Published : 24 Jul 2016 02:59 PM
Last Updated : 24 Jul 2016 02:59 PM
ஆன்ட்டிகுவாவின் மந்தமான, ஸ்விங் ஆகாத, பந்துகள் எழும்பாத ஆட்டக்களத்தில் மொகமது ஷமி நேற்று சில பந்துகளை பேட்ஸ்மென் எதிர்பார்த்ததை விட அதிக உயரம் எழும்பச் செய்தார்.
மே.இ.தீவுகளின் ஷனான் கேப்ரியல் புதிய பந்தில் செய்ததை ஷமி இன்னிங்ஸ் முழுதுமே செய்ய முடிந்தது. சில வேளைகளில் பந்து செங்குத்தாகக் கூட எழும்பியது. முன்பெல்லாம் ஷமி விக்கெட் எடுத்தால் பந்து பிட்சில் சறுக்கிக் கொண்டு சென்று பேடைத் தாக்கும் அல்லது ஸ்டம்பைத் தாக்கும். பந்தும் சற்றே தாழ்வாகவே வரும், மேலும் விக்கெட் கீப்பர் ஸ்லிப் திசைகளில் கேட்ச் மூலம் ஷமி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.
சில வேளைகளில் தளர்வான சில பந்துகளை ஷமி லெக் திசையில் வீசி சுலப ரன்களையும் வழங்கியதுண்டு. மேலும் காயங்களும் அவரை அச்சுறுத்தின.
இந்நிலையில்தான் அவரது ரன் அப் பற்றிய விவாதம் எழுந்தது. கிரீசிற்கு ஓடி வரும் போது லாங் ஸ்டெப்களை வைத்து ஷமி ஓடி வந்து வீசிக் கொண்டிருந்தார், இதனால் கிரீஸிற்கு அருகே வரும்போது பந்தை ரிலீஸ் செய்யும் போது கை போதிய உயரத்தில் இல்லாமல் போய்விடுவதும் நிகழ்கிறது. மேலும் நீண்ட ஸ்டெப்களை வைத்து ஓடிவருவதால் கிரீஸ் அருகே வரும்போது கட்டுப்பாடும் சில வேளைகளில் இழக்கப்படுகிறது.
இந்நிலையில் 2015 உலக்கோப்பை தருணத்தில் தனது பந்து வீச்சு ஓட்டத்தை ஷார்ட் ஸ்டெப்களாக மாற்றப்போவதாக அவர் தெரிவித்ததோடு இது தனக்கு ஷோயப் அக்தர் கொடுத்த அறிவுரை என்பதையும் ஷமி நேர்மையுடன் தெரிவித்தார்.
ஷார்ட் ஸ்டெப்களில் ஓடிவருவதற்கும் கூடுதல் பவுன்சுக்கும் நேரடியாகத் தொடர்பில்லை என்று கூறும் மே.இ.தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப், ஷார்ட் ஸ்டெப் ரன் அப் மூலம் கிரீஸ் அருகே பந்தை ரிலீஸ் செய்யும் போது கையை கொஞ்சம் கூடுதல் உயரம் செல்லுமாறு செய்து பந்தை ரிலீஸ் செய்வதால் பவுன்ஸ் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கலாம் என்றார்.
தற்போது ஷமி பந்தை கொஞ்சம் கூடுதல் உயரத்திலிருந்து ரிலீஸ் செய்கிறார் என்று கூறிய இயன் பிஷப், பந்தை எங்கு பிட்ச் செய்ய வேண்டுமென்று ஷமி நினைக்கிறாரோ அவரது பாதமும் அதற்கு நேராக உள்ளது இது ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளருக்கான ஒரு தன்மை என்று கூறுகிறார் இயன் பிஷப்.
வேகம், ஸ்விங், கூடுதலாக அவர் தனக்காகக் கண்டுபிடித்துக் கொண்ட பவுன்ஸ் என்று ஷமி முழுக்கட்டுப்பாட்டுடன் அருமையான லெந்தையும் தற்போது பிடித்துள்ளார். இதனால் பேட்ஸ்மென்களை அதிகம் ஆடச்செய்கிறார், இது ஷமியின் ஒரு புதிய தொடக்கம் என்றே கூற வேண்டும்.
மே.இ.தீவுகளில் அதிகபட்ச முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டிய கிரெய்க் பிராத்வெய்ட் கூறும்போது, “இன்னிங்ஸின் தொடக்கத்தில் இத்தகைய பிட்சில் இவ்வளவு நன்றாக வீசிய பவுலர்களை நான் பார்த்ததில்லை. மேலும் நல்ல நேர்த்தியாக கட்டுக்கோப்புடன் வீசினர். களவியூகமும் ஆக்ரோஷமாக நெருக்கமாக அமைக்கப்பட்டது. பவுலர்கள் தங்கள் பீல்டுக்கு ஏற்ப பந்து வீசினர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT