Published : 25 Dec 2013 12:00 AM
Last Updated : 25 Dec 2013 12:00 AM
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் எண்ணம் துளியும் இல்லை என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியாவிடம் இழந்ததைத் தொடர்ந்து அதன் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான கிரீம் ஸ்வான் ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து பீட்டர்சனும் ஓய்வுபெறலாம் என தகவல்கள் வெளியாயின. அதை முற்றிலும் மறுத்த பீட்டர்சன் மேலும் கூறியிருப்பதாவது: எனக்கு இப்போது 33 வயதாகிறது. எப்போதும் போலவே சிறப்பாக பேட் செய்து வருகிறேன். இங்கிலாந்து அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போகும்போது நான் ஓய்வுபெறுவேன். தற்போதைய நிலையில் நான் நன்றாகவே விளையாடி வருகிறேன்.
நேற்று நடந்த விஷயங்களுக்காக எனது சக்தியை செலவிடமுடியாது. “பாக்ஸிங் டே” அன்று தொடங் கவுள்ள மெல்போர்ன் டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடுவதில்தான் எனது கவனம் உள்ளது என்றார். தொடர்ச்சியாக 3 டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ளதால், இங்கிலாந்து அணி புதுப்பிக்கப்படும் சூழலுக்கு தள்ளப்படுமா என பீட்டர்சனிடம் கேட்டபோது, “நாங்கள் உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் என்பதை ஏற்கெனவே நிரூபித்துவிட்டோம். 5-0 என்ற கணக்கில் தொடரை இழந்தால் அது கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் ஒருபோதும் சிறந்த நாளாக இருக்காது.
ஆஸ்திரேலியா சிறப்பாக விளையாடியது. இங்கிலாந்து அணி தோல்வியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்து அணி நம்பிக்கையை இழந்துவிடவில்லை. “பாக்ஸிங் டே” டெஸ்ட் போட்டி தொடர்பாக பயனுள்ள விவாதங்கள் டிரெஸ்ஸிங் அறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன” என்றார்.-பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT