Published : 20 Jun 2017 01:37 PM
Last Updated : 20 Jun 2017 01:37 PM

அஸ்வின் ஜடேஜாவுக்குப் பதிலாக அக்சர் படேல், அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பளித்திருக்கலாம்

நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக இறுதியில் தோற்றதற்கு பிரதான காரணம் அஸ்வின், ஜடேஜா ஆகியோரின் பந்து வீச்சு என்று பலராலும் கூறப்பட்டு வருகிறது.

இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமலில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இருவரும் அந்த அணியின் ரன்களை வறண்டு போகச் செய்தனர் என்றாலும் மொத்தமாக இந்தத் தொடரில் ரன்களை வாரி வழங்கி வந்துள்ளனர்.

முதலில் இலங்கை அணி 320+ இலக்கை வெற்றிகரமாக விரட்டிய போது அஸ்வின் இல்லை, ஜடேஜாதான் இருந்தார். அன்று பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அஸ்வின், ஜடேஜா இருவரும் 18 ஓவர்களில் 137 ரன்களை வாரி வழங்கினர்.

இந்தத் தொடர் முழுதுமே ஸ்பின்னர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்ற வாதம் வைக்கப்பட்டாலும் அஸ்வின், ஜடேஜா ஆகியோரது அனுபவம் மற்றும் திறமை மற்ற ஸ்பின்னர்களை ஒப்பிடும் போது கூடுதலே. மேலும் இதற்கு முந்தைய உலக தொடர்களில் இருவரும் நன்றாகவே வீசி வந்துள்ளனர்.

குறிப்பாக ஜடேஜா குறுகிய வடிவப் போட்டிகளுக்கான ஒரு சிறப்பு வாய்ந்த ஆல்ரவுண்டர் என்ற அளவிலேயே ஒருநாள் போட்டிகளுக்குக் கொண்டு வரப்பட்டார்.

ஆனால் 2013 சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து இருவரது தரவரிசை மாற்றங்களை ஆராய்ந்தால் நமக்கு பகீர் என்று தான் இருக்கும். 2013 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு அஸ்வின் ஒருநாள் போட்டித் தரவரிசையில் 8-ம் இடத்திலிருந்து 30-ம் இடத்துக்கு சரேலென கீழிறங்கியுள்ளார். மாறாக டெஸ்ட் போட்டிகளில் 2-ம் இடத்துக்கு முன்னேறினார். ஜடேஜா ஒருநாள் போட்டிகளில் 2013 சாம்பியன்ஸ் டிராபியிலிருந்து தரவரிசையில் 3-ம் இடத்திலிருந்து 31-ம் இடத்துக்கு கடும் சரிவு கண்டுள்ளார். மாறாக டெஸ்ட் போட்டிகளில் 24--ம் நிலையிலிருந்து 1-ம் நிலைக்கு உயர்ந்துள்ளார்.

இருவரது டெஸ்ட் போட்டி முன்னேற்றத்துக்கு சாதகமான இந்திய பிட்ச்களே காரணம். சுமார் 4-5 டெஸ்ட் தொடர்களை இந்தியாவிலேயே ஆடுமாறு ஐசிசி கிரிக்கெட் அட்டவணை பிசிசிஐ-க்கு சாதகம் செய்ததும் ஒரு காரணம்.

இன்னொரு காரணம் வரிசையாக டெஸ்ட் போட்டிகள் இருந்ததால் இருவருக்குமே முக்கியமான ஒருநாள் போட்டித் தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டது, இதனால் மேட்ச் பிராக்டீஸ் இருவருக்கும் இல்லாமல் போனது.

2015 உலகக்கோப்பைக்கும் 2017 சாம்பியன்ஸ் டிராபிக்கும் இடையே அஸ்வின் 9 ஒருநாள் போட்டிகளிலேயே ஆடியுள்ளார். ஜடேஜா 10 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். மாறாக ஒப்பீட்டளவில் 2011 உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி இடையே இருவரும் 30 ஒருநாள் போட்டிகள் பக்கம் ஆடியிருந்தனர் இதனால் 2013 சாம்பியன்ஸ் டிராபியில் இருவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. அதிக விக்கெட்டுகள் அட்டவணையில் ஜடேஜா இருந்தார். சிக்கன விகிதம் ஓவருக்கு 4 ரன்களுக்கும் குறைவே.

அதே போல் 2013-2015 இடையேயும் ஜடேஜா, அஸ்வின் இருவரும் ஒருநாள் போட்டிகளில் நிறைய ஆடினர். ஆனால் 2015 உலகக்கோப்பைக்கும் 2017 சாம்பியன்ஸ் டிராபிக்கும் இடையே சொற்ப போட்டிகளிலேயே ஆடியுள்ளனர். ஜடேஜா 2014-க்குப் பிறகு ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையே எடுக்கவில்லை என்பதே புள்ளிவிவரங்கள் நமக்குக் காட்டும் உண்மை.

இந்நிலையில் 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் நன்றாக வீசிய ஸ்பின்னர்கள் என்றால் அது அக்சர் படேல் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோரே.

அமித் மிஸ்ரா 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு 9 ஒருநாள் போட்டிகளில் 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சிக்கனவிகிதம் ஓவருக்கு 5 ரன்களுக்கு சற்று அதிகம்.

அக்சர் படேல் 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு 17 ஒருநாள் போட்டிகளில் ஆடி 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சிக்கன விகிதம் 5 ரன்களுக்கும் குறைவு.

மேலும் 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் லெக்ஸ்பின்னர்களே உள்ளனர், இங்கிலாந்தின் அடில் ரஷீத், தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர், ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் ஆகியோர் இந்தப் பட்டியலில் உள்ளனர். இந்திய அணியில் இடம்பெற அமித் மிஸ்ரா அனைத்துத் தகுதியைக் கொண்டிருந்தும் இடம்பெறாமல் போனது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

எனவே, உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் குழுவிலிருந்து ராஜினாமா செய்த ராமச் சந்திர குஹா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல் இந்திய அணியின் நோய்க்கூறு அதன் ‘சூப்பர்ஸ்டார் கலாச்சாரம்’ என்பதாகக் கூட இருக்கலாம்.

பெரிய பெரிய பெயர்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறதே தவிர உண்மையில் ஒரு தொடருக்கு முன்னால் நன்றாக ஆடியவர்களுக்கு பெரிய தொடர்களில் வாய்ப்பளிக்கப்படுவதில்லை என்பதே இங்கு விவாதத்துக்குரியது.

ராமச்சந்திர குஹா கூறும் இந்த சூப்பர்ஸ்டார் கலாச்சாரத்துக்கு இன்னொரு உதாரணம், நாம் ஐபிஎல் தொடரிலிருந்தே பார்த்து வருவதுதான். ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி நீக்கப்பட்டு ஆஸ்திரேலியாவின் ஸ்மித் நியமிக்கப்பட்டு தொடர் ஆரம்பித்து ஆடத்தொடங்கியவுடனேயே புனே அணி வென்றால் அதில் தோனியின் ஆலோசனை பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன, அதாவது தோனி இல்லாவிட்டால் ஸ்மித் இல்லை என்று கூறப்பட்டு வந்தது, ஸ்மித் கூட இதனை இடக்கரடக்காலாகக் கூறிவந்தார். அதே போல் சாம்பியன்ஸ் டிராபியிலும் அப்படித்தான் ஆனது, கேதார் ஜாதவ்வை கொண்டு வர ஆலோசனை வழங்கியது தோனிதான் என்று கூறப்பட்டு அது பரவலானது. கோலியும் தோனியின் ஆலோசனைகள் பற்றி புளகாங்கிதம் அடைந்து அதனைக் கூறிவந்தார். ஒரு அணி என்றால் பலரும் தங்கள் ஆலோசனைகளை வழங்குவது இயல்புதான், ஆனால் இதில் ஒரு வீரர் மட்டும் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய தேவை என்ன இருக்கிறது? அப்படியென்றால் மற்ற வீரர்களின் ஆலோசனைகளையும் அறிவிக்க வேண்டுமல்லவா?

ஒரு போட்டியிலாவது தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பளித்திருக்கலாம் என்ற எண்ணம் நியாயமாக யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இதனை வெளி உலகிற்கு அறிவிப்பது போல் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இதே, கேதார் ஜாதவ்வை பந்து வீசுமாறு ஆலோசனை வழங்கியது உமேஷ் யாதவ்வாக இருந்தால் அது அவ்வாறு விதந்தோதப்பட்டிருக்குமா என்பது கேள்வியே. எனவே தோல்விக்கான உண்மையான காரணமான அணித்தேர்வு, தரமான பந்துவீச்சுக்கு எதிராக பேட்ஸ்மென்களின் பலவீனமான உத்தி உள்ளிட்ட விவகாரங்களைப் பேசாமல் ஏற்கெனவே இருக்கும் நிலவரங்களைத் தக்க வைப்பதும், இந்த அணியில் ஆடிய எந்த ஒரு வீரரின் திறமை குறித்த நியாயமான கேள்வியும் விமர்சனமும் வந்து விடக்கூடாது என்பதில் தற்போதைய நிர்வாகிகள் (கேப்டன் உட்பட) கவனமாக இருப்பதும் தெரிகிறது. மொகமது ஷமி போன்ற ஒரு பவுலரை அழைத்துச் சென்று ஒரு போட்டியில் கூட ஆடாமல் வைத்ததற்கான நம்பும்படியான நியாயமான காரணம் கூறப்படுமா என்பது ஐயமே.

தோல்வியினால் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை என்றாலும் தரமான பந்து வீச்சுக்கு எதிராக சூப்பர்ஸ்டார் இந்திய அணியின் பேட்டிங் சாயம் வெளுத்துப் போனதும், உலகின் நம்பர் 1 பந்து வீச்சு வரிசை என்று கூறப்பட்ட ஒரு பந்து வீச்சு வரிசை 250 ரன்களுக்கே திணறி வரும் பாகிஸ்தானுக்கு 340 ரன்களை வாரி வழங்கியதும் நல்ல அறிகுறியல்ல.

இதற்கு மே.இ.தீவுகள் சென்று ஆகப்பலவீனமான அணியை பெரிய வெற்றியைப் பெற்று அதனை ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவதும் பயன் தரப்போவதில்லை. இந்தத் தோல்வியை பலவெற்றிகளுக்கிடையே பெற்ற எதேச்சையான தோல்வி என்று பார்க்காமல் சுயபரிசோதனை செய்து கொள்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x