Published : 12 Mar 2017 12:56 PM
Last Updated : 12 Mar 2017 12:56 PM
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 259 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
காலே நகரில் நடைபெற்ற இந்த டெஸ்ட்டில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 494 ரன்களும் வங்கதேச அணி முதல் இன்னிங் ஸில் 312 ரன்களும் எடுத்தன. 182 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 69 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. தரங்கா 115, சந்திமால் 50 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 457 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்தது. தமிம் இக்பால் 13, சவுமியா சர்க்கார் 53 ரன்களுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.
அந்த அணி மேற்கொண்டு 130 ரன்களை சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சவுமியா சர்க்கார் 53, தமிம் இக்பால் 19, மோமினுல் ஹக் 5, முஸ்பிஹூர் ரகிம் 34, ஷாகிப் அல் ஹசன் 8, மஹ்முதுல்லா 0, லிட்டன் தாஸ் 35, மெகதி ஹசன் 28, தஸ்கின் அகமது 5, முஸ்டாபிஸூர் ரஹ்மான் 0 ரன்களில் வெளியேற வங்கதேச அணி 60.2 ஓவர்களில் 197 ரன்களுக்கு சுருண்டது.
இலங்கை அணி தரப்பில் ரங்கனா ஹெராத் 6, பெரேரா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களுக்கு மேல் ஹெராத் கைப்பற்றுவது இது 23-வது முறையாகும். மேலும் இடது கை சுழற்பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்கள் கைப்பற்றிய நியூஸிலாந்தின் டேனில் வெட்டோரியின் (362) சாதனையையும் ஹெராத் முறியடித்தார். ஹராத் இதுவரை 366 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார்.
259 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி வரும் 15-ம் தேதி கொழும்பு நகரில் தொடங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT