Published : 06 Dec 2013 12:45 AM Last Updated : 06 Dec 2013 12:45 AM
இந்தியாவை 141 ரன்களில் வென்றது தென் ஆப்பிரிக்கா
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்ற இப்போட்டியில், 359 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 41 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வியுற்றது.
துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் ஷர்மா 18 ரன்களிலும், தவாண் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். யுவராஜ் சிங் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, விராட் கோலி 31 சேர்த்தார்.
சுரேஷ் ரெய்னா 14 ரன்களில் ரன் அவுட் ஆனார். அப்போது ஜோடி சேர்ந்த தோனி, ஜடேஜே இணை ஓரளவு களத்தில் நிலைத்து நின்றது. ஜடேஜா 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர், தோனியுடன் இணைந்த அஸ்வின் 19 ரன்கள் எடுத்தார். புவனேஷ் குமார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
நிதானமாக பேட் செய்து வந்த தோனி, 65 ரன்கள் எடுத்திருந்தபோது, ஸ்டெயின் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். ஷமி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இந்திய அணி 41 ஓவர்களில் 217 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டெயின், மெக்லரென் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், மோர்கெல் மற்றும் காலிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியது.
தென் ஆப்பிரிக்கா ரன் குவிப்பு...
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை பேட்டிங்க் செய்ய பணித்தது. துவக்க ஆட்டக்காரர்களான ஆம்லா மற்றும் காக் பொறுப்பாக ஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் அரை சதத்தை கடந்தனர்.
இந்த ஜோடி, முதல் விக்கெட்டிற்கு 152 ரன்கள் குவித்திருந்தபோது ஷமி பந்தில், ஆம்லா போல்டானார். பின்னர் வந்த காலிஸும் 10 ரன்களுக்கு ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய குவிண்டன் டி காக், 101 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் சதத்தைக் கடந்தார். மறுமுனையில் ஆடிய கேப்டன் டீவில்லிர்ஸும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அனைத்து பவுலர்களும் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்த நிலையில், இந்திய கேப்டன் தோனி, ஆட்டத்தின் 41வது ஓவரை வீச, கோலியை அழைத்தார். 4வது பந்தில் சிக்ஸர் கொடுத்த கோலி, அடுத்த பந்திலேயே சதமடித்த டி காக்கை அவுட்டாக்கினார்.
அடுத்து வந்த டுமினி, கேப்டனுடன் ஜோடி சேர்ந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இருவரும் இணைந்து பவுண்டரிகள் சிக்ஸர்கள் என விளாசித் தள்ளினர். இந்த ஜோடியினால், கடைசி பத்து ஓவர்களில் மட்டும் 135 ரன்கள், அந்த அணிக்குச் சேர்ந்தது. மோஹித் சர்மா வீசிய 49வது ஓவரில், மூன்று பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் என 23 ரன்களை இவர்கள் எடுத்தனர். ஆட்டத்தின் கடைசி ஓவரில், கேப்டன் டீவில்லிர்ஸ் 47 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமியின் பந்தில் ஆட்டமிழந்தார். 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை அவர் அடித்திருந்தார்.
அடுத்த இரண்டு பந்துகளில் ஆறு ரன்கள் வந்தது. இதனால், 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 358 ரன்கள் குவித்த தென் ஆப்பிரிக்கா, இந்தியாவிற்க்கு 359 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. சிறப்பாக பந்து வீசிய இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
WRITE A COMMENT