Published : 25 Jan 2017 04:51 PM
Last Updated : 25 Jan 2017 04:51 PM
இரானி கோப்பை கிரிக்கெட்டில் 2-வது இன்னிங்சில் 203 ரன்கள் விளாசி பார்த்திவ் படேல் தலைமை ரஞ்சி சாம்பியன் குஜராத் அணியை ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி வீழ்த்த பங்களிப்பு செய்த சஹாதான் இந்திய டெஸ்ட் அணிக்கான விக்கெட் கீப்பர் என்று அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் உறுதிபட தெரிவித்துள்ளார்.
அதாவது இரானி கோப்பை கிரிக்கெட் பார்த்திவ் படேலுக்கும் விருத்திமான் சஹாவுக்கும் இடையிலான தேர்வு போட்டி என்பது போல்தான் நடைபெற்றது போல் தெரிகிறது.
இந்தப் போட்டியை அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் நேரில் பார்த்தார். இந்தப் போட்டியில் பார்த்திவ் படேல் நடுவரின் தவறினால் நிரூபிக்க முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு பிரசாத் கூறும்போது, “விருத்திமான் சஹா காயத்தினால் அணியிலிருந்து விலகியிருந்தாரே தவிர, ஆட்டத்திறன் போதாமையினால் அல்ல, நியூஸிலாந்துக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் சஹா ஆட்ட நாயகன், மே.இ.தீவுகளில் சதம் எடுத்தார். ஆனால் அணியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்த்திவ் படேல் ஆடிய விதம் அபாரமானது.
பார்த்திவ் படேல் ஒரு போராளி, குஜராத் அணியை எங்கிருந்தோ ரஞ்சி சாம்பியன் நிலைக்கு கொண்டு வந்தார். அவர் இந்திய டெஸ்ட் அணியின் ஏற்பாடுகளுக்குள் இருக்கிறார், டெஸ்ட் கிரிக்கெட்டில் படேலுக்கும், சஹாவுக்கும் ஒரு சிறு வித்தியாசம் உள்ளது. கீப்பிங்கில் சிறந்து விளங்கும் வீரரே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முக்கியம்.
அந்த வகையில் படேலை விட சஹா முன்னிலை வகிக்கிறார். படேலின் கீப்பிங் நிச்சயமாக முன்னேறியுள்ளது. ஆனால் சஹாவின் கீப்பிங் படேலை ஒப்பிடும் போது சில புள்ளிகள் கூடுதல் பெறுகிறது. மேலும் இரானி கோப்பையில் இரட்டைச் சதம் அடித்து 63/4 என்ற நிலையிலிருந்து இரட்டைச் சதம் எடுத்து 379 ரன்கள் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது, இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் சஹாவே என்பதை அறிவிக்கிறது. எனவே படேலுக்கும் சஹாவுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவது நல்லதுதான்.
இந்திய ஒருநாள் அணி பற்றி:
நியூஸிலாந்து தொடரின் போது நடுக்கள வீரர்கள் பற்றி கொஞ்சம் கவலையடைந்தோம். ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் 150 ரன்களையும், தோனி ஒரு சதத்தையும் எடுக்க கேதர் ஜாதவ் புனேயில் அருமையான சதத்துடன் வெற்றியைச் சாதிக்க பிறகு ஒரு திரில்லிங் 90 ரன்களை கடைசி போட்டியில் அடித்தார்.
கேதர் ஜாதவ் ஒரு ‘லிட்டில் டைனமைட்’. ரஞ்சி போட்டியில் அவரது ஆட்டத்தை நான் பார்த்துள்ளேன். 2014-15 ஆந்திரா/மகாராஷ்டிரா போட்டி என்று நினைக்கிறேன், வேகப்பந்து ஆட்டக்களத்தில் 40/6 என்ற நிலையில் இறங்கி 80 ரன்களுக்கும் மேல் அடித்து மகாராஷ்டிரா வெற்றியை உறுதி செய்தார்.
தொடக்க வீரர்களைப் பொறுத்தவரை ரோஹித் சர்மா காயத்திலிருந்து மீண்டும் வந்து விடுவார், மற்றவர்கள் ரன் எடுக்கத் தொடங்கிவிட்டால் பிரச்சினையில்லை, வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக ஐபிஎல் வருவதால் வீரர்கள் நல்ல பார்முக்குத் திரும்பி விடுவார்கள்.
இவ்வாறு கூறினார் எம்.எஸ்.கே. பிரசாத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT