Published : 21 Apr 2017 05:52 PM
Last Updated : 21 Apr 2017 05:52 PM
தோள்பட்டைக் காயம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து விலகிய இந்திய தொடக்க வீரர் கே.எல்.ராகுல் வரும் சாம்பியன்ஸ் டிராபியில் ஆடுவதும் சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
இது குறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது:
நான் பொறுத்திருந்துதான் சொல்ல வேண்டும், ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் வாய்ப்பு மிகமிகக் குறைவே. என்னுடைய தோள்பட்டைக் காயத்தினால் ஷாட்களை ஆட முடியவில்லை. என்னை நான் கட்டுப்படுத்திக் கொண்டு ஆட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலேயே கடுமையான சிகிச்சை மருந்துகள் எடுத்துக் கொண்டே ஆடினேன். இப்போதைய நிலையில் என் தோள்பட்டை காயத்திலிருந்து மீள 2-3 மாதங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன். எனவே இதற்குப் பிறகு நான் பல்வேறு விதங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதலில் 2-3 வாரங்கள் முழுதும் ஓய்வு, பிறகு பிசியோதெரபி எடுத்துக் கொள்வேன்.
ஒவ்வொரு உடலும் வெவ்வேறு விதமானவை என்கின்றனர் மருத்துவர்கள். எனவே எப்படி முழு குணமடையும் என்பது இதைப்பொறுத்ததே. இனி இது முழுக்க முழுக்க என்னைப் பொறுத்ததே. சிகிச்சைக்குப் பிறகான காலக்கட்டத்தில் நான் எப்படிச் செயல்படுகிறேன், நான் எப்படி என் உடல்நலத்தைப் பேணி காக்கப் போகிறேன் என்பதே முக்கியம்.
இது மைதானத்தில் வீரர்கள் ஒருவருக்கொருவர் உடல் தொடர்பு உள்ள விளையாட்டில் ஏற்படும் காயம், எனக்கு எப்படி ஏற்பட்டது என்று மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். புனேயில் நான் சிக்ஸ் அடித்த ஷாட்டின் போதே உணர்ந்தேன் தோள்பட்டை சரியில்லை என்பதை. அதே ஷாட்டை மீண்டும் ஆடும்போதுதான் தெரிந்தது என் தோள்பட்டை சேதமடைந்தது என்று. அதன் பிறகு ஒன்றும் செய்யமுடியவில்லை.
நான் அடிக்கடி காயமடைகிறேன், இது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. ஏனெனில் எனது பயிற்சியில் மிகவும் கட்டுக்கோப்பாக இருப்பவன். ஆனால் விளையாட்டில் காயமடையாமல் இருப்பது என்பது கடினமே. எனவே வருங்காலங்களில் காயமடையாமல் இருப்பது எப்படி என்பது குறித்தே என் பயிற்சி முறைகள் அமையும்.
இவ்வாறு கூறினார் கே.எல்.ராகுல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT