Published : 20 Sep 2016 03:43 PM
Last Updated : 20 Sep 2016 03:43 PM
கான்பூர் பிட்ச் பெரிய அளவில் பந்துகள் திரும்பும் ஆடுகளமாக இருக்காது என்று பிட்ச் தயாரிப்பாளர் கூறியுள்ள நிலையில், நியூஸிலாந்து அணி ஸ்பின்னர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து அணியில் மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, மார்க் கிரெய்க் ஆகிய திறமையான ஸ்பின்னர்கள் உள்ளனர். முதல் நாளிலிருந்தே திரும்பும் பிட்ச்கள் தேவை என்று கோரி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அலிஸ்டர் குக் தலைமையில் இங்கு தோனி தலைமை இந்திய அணி தோல்வி கண்டதையடுத்தே பிட்ச் பற்றிய பேச்சுக்கள் பலமாக எழத் தொடங்கின. மாறாக கடந்த முறை தென் ஆப்பிரிக்கா அணி 3-0 என்று உதை வாங்கியது இந்திய பிட்ச்களின் சமநிலையற்ற தன்மையால்தான் என்ற விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் நியூஸிலாந்து தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே பிட்ச் பற்றிய விவாதங்கள் தொடங்கியுள்ளன.
அஜிங்கிய ரஹானே கூறியதாவது:
நாங்கள் எந்த அணியையும் எளிதானதாக எடைப் போட மாட்டோம். நியூஸிலாந்து ஸ்பின்னர்களை நாங்கள் பெரிய அளவில் மதித்தாலும் அவர்களை நல்ல முறையில் வீச அனுமதிக்க மாட்டோம். அவர்களை ஆதிக்கம் செலுத்துவோம்.
கான்பூர் பிட்ச் நிச்சயம் திரும்பும் பிட்சாகவே இருக்கும். சுழற்பந்துக்கு ஆதரவான பிட்ச்களே நமது பலம், நாம் நம் பலத்திற்குத்தான் ஆட முடியும். ஆனால் இப்போதைக்கு பிட்ச் எப்படி செயல்படும் என்பதை என்னால் கூற முடியவில்லை.
3 அல்லது 4 நாட்களில் வெற்றி பெறுவோம் என்ற சிந்தனையில் நாங்கள் களமிறங்குவதில்லை. போட்டிகளை வெல்ல வேண்டும் என்பதே முக்கியம்.
இந்த சீசனில் 13 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறோம். அதற்கு இந்த முதல் டெஸ்ட்டில் வெற்றி பெறுவது சீசனுக்கான நல்ல தொடக்கமாக அமையும். ஒருநாள் போட்டிகளிலும் ஆடுகிறோம், ஆனால் இப்போதைக்கு கவனம் டெஸ்ட் போட்டிகளின் மீதே.
எந்த ஒரு தொடரிலும் முதல் டெஸ்ட் மிக மிக முக்கியமானது, அங்கிருந்துதான் உத்வேகம் பெற முடியும், ஆம்! நாங்கள் முதல் டெஸ்ட்டிற்கு தயாராகி விட்டோம்.
இவ்வாறு கூறினார் ரஹானே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT