்பியது. அந்த ஓவரில், 2 சிக்ஸர்கள் 1 பவுண்டரி உட்பட 21 ரன்களைக் டுமினி குவித்தார்.

கடைசி ஓவரில் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட ஒரு சிக்ஸர் அடித்து டுமினி வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் 35 பந்துகளில் தனது அரை சதத்தையும் கடந்தார். முதல் ஆட்டத்தில் பெங்களூர் அணியிடம் தோல்வியுற்ற டெல்லி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா இதில் தோல்வியடைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x