Published : 03 Nov 2014 08:19 PM
Last Updated : 03 Nov 2014 08:19 PM
2007 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்பு ராகுல் திராவிடை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க அப்போதைய பயிற்சியாளர் கிரெக் சாப்பல் முயன்றார் என்று தனது சுயசரிதையில் சச்சின் டெண்டுல்கர் அதிர்ச்சித் தகவலை பதிவு செய்துள்ளார்.
அப்போதைய பயிற்சியாளர் கிரெக் சாப்பல், சச்சின் டெண்டுல்கர் வீட்டுக்கு வந்த போது, “நாம் இருவரும் (அதாவது சச்சின், சாப்பல்) இந்திய கிரிக்கெட்டை பல ஆண்டுகளுக்கு வழி நடத்தலாம், திராவிடிடமிருந்து எனக்கு கேப்டன்சியைப் பெற்றுத் தர உதவி புரிகிறேன்” என்று சாப்பல் தன்னிடம் கூறியதைக் கேட்டு தான் கடும் அதிர்ச்சியடைந்ததாக சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதை நூலான ‘பிளேயிங் இட் மை வே’-யில் பதிவு செய்துள்ளார்.
கிரெக் சாப்பல் மீது சச்சின் டெண்டுல்கர் கடும் விமர்சனங்களை பதிவு செய்துள்ளார்:
"ஒரு ரிங்மாஸ்டர் போல் வீரர்கள் மீது தனது எண்ணங்களைத் திணித்தார். அவர்கள் இது பற்றி வசதியாக உணர்கிறார்களா, சங்கடமாக உணர்கிறார்களா என்பதைப் பற்றிய சிறு கரிசனை கூட அவரிடம் இருக்கவில்லை.
உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு சில மாதங்களுக்கு முன்பு என் வீட்டிற்கு வந்தார் கிரெக் சாப்பல், நான் திகைக்கும் விதமாக ஒன்றை தெரிவித்தார். ராகுல் திராவிடிற்குப் பதிலாக நான் கேப்டன்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
எங்களுடன் இருந்த என் மனைவி அஞ்சலி அவர் கூறுவதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார். அதாவது நாமிருவரும் இந்திய கிரிக்கெட்டை சில ஆண்டுகள் வழிநடத்தலாம் என்று கூறியதைக் கேட்டு உண்மையில் அதிர்ச்சி அடைந்தோம்.
கிரிக்கெட்டின் மிகப்பெரிய தொடர் நடக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அணியின் கேப்டனுக்கு அவர் கொஞ்சம் கூட மதிப்பளிக்கவில்லை என்பது எனக்கு திகைப்பூட்டியது.
2 மணி நேரம் அவர் என்னை வற்புறுத்தினார். நான் முடியாது என்றவுடன் சென்று விட்டார்.
இதற்கு சில நாட்கள் கழித்து நான் பிசிசிஐ-யிற்கு இது பற்றி எழுதும்போது, உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போது பயிற்சியாளர் கிரெக் சாப்பல் வருவது நல்லதல்ல என்று பரிந்துரை செய்தேன்.
ஆனால் அது நடக்கவில்லை. 2007 உலகக் கோப்பை பெரும் தோல்வியில் முடிந்தது. இந்திய கிரிக்கெட் சாப்பல் பயிற்சியின் கீழ் ஒரு அடி கூட நகரவில்லை என்று நான் கூறினால் நான் ஓரளவுக்குச் சரியாகக் கூறுவதாகத்தான் அனைவரும் உணர்வர்.
மூத்த வீரர்களின் நேர்மையை சந்தேகித்தார். எங்களது அர்ப்பணிப்பை கேள்விக்குட்படுத்தினார். என்ன காரணம் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர் மூத்த வீரர்களை நியாயமாக நடத்தவில்லை.
சவுரவ் கங்குலியால்தான் அவர் பயிற்சியாளரானார் என்பதை அவர் பல முறை பதிவு செய்துள்ளார். ஆனால் அதற்காக கங்குலியை வாழ்நாள் முழுதுன் ஆதரிக்க வேண்டும் என்ற அர்த்தமல்ல என்பதையும் அவர் நேரடியாகவே பதிவு செய்தார்.
உண்மையைக் கூற வேண்டுமெனில், இந்த நாடு உற்பத்தி செய்த மிகச்சிறந்த வீரர்களில் சவுரவ் கங்குலியும் ஒருவர். எனவே அவர் அணியில் நீடிக்க சாப்பல் போன்றவர்களின் ஆதரவோ, பரிந்துரையோ தேவையில்லை.
மூத்த வீரர்கள் அனைவரையும் அவர் அணியை விட்டே அனுப்ப நினைத்தார். இதன் மூலம் அணியில் இருந்த ஒத்திசைவைக் குலைத்தார். ஒருமுறை லஷ்மணை தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்றார்.
ஆனால் லஷ்மண் அதனை அமைதியாக மறுத்தார். அதற்கு கிரெக் சாப்பல் அளித்த பதில்தான் எங்களுக்கு ஆச்சரியமளித்தது, அவர் லஷ்மணிடம் ஜாக்கிரதையாக இருங்கள், 32 வயதில் அணியில் மீண்டும் வந்து ஆடுவது கடினம் என்றார்.
பின்னால் நான் தெரிந்து கொண்டேன், கிரெக் சாப்பல், மூத்த வீரர்கள் அனைவரையும் அணியை விட்டு நீக்க வேண்டும் என்று பிசிசிஐ-யிடம் பேசியுள்லார் என்பதை அறிந்தேன்.
2007 உலகக் கோப்பை முடிந்த பிறகு நாங்கள் இந்தியா திரும்பினோம். ஊடகத்துறையினர் என் வீடு வரை வந்தனர். நம் நாட்டைச் சேர்ந்தவர்களே வீரர்களின் கடமை உணர்வை சந்தேகித்தது எனக்கு காயத்தை ஏற்படுத்தியது. எங்களை விமர்சிக்க ஊடகங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆனால் நாங்கள் விளையாட்டில் கவனம் செலுத்தவில்லை என்று கூறுவது நியாயமாகாது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாங்கள் பூர்த்தி செய்யவில்லை என்பது அப்போது உண்மைதான், அதற்காக எங்களை துரோகிகள் போல் சித்தரிப்பதா. சில சமயங்களில் எதிர்வினை மிகவும் காழ்ப்புடன் இருந்தது, சில வீரர்கள் தங்கள் பாதுகாப்பை குறித்துக் கூட அச்சப்படத்தொடங்கினர்.
எண்டுல்கர் (Endulkar) என்று தலைப்பிட்ட செய்திகள் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தின. 18 ஆண்டுகால அயராத கிரிக்கெட்டிற்குப் பிறகு இது போன்று பெயர் அளிப்பது காயம் ஏற்படுத்தியது. ஓய்வு அறிவித்து விடலாம் என்று என் மனதில் தோன்றியது. ஆனால் என் குடும்பத்தினரும் நண்பர்களும் எனக்கு உற்சாகமூட்டினர். நான் சில நாட்கள் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டேன், அதாவது உலகக் கோப்பை தோல்வியை மண்டையிலிருந்து வேர்வையாக வெளியேற்ற ஓடினேன்.”
இவ்வாறு தன் சுயசரிதை நூலில் சச்சின் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT