Published : 24 Sep 2016 03:00 PM
Last Updated : 24 Sep 2016 03:00 PM
கான்பூர் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி அஸ்வின், ஜடேஜாவைத் தாக்குப் பிடிக்க முடியாமல் 262 ரன்களுக்குச் சுருண்டது.
154/1 என்று இருந்த நியூஸிலாந்து உணவு இடைவேளையின் போது 238/5 என்ற நிலையிலிருந்தது, பிறகு 262 ரன்களுக்குச் சுருண்டது. கடைசி 5 விக்கெட்டுகளை 5 ஓவர்களில் இழந்தது. இதில் ஜடேஜாவின் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள்.
முன்னதாக இன்று 2-வது விக்கெட்டுக்காக 124 ரன்களைச் சேர்ந்த லாதம், கேன் வில்லியம்சன் கூட்டணியில் லாதம் 58 ரன்களில் அஸ்வினின் ஆஃப் வாலி பந்தை தவறான லைனில் ஆடியதால் எல்.பி.ஆனார். டெய்லர் 2 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஜடேஜாவின் உள்ளே வந்த பந்தை மீண்டும் தவறான லைனில் ஆடி எல்.பி.ஆனார். ஆனால் இதனை 100% துல்லியமான தீர்ப்பு என்று கூற முடியாது.
நேற்று பிட்சின் ஸ்பின்னை சரியாகக் கணித்து முன்னால் வந்து ஆடிய கேன் வில்லியம்சன், இன்று அஸ்வினின் லைன் மற்றும் லெந்த் வேறு மாதிரி அமையவும், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஒரு ஸ்பாட் இருந்ததால் அதில் பிட்ச் செய்யும் போது பந்துகள் திரும்பி எழும்பின. இதனால் ‘சரி பின்னங்காலில் ஆடலாம்’ என்று கேன் வில்லியம்சன் முடிவெடுத்தார், ஆனால் ஸ்பாட்டில் பிட்ச் ஆன அஸ்வின் பந்து ஸ்கொயராகத் திரும்பி வில்லியம்சன் அதிர்ச்சிக்கிடையே பவுல்டு ஆனது. வில்லியம்சன் 7 பவுண்டரிகளுடன் 75 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ரோங்கியும் சாண்ட்னரும் இணைந்தனர். சாண்ட்னர் நல்ல தடுப்பாட்ட உத்தியை வெளிப்படுத்த ரோங்கி உண்மையில் அருமையாக ஆடினார், அதுவும் ஸ்பின்னர்களை பின்னங்காலில் சென்று தொடர்ண்டு பாயிண்ட், கவர் பாயிண்ட் திசைகளில் ஆடினார், இப்படியாக இவர் 38 ரன்களை 6 பவுண்டரிகளுடன் சேர்த்து அச்சுறுத்தி வந்த நிலையில் ஜடேஜா ஓவர் த விக்கெட்டில் வீசிய பந்தை ஸ்வீப் செய்ய முயன்று பின்னங்காலில் வாங்கி எல்.பி. என்று தீர்ப்பளிக்கப்பட்டார், ஆனால் திரும்பும் பிட்சில் ஜடேஜா ஓவர் த விக்கெட்டில் வீசும் போது இது அவுட் தர முடியாததாகும், ரீப்ளேயும் பந்து ஆஃப் ஸ்டம்பை தவறவிடுவதாகவே தெரிந்தது.
மிட்செல் சாண்ட்னர் 107 பந்துகளைச் சந்தித்து 32 ரன்கள் எடுத்த போராட்டம் அஸ்வினின் நன்றாக தூக்கி வீசப்பட்ட ஆஃப் ஸ்பின் பந்துக்கு முன்னால் வந்து ஆடியதால் எடுத்த எட்ஜ் மூலம் முடிவுக்கு வந்தது. பிறகு ஜடேஜா, மார்க் கிரெய்க், இஷ் சோதி ஆகியோரை அடுத்தடுத்து எல்.பி. செய்தார். இதில் சோதிக்குக் கொடுத்த தீர்ப்பும் சந்தேகத்திற்குரியதாக இருந்தது, பந்து லெக் ஸ்டம்புக்கு வெளியே செல்வதாகத் தெரிந்தது. டிரெண்ட் போல்ட், ரோஹித் சர்மாவின் நல்ல கேட்சுக்கு அதே ஓவரில் வெளியேறினார். அடுத்த ஓவரில் அஸ்வினின் பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து வாட்லிங் (21) அவுட் ஆனார்.
ஜடேஜா 73 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.
56 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி சற்று முன் வரை தன்னுடைய 2-வது இன்னிங்ஸில் ராகுல் (38) விக்கெட்டை இழந்து 68 ரன்கள் எடுத்தது. முரளி விஜய் 23 ரன்களுடனும் புஜாரா 8 ரன்களுடனும் ஆடி வருகின்றனர். இந்தியா 129 ரன்கள் முன்னிலை பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT