Published : 05 Aug 2016 05:02 PM
Last Updated : 05 Aug 2016 05:02 PM
ராஸ்டன் சேஸின் அபாரமான சதம், பிளாக்வுட்டின் அதிரடி ஆட்டம், டவ்ரிச், ஹோல்டரின் இரும்பு போன்ற உறுதியினால் 2-வது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அபார எழுச்சி பெற்று டிரா செய்தது. ஆனால் கோலியின் கேப்டன்சியில் சில தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளார் சவுரவ் கங்குலி.
இது குறித்து தனியார் சேனல் ஒன்றில் கங்குலி கூறியிருப்பதாவது:
அமித் மிஸ்ராவுக்கு முன்பாகவே அஸ்வினை பந்து வீச அழைத்திருக்க வேண்டும். அதே போல் உமேஷ் யாதவ்வை கோலி இன்னும் கூட நன்றாகப் பயன்படுத்தலாம். அவருக்கு அளித்த ஓவர்கள் எண்ணிக்கையை விட அவரது பந்து வீச்சு திறமை சிறப்பானது. அவர் 12 ஓவர்களையே வீசினார். உமேஷ் யாதவ்வை ஒரு ஆக்ரோஷ வீச்சாளராக கோலி பயன்படுத்துவது அவசியம். சில வேளைகளில் 5 பவுலர்கள் கொண்டு ஆடுவது ஒரு பவுலரை சரியாக பயன்படுத்த முடியாததில் போய் முடியும்.
உமேஷ் யாதவ்வை விக்கெட் வீழ்த்தும் பவுலராக கோலி பயன்படுத்த வேண்டும். அவரிடம் நிறைய திறமைகள் உள்ளன, ஆனால் என்ன வேண்டுமானாலும் நாம் கூறி தேற்றிக் கொண்டாலும், ராஸ்டன் சேஸ், பிளாக்வுட், டவ்ரிச் ஹோல்டர் ஆடியது ஆச்சரியகரமான மன உறுதியுடன் என்பதை நாம் மறக்க முடியாது. தொடர் இப்படியாக திரும்புவதை நான் பார்த்திருக்கிறேன். இந்தப் போட்டிக்கு பிறகு சூழ்நிலை நிச்சயம் வித்தியாசமாக அமையும் என்று நான் கருதுகிறேன்.
ஆனால் மே.இ.தீவுகள் பந்து வீச்சு 20 இந்திய விக்கெட்டுகளை வீழ்த்துமா என்பது சந்தேகமே, ஆகவே இந்தியா தொடரை வெல்லும் என்று தெரிகிறது.
அடுத்த போட்டிக்கும் அணியில் மாற்றமிருக்காது. செயிண்ட் லூசியா முடிவு தெரியும் போட்டியாக இருக்கும் என்று நினைக்கிறேன். கோலி பவுலர்களை இன்னும் கொஞ்சம் நன்றாகப் பயன்படுத்த வேண்டும். அஸ்வின் மிகச்சிறப்பாக வீசினார், மிஸ்ராவுக்கு அதிர்ஷ்டமில்லை. வேகப்பந்து வீச்சாளர்களும் நன்றாக வீசினர், ஆனால் கோலி உமேஷ் யாதவ்வை விக்கெட் வீழ்த்தும், ஆக்ரோஷ பவுலராக பயன்படுத்துவது நல்லது.
இவ்வாறு கூறினார் கங்குலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT