Published : 11 Jun 2016 11:20 AM
Last Updated : 11 Jun 2016 11:20 AM
பிரான்சில் தொடங்கிய யூரோ 2016 கால்பந்து தொடரின் முதல் போட்டியில் ருமேனியா அணியை பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிக்கணக்கைத் தொடங்கியது.
88-வது நிமிடம் வரை ருமேனியா அணி 1-1 என்று டிரா செய்து பிரான்ஸை வெறுப்பேற்றவே ஆடியது. ஆனால் 89வது நிமிடத்தில் டிமிட்ரி பயெட்டின் இடது கால் சுழற்றல் ருமேனியாவை வெறுப்பேற்றியது, கடைசியில் சற்றும் எதிர்பாராத நிலையில் எதிரணி வீரர்கள் புடைசூழ நின்ற நிலையிலும் அசாத்தியமான அந்த பயெட்டின் இடது கால் சுழற்றல் 2-வது கோலாக, வெற்றி கோலாக மாறியதில் ருமேனியா அதிர்ச்சியடைந்தது. இது உண்மையில் எங்கிருந்தோ வந்த கோல்தான்!
அதாவது ருமேனிய வீரரிடமிருந்து தட்டிப்பறித்த பந்தை உள்ளுக்குள் கொண்டு வந்து இடது காலால் ஒரே உதை! டாப் கார்னரில் கோல் ஆனது.
ஆனால் பிரான்ஸ் அணி ஹியூகோ லோரிஸுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது. தொடக்க நேரங்களில் ருமேனிய வீரர் போக்டான் ஸ்டான்கு ஷாட்டை கோல் செல்ல விடாமல் தடுத்தார் லோரிஸ். அதே போல் 2-வது பாதியின் தொடக்கத்தில் ருமேனிய மிட்ஃபீல்டர் தவற விட்ட வாய்ப்பும் பிரான்ஸுக்கு உதவியது, இந்த இரண்டு தருணங்களும் ருமேனியாவுக்குச் சாதகமாகியிருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறாகியிருக்கும்.
பிரான்ஸ் வீரர் ஆலிவர் கிரவ்ட் 3 வாய்ப்புகளை கோட்டை விட்டார். முதலில் தலையால் முட்டிய வாய்ப்பு ஒன்று சற்றே வைடாகச் சென்றது. ஆனால் 58-வது நிமிடத்தில் ஆலிவர் கிரவ்ட் முதல் கோலை அடிக்கக் காரணமானவரும் வெற்றி கோலை அடித்த பயெட் என்றால் மிகையாகாது. ஆனால் இதிலும் ருமேனிய கோல் கீப்பர் சிப்ரியன் ததாருசானு தவறிழைத்தார், பயெட் ஷாட்டை அவர் தவறவிட்டார். அதாவது கிரவ்ட் தன்னை தடுத்ததாக ருமேனிய கோல் கீப்பர் நினைத்தார். இது முதல் கோலானது. அதாவது 58-வது நிமிடத்தில் பிரான்ஸ் 1-0 என்று முன்னிலை.
ஆனால் இந்த முன்னிலையை 7 நிமிடங்களுக்குத்தான் பிரான்ஸால் தக்கவைக்க முடிந்தது. 65-வது நிமிடத்தில் வலது புறத்திலிருந்து ருமேனிய வீரர் அட்ரியன் போபா அடித்த கிராஸை பிரான்ஸ் சரியாகக் கையாளத் தவறியது. இதனையடுத்து வாய்ப்பை பயன்படுத்தி ருமேனிய வீரர் நிகோலே ஸ்டான்சியு அதனை கோல் நோக்கி எடுத்துச் செல்ல பிரான்ஸ் வீரர் பாட்ரீஸ் எவ்ரா மடத்தனமாக அதனை தடுக்க நினைத்தார். ஹங்கேரி நடுவர் விக்டர் கசாய் மிகவும் தைரியமாக பெனால்டி வழங்கினார். பெனால்டியை எளிதில் ஸ்டான்கு கோலாக மாற்றி சமன் செய்தார். 1-1 என்ற நிலையில் ஆட்டம் சென்று கொண்டிருந்த போதுதான் டிரா என்று நினைத்த தருணத்தில் பயெட்டின் அதிர்ச்சிகரமான வெற்றி கோல் 89-வது நிமிடத்தில் பிரான்ஸுக்கு அபார வெற்றியை கொடுத்தது.
முன்னதாக கிரவ்ட் தலையால் அடித்த ஷாட் கோலுக்கு சற்று வெளியே செல்ல, அடுத்ததாக, பகாரி சக்னாவின் கிராஸை கோட்டை விட்ட அன்டாயின் கிரீய்ஸ்மான் 2-வது முயற்சியில் கோலை நோக்கி அடிக்க போஸ்டில் பட்டது.
ருமேனிய அணியும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைக் கோட்டை விட்டது. 2-வது பாதியில் 3-வது நிமிடத்தில் பந்தை நெஞ்சில் வாங்கி கட்டுப்படுத்திய ருமேனியாவின் ஸ்டான்கு இறங்கிய பந்தை கோலாக மாற்ற முடியாமல் போனார்.
வெற்றி கோலை அடித்து வெளியேறிய பயெட் கண்ணீருடன் ஓய்வறைக்குத் திரும்பினார். பிரான்ஸ் வெற்றியுடன் தொடங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT