Published : 21 Feb 2017 02:10 PM
Last Updated : 21 Feb 2017 02:10 PM
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டனின் முன் அணித்தேர்வு பிரச்சினைகளுடன் அபாய கோலி சவாலும் உள்ளது என்று முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான இயன் சாப்பல் தெரிவித்துள்ளார்.
ஈஎஸ்பிஎன் - கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் கூறியிருப்பதாவது:
13 டெஸ்ட் போட்டிகளில் உள்நாட்டில் கோலி தலைமையில் இந்திய அணி சாதித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா 2015-16-ல் 108 ரன்களில் தோல்வியுற்ற டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு அருகில் அந்த அணி வந்ததைத் தவிர வேறு அணிகள் இந்திய அணிக்கு நெருக்கமாக வரவில்லை.
கோலியின் இந்த வெற்றிப்போக்கை நிறுத்த ஆஸ்திரேலிய அணியினர் மனரீதியாக வலுவாக இருப்பதோடு, உயர்ந்தபட்ச திறமைகளை வெளிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
துபாயில் இந்திய பிட்ச்கள் போன்று தயாரித்து அதில் ஸ்மித் அணியினர் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் இந்திய பிட்சில் உண்மையான மேட்ச் சூழலில் கடும் நெருக்கடியை சமாளித்து ஆட்கொள்வது என்பது வேறு ஒரு விஷயம், அதுவரை இந்த துபாய் பயிற்சி என்பது வெறும் கோட்பாட்டளவில் சவுகரியமானதாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவின் தலைவலிகள்:
அனுபவமற்றவராக இருந்தாலும் நன்றாக ஆடி வரும் ரென்ஷாவை தொடக்கத்தில் களமிறக்கப் போகிறார்களா அல்லது காயத்திற்கு பெயர் போன ஆனால் திறமை வாய்ந்த ஷான் மார்ஷை இறக்கப் போகிறார்களா என்பது முதல் தலைவலி. ரென்ஷா ஸ்லிப்பில் நல்ல பீல்டர். ரென்ஷா தொடக்க வீரராக களமிறங்கினால் ஷான் மார்ஷ் மிடில் ஆர்டரில் இறங்க வேண்டும். அப்படி இறக்கினால் உஸ்மான் கவாஜாவா அல்லது இன்னொரு ஆல்ரவுண்டரா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
சரி ஆல்ரவுண்டர் என்றாலு மிட்செல் மார்ஷா அல்லது கிளென் மேக்ஸ்வெலா என்பதையும் தீர்மானிக்க வேண்டும். மேக்ஸ்வெலை எடுப்பதில் ரிஸ்க் உள்ளது, அவர் வெடிபொருள் போன்றவர், சிலவேளைகளில் பட்டாசு வெடிக்கும் அல்லது சில சமயம் வெடிக்காது போகும்.
இன்னொரு கவலை மேத்யூ வேடின் விக்கெட் கீப்பிங். அவரது விக்கெட் கீப்பிங் இந்தச் சூழ்நிலைகளில் சரியில்லாமல் போயுள்ளது. விராட் கோலிக்கு ஒரு கேட்சையோ, ஸ்டம்பிங்கையோ மேத்யூ வேட் கோட்டை விட்டால் அவ்வளவுதான். ஸ்பின்னர்களுக்கு ஸ்டம்ப் அருகில் நின்று அவர் கீப் செய்யும் திறமை கேள்விக்குரியதே. ஆனால் அவர் எடுக்கும் ரன்களுக்காக அவரை அணியில் சேர்த்துள்ளனர், ஆனால் அவர் எடுக்கும் ரன்களை விட அவர் செய்யும் தவறுகளினால் கொடுக்கும் ரன்கள் அதிகமானால்?
மேலும் பேட்டிங் வரிசையில் ஸ்மித் தன்னை 3-ம் நிலையில் களமிறக்கிக் கொள்வது வரவேற்கத்தக்கது. ஏனெனில் 3 இடது கை பேட்ஸ்மென்களை தொடக்கத்தில் களமிறக்குவது அஸ்வினுக்கு நாம் கூடுதல் சவுகரியத்தை அளிப்பதாகும், ஏனெனில் இடது கை வீரர்களுக்கு வீசுவது என்பது அஸ்வினுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. எனவே வலது, இடது சேர்க்கையில் களமிறக்குவது பயன் தரலாம்.
இதனையடுத்து இந்திய பிட்ச்களில் எப்போது வேகப்பந்து வீச்சாளர்களிடம் அளிப்பது எப்போது ஸ்பின் பவுலர்களிடம் அளிப்பது என்று கணக்கு உள்ளது. மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரது ஊடுருவும் பந்து வீச்சு சிறிய சிறிய ஸ்பெல்களாக பயன்படுத்துவது நல்லது. மேலும் அதி அபாய வீரர் விராட் கோலி பேட்டிங்குக்கு களமிறங்கும் போது ஸ்டார்க், ஹேசில்வுட் ஃப்ரெஷ் ஆக இருப்பது அவசியம்.
வலைகளில் நீண்டகாலப் பயிற்சிகளுக்குப் பிறகு தன்னம்பிக்கையான ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது. இதே தன்னம்பிக்கையை சவாலான இந்தத் தொடரில் பராமரிப்பது சவாலாகும், இந்தச் சவாலை பயணிக்கும் அணிகள் அரிதாகவே பராமரித்துள்ளது.
இவ்வாறு அந்தப் பத்தியில் எழுதியுள்ளார் இயன் சாப்பல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT