Published : 20 Mar 2017 07:00 PM
Last Updated : 20 Mar 2017 07:00 PM

பிட்ச் அல்ல பந்தில்தான் சிக்கல்: ராஞ்சி டெஸ்ட் டிரா குறித்து விராட் கோலி

ராஞ்சி டெஸ்ட் போட்டி கடைசி நாளில் எத்தரப்புக்கும் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது பற்றி ஆட்டம் முடிந்தவுடன் பரிசளிப்பு நிகழ்ச்சியில் விராட் கோலி சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் பந்துகள் குறித்து விராட் கோலி ஏற்கெனவே பிசிசிஐ-யிடம் புகார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ராஞ்சி டெஸ்ட் போட்டி டிரா ஆனதற்கு பிட்ச் காரணமல்ல, பந்து மிகவும் மென்மையாகி அதில் ஒன்றுமே எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த போட்டி பற்றியும் கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

டாஸை இழந்தால் அதன் பிறகு ஆட்டம் எளிதானதல்ல. காயமடைந்து களமிறங்க முடியாமல் எதிரணியினர் ரன்குவிப்பில் ஈடுபடுவதை பெவிலியனில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது கடினமான அனுபவம் (முதல் நாளில் தோள்பட்டை காயம் காரணமாக கோலி பெவிலியன் திரும்பினார்). அருமையாக பேட்டிங் ஆடினோம், முதலில் ராகுல் மற்றும் விஜய், ஆனால் பிறகு புஜாரா, சஹா இடையே அமைத்த கூட்டணி இது வரை நான் பார்த்ததில் சிறந்த கூட்டணியாகும். 150 ரன்கள் முன்னிலை பெறுவோம் என்று நினைக்கவில்லை.

நேற்று முடிவில் 2 ஆஸி. விக்கெட்டுகளைக் கைப்பற்றினோம். அந்நிலையில் வெற்றிக்கு நல்ல வாய்ப்பு என்றே கருதினோம். ஆனால் மார்ஷ், ஹேண்ட்ஸ்கம்ப் எங்கள் வாய்ப்பை முறியடித்தனர், இருவரும் அருமையாக ஆடினர். வீரர்கள் தங்கள் எல்லையை நீட்டிக்கவே விரும்புகின்றனர், உடல் ரீதியாக மன ரீதியாக இன்னும் கூடுதல் திறமையை வெளிப்படுத்த விழைகின்றனர்.

டிரா செய்த ஆஸ்திரேலியாவுக்குப் பாராட்டுகள். வெற்றி பெறும் நிலைக்கு கொண்டு சென்றோம் ஆனால் ஆஸி. டிரா செய்தனர், வீரர்களுக்குப் பாராட்டுக்கள்.

புஜாராவைப் பொறுத்தமட்டில் ஒரே ஒரு வடிவத்தில ஆடுவது என்பது அவருக்கு கூடுதல் உறுதியை அளிக்கிறது. புஜாரா உத்வேகமிக்கவர், டெஸ்ட் பேட்டிங்கில் உண்மையிலேயே அவர் வேறு ஒரு தளத்தில் இருக்கிறார். அவரது சிறந்த பேட்டிங்கை பார்க்க முடிந்தது. சஹா இதைப்போன்றே மே.இ.தீவுகளில் செய்தார், இங்கு கொல்கத்தாவில் செய்தார், ஆனால் இங்கு கடும் அழுத்தத்தில் நிமிர்ந்து நின்றார். அவருக்காக நாங்கள் மகிழ்கிறோம், ஏனெனில் அவர் எப்போதும் சிரிப்பு மாறாத முகத்துடன் கூடிய ஒரு அற்புதமான வீரர். யார் சாதித்தாலும் அதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடக்கூடியவர்.

டிரா ஆனதற்கு பிட்ச் காரணமல்ல, இந்தப் பந்துகள்தான், அதில் ஒன்றுமே எடுக்கவில்லை. மென்மையாகி விடுகிறது, அதனால் வேகம், ஸ்பின் எதுவும் எடுக்கவில்லை. எனக்கு பந்துகள் பற்றி அதிகம் தெரியாது ஆனாலும் இந்தப் பந்து மென்மையாகி விடும் போது ஒன்றுமே எடுக்காமல் போகிறது. ஜடேஜா நம்பமுடியாத ஒரு வீரராக இருந்து வருகிறார், பீல்டிங்கிலும் அவர் ‘கன்’. அதிக ஓவர்களை வீசும் போதும் சிக்கனமாக வீசுகிறார் ஜடேஜா.

தரம்சலா போட்டியிலும் எங்கள் அணுகுமுறையில் மாற்றமிருக்காது. எங்களால் சிறந்தவற்றை அளிக்க முடியும் போது வெற்றிக்கான நிலைகளில் நாங்கள் எங்களை தொடர்ந்து செலுத்திக் கொண்டேயிருப்போம்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x