Published : 15 Nov 2014 03:48 PM
Last Updated : 15 Nov 2014 03:48 PM
தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் நேற்று பெர்த் ஒருநாள் போட்டியில் விசித்திரமான முறையில் ஹிட் விக்கெட் ஆகியிருப்பார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை.
ஆஸ்திரேலியா எடுத்த 300 ரன்கள் இலக்கை எதிர்த்து துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி 207/7 என்று இருந்த போது டேல் ஸ்டெய்ன் கிரீஸிற்கு வந்தார்.
அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கிரிக்கெட் ஆட்டத்தில் இதுவரை நடந்திராத விசித்திர முறையில் ஹிட் விக்கெட் ஆகத் தெரிந்தார்.
ஆஸ்திரேலிய வீச்சாளரின் மிகப்பெரிய நல்ல பந்தோ, அல்லது அதிவிரைவு பீல்டிங்கோ, யார்க்கரோ டேல் ஸ்டெய்னின் இத்தகைய விசித்திரத்திற்குக் காரணமல்ல.
அவர் அணிந்திருந்த ஷூ அவருக்கு எதிரியாகியிருக்கும். முதல் பந்தை முன்னால் வந்து தடுத்தாடிய டேல் ஸ்டெய்ன் ஒரு ரன் எடுக்கலாமா என்பதற்காக ஓட முயற்சி செய்தார்.
ஆனால் அவரது வலது கால் ஷூ கழன்றதோடு அவரது பின்னங்கால் உந்துதலினால், ஷூ, ஸ்டம்பின் மேல் போய் விழுந்திருக்கும். விசித்திர முறையில் முதன் முறையாக ஸ்டம்பின் மேல் ஷூ விழுந்து ஹிட் விக்கெட் ஆகியிருப்பார்.
ஆனால் ஷூ ஸ்டம்ப் வரை செல்லாமல் முன்னால் நிலைபெற்றது. அருகில் இருந்த டேவிட் வார்னர் சில வார்த்தைகளை ஸ்டெய்னுடன் பகிர்ந்து கொண்டார்.
அதாவது ஷூ ஸ்பான்சர்கள் மூலம் ஸ்டெய்னுக்கு கூடுதல் டாலர்கள் கிடைத்திருக்கும் என்ற தொனியில் வார்னர், ஸ்டெய்னிடம் கூறியதாக ஆஸ்திரேலிய விளையாட்டுச் செய்தி ஊடகம் பதிவு செய்துள்ளது.
சமீபத்தில் நியூசி. அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மென் அகமத் ஷேஜாத் (176 ரன்கள்), கோரி ஆண்டர்சன் வீசிய ரவுண்ட் த விக்கெட் பவுன்சரை ஹுக் ஆட முயன்று பந்தைக் கோட்டை விட அது ஹெல்மெட்டினுள் புகுந்து அவரைப் பதம் பார்த்தது. ஆனால் அடிபட்டவுடன் அவர் மட்டையைத் தவறவிட அது ஸ்டம்பைத் தாக்கியது. ஹிட்விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.
ஆனால் நேற்று டேல் ஸ்டெய்ன் ஷூ ஸ்டம்பில் பட்டு ஆட்டமிழந்திருந்தால் கிரிக்கெட் ஆட்டத்தின் மிக விசித்திரமான அவுட்டாக அது அமைந்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT