Published : 04 Jun 2016 12:08 PM
Last Updated : 04 Jun 2016 12:08 PM

சுனில் நரைன் சுழல், பொலார்ட் அதிரடியில் வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மே.இ.தீவுகள் அணி, தென் ஆப்பிரிக்க அணியை அபாரமாக வீழ்த்தி வெற்றித் தொடக்கம் கண்டுள்ளது.

முதல் முறையாக மே.இ.தீவுகளில் முழுதும் பகலிரவு ஆட்டங்களாகவே நடைபெறும் இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, மே.இ.தீவுகள் விளையாடுகின்றன.

நேற்று கயானாவில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ், ஸ்பின் சாதக ஆடுகளத்தில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். சுனில் நரைன் தனது சர்வதேச கிரிக்கெட் ‘ரிடர்னில்’ அசாத்தியமாக வீசினார். 9.5 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார். மே.இ.தீவுகள் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஸ்பின்னர் ஒருவரின் மிகச்சிறந்த பந்துவீச்சு இது என்ற சாதனைக்கு நரைன் சொந்தக்காரர் ஆக தென் ஆப்பிரிக்க அணி 46.5 ஓவர்களில் 188 ரன்களுக்குச் சுருண்டது.

தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 25.3 ஓவர்களில் 76/4 என்று சற்றே தடுமாறிய போது கெய்ரன் பொலார்ட் இறங்கினார் சடுதியில் 6 சிக்சர்களை வெளுத்துக் கட்டினார் 48.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் என்று மே.இ.தீவுகள் அபார வெற்றி பெற்றது. கெய்ரன் பொலார்ட் 67 பந்துகளில் 2 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 67 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழந்தார்.

சுனில் நரைன் தேர்வு செய்யப்பட்டதை கிறிஸ் கெயில், டேரன் சமி, டிவைன் பிராவோ ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அவரோ தன்னை அணியில் தேர்வு செய்ததை நேற்று நிரூபித்தார். பந்துகள் ஆஃப் ஸ்பின்னில் மைல்கணக்கில் திரும்பின. திடீரென தூஸ்ராவையும் அவர் வீச தென் ஆப்பிரிக்க அணியினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தென் ஆப்பிரிக்க அணி டி காக் மற்றும் ஆம்லா மூலம் 9.5 ஓவர்களில் 52 ரன்கள் என்ற ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தைக் கண்டன. டி காக் வழக்கம் போல் அருமையான கவர் டிரைவ், ஆன் டிரைவ்கள் மூலம் 6 பவுண்டரிகளுடன் 34 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த போது பிராத்வெய்ட் பந்தை புல் ஷாட் ஆட முயன்று மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். இது ஒருவிதத்தில் திருப்புமுனையானது.

ஹஷிம் ஆம்லா 26 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 20 ரன்கள் எடுத்து நரைனின் ஸ்பின்னுக்கு எல்.பி.ஆகி வெளியேறினார். ரைலி ருசோவ், டிவில்லியர்ஸ் இணைந்தனர், ரன் வருவது கடினமானது, பவுண்டரிகள் வரும் இடைவெளியும் அதிகமானது. டிவில்லியர்ஸ் கூட 49 பந்துகளில் பவுண்டரி எதுவும் அடிக்க முடியாமல் 31 ரன்களை எடுத்து டெய்லரின் வேகம் குறைந்த பந்துக்கு அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் என்றால் பந்துவீச்சு பற்றி நாம் புரிந்துகொள்ள முடிகிறது. டிவில்லியர்ஸ், ருசோவ் 20 ஓவர்களில் 78 ரன்களையே சேர்க்க முடிந்தது. ருசோவ் மிகவும் எச்சரிக்கையுடன் ஆடி 83 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்ததே தென் ஆப்பிரிக்கா ஓரளவுக்கு மீண்டதற்குக் காரணமாக அமைந்தது. ருசோவையும் நரைன் காலி செய்தார்.

மிக அருமையான பந்து அது, முரளிதரன் பந்து போல் லெக் ஸ்டம்பில் பிட்ச் ஆகி கடுமையாக திரும்பி ருசோவின் மட்டை விளிம்பைத் தட்டிச் சென்று ஸ்லிப்பில் பிராத்வெய்ட்டிடம் கேட்ச் ஆனது. ஸ்லிப் நிறுத்தி வீசியது நரைனின் ஆக்ரோஷ அணுகுமுறைக்குச் சான்று. அதே ஓவரில் பெஹார்டீன், நரைனின் தூஸ்ராவுக்கு ஏமாந்தார், ரன் எடுக்காமல் அவுட் ஆனார். ஐபிஎல் புகழ் கிறிஸ் மோரிஸும் நரைனுக்கு இலக்கானார். கடைசியில் இம்ரான் தாஹிர் எல்.பி.தீர்ப்பு நாட் அவுட், ஆனால் சுனில் நரைன் தனது 6-வது விக்கெட்டைக் கைப்பற்றினார். 130/2 என்ற நிலையிலிருந்து தென் ஆப்பிரிக்கா 188 ரன்களுக்குச் சுருண்டது. குறிப்பாக கடைசி 7 விக்கெட்டுகளை 28 ரன்களுக்கு பறிகொடுத்தது.

பொலார்ட் அதிரடியில் வெற்றி!

பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்காவை மட்டுப்படுத்திய பிறகு பேட்டிங்கில் வெஸ்ட் இண்டீஸ் தனது அனாயாச பாணியில் தொடங்கியது. தொடக்க வீரர் சார்லஸ் 3 எட்ஜ் பவுண்டரிகளை முதல் 2 ஓவர்களில் அடித்தார். ஆனால் கவலைப்படவில்லை, இதில் ஒன்று டி காக் கிளவ்வில் பட்டுச் சென்றது. மேலும் ரபாதாவின் அருமையான யார்க்கரை சார்லஸ் பூட்ஸில் வாங்கினார், அது பிளம்ப் எல்.பி. நடுவர் நாட் அவுட் என்றார். ரிவியூ இருந்தும் டிவில்லியர்ஸ் தவறாக ரிவியூ வேண்டாம் என்று முடிவெடுத்தார்.

அதன் பிறகு எச்சரிக்கை மணி அடிக்கப்பட சார்லஸ், பிளெட்சர் நிதானம் காட்டி 11 ஒவர்களில் 37 ரன்களைச் சேர்த்தனர். வழக்கம் போல் தென் ஆப்பிரிக்க அணிக்கு இம்ரான் தாஹிர்தான் தனது கூக்ளியினால் விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்தார். பிளெட்சர் தடுப்பு மட்டையைத் தாண்டி உள்ளே புகுந்த தாஹிர் கூக்ளி ஸ்டம்பைத் தொந்தரவு செய்தது. 31 ரன்கள் எடுத்த அபாய வீரர் சார்லஸும் தாஹிரின் பந்தை மேலேறி வந்து ஆட முயன்று கூக்ளியில் பவுல்டு ஆனார். ஆனால் சார்லஸ் அடித்த ஒரு புல்ஷாட் புதிதாக இருந்தது. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த பந்தை சாதாரணமாக கட் ஷாட் ஆட முயன்று பந்தை வாங்கி உள்ளே விட்டுக் கொள்வதுதான் பேட்ஸ்மென்களின் வழக்கம், ஆனால் அளவு குறைவாக ஆனால் உயரம் குறைவாக வந்த பந்தை ஒரு விதமான பிளிக்-புல் கலந்த ஒரு ஷாட்டை ஆடினார் பந்து பவுண்டரிக்குப் பறந்தது.

சார்லஸ், பிளெட்சர் ஆட்டமிழக்க, மே.இ.தீவுகளின் நம்பிக்கை நட்சத்திரம் சாமுவேல்ஸ் 1 ரன்னில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பங்கீஸோவின் நேர் பந்துக்கு எல்.பி.ஆகி வெளியேறினார். அந்த பந்துக்கு முன்னமேயே காலைத்தூக்கி குறுக்கே போட்டார் பந்து திரும்பவில்லை. நேராக கால்காப்பைத் தாக்கியது. தினேஷ் ராம்தின் 10 ரன்களில் டுமினியிடம் ஆட்டமிழக்க 26-வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் 76/4 என்று லேசாக ஆட்டம் கண்டது.

டேரன் பிராவோ ஒரு முனையில் நிதானம் காட்ட கெய்ரன் பொலார்ட் இணைந்தார். ஆனால் உடனேயே கைல் அபாட், ரபாதாவை கொண்டு வந்து பொலார்டை காலி செய்திருக்க வேண்டும், டிவில்லியர்ஸ் கேப்டன்சியில் தப்புக் கணக்குப் போட்டார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டம் காட்டிய பொலார்டுக்கு ஸ்பின்னை நம்பினார், டுமினியிடம் கொடுக்க முதல் சிக்சை அடித்தார் பொலார்ட், பிறகு எதிர்முனையில் பங்கீசோவை அழைக்க அவரை 2 சிக்சர்கள் அடித்தார் பொலார்ட் ஒன்று நேர் பவுண்டரியில் ஆன் திசையில் மைதானத்திலிருந்து காணாமல் போனது, அடுத்த சிக்ஸ் மேலும் துல்லியமானது நேராக ஆஃப் திசையில் சிக்ஸ்.

இவர் அடிக்க ஆரம்பித்தவுடன் டேரன் பிராவோவும் 2 பவுண்டரிகளை அடித்தார். ஒன்று இம்ரான் தாஹிரை தரையோடு தரையாக அடித்த நேர் பவுண்டரி, ‘லாரா டச்’. 5-வது விக்கெட்டுக்காக இருவரும் 74 ரன்களைச் சேர்க்க, தென் ஆப்பிரிக்காவின் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டது.

பங்கீஸோ, தனது நல்ல பந்து வீச்சின் மூலம் பிராவோ, பிராத்வெய்ட் ஆகியோரை வீழ்த்தி 40 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினாலும் அவரது முயற்சி விரயமானது. ஒரு வேளை டேல் ஸ்டெய்னுக்கு ஓய்வளிக்காமல் இருந்திருக்கலாம் என்று தென் ஆப்பிரிக்கா யோசிக்க வாய்ப்பிருக்கிறது. அவருக்கு ஓய்வு எனும் அதே வேளையில் அவரோ நாட்வெட்ஸ்ட் டி20 பிளாஸ்ட் தொடரில் வெள்ளியன்று 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஆட்ட நாயகனாக மிகச்சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்திய சுனில் நரைன் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x