Published : 21 Apr 2017 02:54 PM
Last Updated : 21 Apr 2017 02:54 PM
இந்தூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 60 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 104 ரன்கள் விளாசிய ஆம்லாவின் சதம் வீணாக மும்பை இந்தியன்ஸ் முதல் முறையாக அதிகபட்ச இலக்கை ஐபிஎல் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக துரத்தியது.
ஆம்லா சாதனைத் துளிகள்:
டி20 கிரிக்கெட்டில் ஆம்லாவின் முதல் சதமாகும் இது, இதற்கு முன்னர் அவரது அதிகபட்ச ஸ்கோர் 97 ரன்களாகும்.
நேற்று ஒரே ஆட்டத்தில் லஷித் மலிங்காவை மட்டும் 16 பந்துகளில் 51 ரன்களை விளாசினார் ஹஷிம் ஆம்லா, இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் ஒருமுறை விராட் கோலியிடம் ஒருநாள் போட்டியில் மலிங்கா வாங்கிக் கட்டிக்கொண்ட பிறகு அதிகபட்ச ரன்களை அவர் ஒரே வீரருக்கு எதிராக விட்டுக் கொடுத்துள்ளார்.
மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் உமேஷ் யாதவ்வுக்கு எதிராக ஒரு போட்டியில் விராட் கோலி 17 பந்துகளில் 52 ரன்களை எடுத்ததே அதிகம், இது டெல்லி அணிக்கு எதிராக ஆர்சிபி 2013 ஐபிஎல் போட்டியில் விராட் செய்த சாதனையாகும்.
முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் விளாச, தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 15.3 ஓவர்களில் 199 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அங்கு மலிங்கா 4 ஓவர்களில் 58 ரன்கள் கொடுத்தது போல் இங்கு இசாந்த் சர்மா 4 ஓவர்களில் 58 ரன்களை விட்டுக் கொடுத்தார். கிங்ஸ் லெவன் பவுலர்கள் அனைவரும் ஓவருக்கு 10 அல்லது அதற்கும் கூடுதலான ரன்களை விட்டுக் கொடுத்தனர்.
மும்பை விரட்டலில் பார்த்திவ் படேல் அனாயசமாக ஆடி 18 பந்துகளில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 37 ரன்களை விளாச ஜோஸ் பட்லர் 7 பவுண்டரிக்ள் 5 சிக்சர்களுடன் 37 பந்துகளில் 77 ரன்களையும், ரானா 7 சிக்சர்களுடன் 34 பந்துகளில் 62 ரன்களை விளாசினார். ஹர்திக் பாண்டியா 4 பந்துகளில் 15 ரன்கள் வெளுத்தார். 199 ரன்கள் இலக்கு 16 ஓவர்களுக்குத் தாங்கவில்லை.
கிங்ஸ் லெவன் இன்னிங்ஸில் சஹா போராடினார் முடியவில்லை, மேக்ஸ்வெல் 18 பந்துகளில் 40 ரன்களை விளாசினார்.
கிங்ஸ் லெவன் இன்னிங்ஸில் 2 ஓவர்கள் ஆட்டத்தை மாற்றியது, 15 மற்றும் 16-வது ஓவர்களில் ஆம்லா, மேக்ஸ்வெல் 50 ரன்களை விளாசித்தள்ளினர்.
இன்னொரு திருப்பு முனை அதிரடி வீரர் ஜோஸ் பட்லருக்கு 3-வது ஓவரில் டேவிட் மில்லர் கேட்ச் விட்டார், அதனால் அவர் 37 பந்துகளில் 77 ரன்களை விளாசி இலக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்.
ஆட்ட நாயகனாக ஜோஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT