Published : 01 Mar 2014 11:05 AM
Last Updated : 01 Mar 2014 11:05 AM
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேசமும் ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன.
இரு அணிகளுமே முதல் ஆட்டத்தில் தோற்ற நிலையில் வங்கதேசத்தின் பதுல்லா நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் சந்திக்கின்றன. இந்த ஆட்டத்தில் தோற்கும் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும். அதேநேரத்தில் வங்கதேச அணி இந்த ஆண்டில் முதல் வெற்றியை ருசிக்க இது நல்ல வாய்ப்பாகும். எனினும் ஆப்கானிஸ்தானையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அந்த அணி பாகிஸ்தானையே தடுமாற வைத்தது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் மஸ்ரபே மோர்ட்டஸா வுக்கு இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான சபியுல் இஸ்லாம் சேர்க்கப்பட்டுள்ளார். மோர்ட்டஸாவுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருடைய இடது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
“தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வரும் கேப்டன் முஷ்பிகரின் ஸ்கேன் அறிக்கை வந்துவிட்டது. அவரின் காயம் தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டியிருக்கிறது. அவருக்கு நாளை உடற்தகுதி பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன்பிறகே அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவாரா, மாட்டாரா என்பது தெரியவரும்” என அணியின் உடற்செயலியல் நிபுணர் தெரிவித்தார்.
வங்கதேச அணியில் மோர்ட்டஸா இல்லாத நிலையில் வேகப்பந்து வீச்சில் அப்துர் ரசாக்கிற்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.கேப்டன் முஷ்பிகர் விளையாடுவதில் சந்தேகம் நிலவுவதால் அனாமுல் ஹக் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாடுவது முக்கியமானதாகும்.
போட்டி நேரம் : மதியம் 1.30
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT