Published : 13 Jul 2016 03:03 PM
Last Updated : 13 Jul 2016 03:03 PM

கடினமான தருணங்களைக் கையாளும் விதத்தை கும்ப்ளே கற்றுக் கொடுப்பார்: சச்சின் டெண்டுல்கர்

பயிற்சியாளராக இந்திய அணிக்கு வழங்க அனில் கும்ப்ளேயிடம் ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன என்று சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்போ இணையதளத்தில் சச்சின் கூறியதாவது:

விட்டுக் கொடுக்காத மனோநிலை வேண்டும், கடினமான தருணங்களில் நாம் நம் சொந்தக் காலில் நிற்பது குறித்த விஷயமாகும் இது. இதைத்தான் அனில் கும்ப்ளே அணியினருக்கு கற்றுக் கொடுப்பார் என்று நான் கருதுகிறேன்.

ஒவ்வொரு போட்டியிலும் மீள முடியா கடினமான தருணங்கள் ஏற்படும். அந்தத் தருணங்களை அணுகுவது எப்படி என்பது முக்கியமானதாகும். ஒவ்வொரு தருணத்தையும் வெல்வதற்கு தற்போது அனில் கும்ப்ளே இருக்கிறார்.

அனில் கும்ப்ளேயுடனான எனது அனுபவம் அபாரமானது. அவர் போட்டிகளை வெல்லக்கூடிய திறமை கொண்டவர், அவரிடமிருந்து வீரர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. அவரும் தான் கற்றுக் கொண்ட அனைத்தையும் பகிர்ந்து கொள்ள விருப்பமானவரே. 20 ஆண்டுகள் ஆடியுள்ளார், எனவே பகிர நிறைய விஷயங்கள் அவரிடம் உள்ளன. அவரிடமிருந்து வீரர்கள் எவ்வளவு பெற முடியுமோ அத்தனையும் பெற வேண்டும். அனைத்தையும் விட ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் ஆடுவது முக்கியம்.

பவுலிங் ஆதரவு பிட்ச்கள்:

பிட்ச்கள் மாற வேண்டும். பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆட்டக்களங்கள் அமைக்கப்பட வேண்டும். டி20-யில் மிகச்சிறந்த பவுலர்களையெல்லாம் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிவிடுகின்றனர். ஒருநாள் போட்டிகளில் 300 ரன்கள் என்பது வெற்றி பெற போதுமானதாக இல்லை.

எனவே ஒரு வடிவத்திலாவது பவுலர்கள் கை ஓங்கியிருக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு அப்போதுதான் ஆட்டத்தின் மீது ஈர்ப்பு ஏற்படும். 5 நாட்கள் உட்கார்ந்து பார்க்க வேண்டுமே. எனவே பிட்ச்களில் மாற்றங்கள் தேவை. ரன் குவிப்பு மட்டையின் அளவு குறித்ததல்ல. ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் முடிவெடுப்பார்கள். இதைத்தான் டேவிட் வார்னரும் கூறியுள்ளார் என்று நான் நினைக்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x