Published : 29 Nov 2014 10:47 AM
Last Updated : 29 Nov 2014 10:47 AM
செஸ் விளையாட்டில் மீண்டும் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சரித்திரம் படைத்திருப்பதாகக் கூறுகிறார் ராக்கேஷ் ராவ். கார்ல்சன், பத்து வயது குழந்தை பருவத்தில் களம் இறங்கியது முதல் அவரைப் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார் ‘தி இந்து’ மற்றும் ‘ஸ்போர்ட்ஸ்டார்’நாளிதழின் மூத்த செய்தியாளரான ராக்கேஷ் ராவ். அவர் தனது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்.
முதன் முதலில் கார்ல்சன் நவம்பர், 2004-ல் செஸ் விளையாட ஸ்பெயின் வந்த போது அவரை அனைவரும் அதிசயமாக பார்த்தனர். கார்ல்சன் ஆடிய ஆட்டத்தைவிட குழந்தை முகம் மாறாத அவரை பார்க்கவே அனைவருமே ஆர்வம் காட்டினர். புகைப்படக்காரர்களும் போட்டி போட்டு அவரை படம் எடுத்துத் தள்ளினர். அதனால் தனது விளையாட்டில் கவனம் செலுத்த முடியாமல் தவித்த கார்ல்சன் அனைவரையும் படம் எடுத்தது ‘போதும் போதும்’ என விரட்டினார்.
கால்பந்துடன் வந்த கார்ல்சன்
அடுத்த ஆண்டு துபாய் கிராண்ட்மாஸ்டர் போட்டி நடந்தது. அதில் செய்தி சேகரிக்க துபாய் சென்ற எனக்கு மிகவும் மிரளும் வகையிலான அனுபவம் கிடைத்தது. போட்டி நடைபெற்ற அறைக்குள் விளையாட காத்திருந்த செஸ் ஜாம்பவான்களுக்கு இடையே ஒரு சிறுவன் கால்பந்து ஒன்றை நெஞ்சோடு அணைத்து பிடித்தபடி உள்ளே நுழைந்தான். சிறுவனை பார்த்த வீரர்கள், அவன் பார்வையாளர் ஒருவருடன் வந்திருக்கலாம் எனக் கருதி அவனிடம், ‘ஏய் பொடியனே, இங்கு பந்து விளையாடி தொல்லை தரக் கூடாது. வெளியே போய் விளை யாடு’ என செல்லமாக விரட்டினர். இதைக் கேட்ட சிறுவன், ‘நான் கார்ல்சன். இங்கு உங்களுடன் விளையாடி வெற்றி பெற வந்திருக்கிறேன்’ எனத் தெரிவிக்க அனைவருக்கும் சிரித்து விட்டனர்.
சிரித்தவர்களுக்கு பதிலடி
ஆரம்பத்தில் தன்னைப் பார்த்து சிரித்த பெரும்பாலானவர்களை அடுத்தடுத்த நாட்களில் அதிரடியாக வீழ்த்தி அழ வைத்தார் கார்ல்சன். மிகவும் குழந்தைத்தனமாக இருந்த கார்ல்சன் தனது ஆட்டத்தின் ஒவ்வொரு நகர்த்தலிலும் காட்டிய நுணுக்கம் அனைவரையும் அசர வைத்தது. அப்போது மதுரையை சேர்ந்த செஸ் வீரர் தீபன் சக்ரவர்த்தி, கார்ல்சனுடன் விளையாடி தோல்வி அடைந்தார். அப்போது அந்த தோல்வியை தாங்க முடியாத தீபன், ‘ஒரு சிறுவனிடம் போய் தோற்றுவிட்டேனே’ எனது தனது பயிற்சியாளர் விளாடிமீரோவிடம் கூறி வருத்தப்பட்டாராம்.
அடுத்ததாக விளாடிமீரோவும் விளையாட்டாக கார்ல்சனுடன் ஆடி தோல்வி அடைந்தார். இதைக் கண்டு பலரும் அதிர, சக்ரவர்த்திக்கும் மட்டும் சிறிது மகிழ்ச்சி கிடைத்தது. ஏனெனில், தான் அடைந்த தோல்வி தம் பயிற்சியாளருக்கும் கிடைத்ததில் சக்ரவர்த்திக்கு ஒரு திருப்தி. அப்போது இந்தியாவின் இரண்டாவது முன்னணி வீராங்கனையான ஆந்திராவை சேர்ந்த ஹரிகாவும், மற்றொரு முன்னணி வீராங்கனையான டெல்லியின் தானியா சஜ்தேவும் கூட கார்ல்சனுடன் விளையாடி பல ஆட்டங்களில் தோல்வி அடைந்தனர்.
இரவு நேரத்தில் கார்ல்சனுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாட நிறையபேர் வந்தனர். நேரம் செல்ல, மற்ற அனைவரும் தூக்கம் வருவதாகக் கூறி அங்கிருந்து புறப்பட முற்பட்டனர். ஆனால் விடியும் வரை சோர்வடையாமல் உற்சாகமாக அமர்ந்திருந்த கார்ல்சன், அவர்களை பலவந்தமாக அமர வைத்து விளையாடி தோற்கடித்தார்.
இளம் கிராண்ட்மாஸ்டர்
துபாய் கிராண்ட் மாஸ்டர் போட்டியின்போது தனது 3-வது கிராண்ட்மாஸ்டர் நார்மை பெற்ற கார்ல்சன், அப்போது இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றார். அப்போதே, கார்ல்சன் எதிர்காலத்தில் ஒரு சிறந்த செஸ் சாம்பியன் ஆவார் என நாம் பலரும் எண்ணியது உறுதியாகி விட்டது.
செஸ் தவிர, கால்பந்து மற்றும் வாலிபால் விளையாட்டுகளிலும் அதிக ஆர்வம் காட்டிய கார்ல்சன், செஸ் போட்டி இல்லாத நேரங்களில் கால்பந்து விளையாடத் தவறவில்லை. வேறு எந்த செஸ் விளையாட்டு வீரர் களுக்கும் இல்லாத பழக்கம் இது.
சகோதரியை வீழ்த்த போராட்டம்
கார்ல்சனை செஸ் விளையாட்டில் தோல்வியுறச் செய்தவர் அவரது சகோதரி மட்டும் தான் என கார்ல்சனின் தந்தை எனக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். அந்த தோல்வியை சிறிதும் பொறுக்க முடியாத கார்ல்சன், மீண்டும் ஒரு விளையாட்டுக்கு தன் சகோதரியை அழைத்தாராம்.
ஆனால், மீண்டும் விளையாடினால் கால்சனிடம் தோற்று விடுவோம் என பயந்த அவருடைய சகோதரி மறுத்து விட்டார். சகோதரியை தன்னுடன் விளையாடும்படி தனது தந்தையிடம் அடம்பிடித்து அழுத நாட்கள் கார்ல்சனின் வாழ்க்கையில் உண்டு.
கார்ல்சனின் குழந்தைத்தன போக்குக்கு ஏற்றபடி அவருடன் விளையாட்டாகவே பேசி பேட்டி எடுத்த என்னை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது போல! சென்னையில் விளையாடி வென்றவரை பேட்டி எடுக்கக் காத்திருந்த ஏராளமான பத்திரிகையாளர்களை தவிர்த்து விட்டு, கூட்டத்தின் ஒரு மூலையில் நின்றிருந்த என்னை தேடிப் பிடித்து அழைத்தார் கார்ல்சன். என்னை மறக்காமல் பெயர் சொல்லி அழைத்ததுடன், அதே குழந்தைத்தனமான மனநிலையில் அவர் அளித்த பேட்டியை என்னால் மறக்க முடியாது என்றார் ராக்கேஷ் ராவ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT