Published : 19 Dec 2016 05:10 PM
Last Updated : 19 Dec 2016 05:10 PM

முதல் சதமே முச்சதம்; வரலாறு படைத்த கருண் நாயர்: இந்தியா 759 ரன்கள் குவித்து புதிய சாதனை

சென்னை டெஸ்ட் போட்டியில் 4-ம் நாளான இன்று கருண் நாயர் தனது முதல் சதத்தையே முச்சதமாக மாற்றி 303 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து சாதனை புரிந்தார். இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 759 ரன்கள் என்று டெஸ்ட் போட்டியில் தங்கள் அதிகபட்ச ரன்களை எட்டியது.

381 பந்துகளை எதிர்கொண்ட கருண் நாயர் 32 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 303 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார், இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 759 ரன்கள் என்று டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்கள் முந்தைய அதிகபட்ச ஸ்கோரான 726 ரன்களைக் கடந்து 759 ரன்கள் குவித்தது. இங்கிலாந்துக்கு எதிராக இதுவே அதிகபட்ச ரன்களாகும். ஒட்டுமொத்தமாக இது 7-வது பெரிய டெஸ்ட் ஸ்கோராகும்.

கருண் நாயர் 306 பந்துகளில் 200 ரன்கள் எடுத்து இரட்டைச் சதம் பூர்த்தி செய்த பிறகு அடுத்த 103 ரன்களுக்கு 75 பந்துகளே எடுத்துக் கொண்டு அதிரடி காட்டினார். இவரும் ஜடேஜாவும் இணைந்து 138 ரன்களை 19 ஓவர்களில் விளாசித் தள்ளினர். ஜடேஜா 55 பந்துகளில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கருண் நாயரிடம் விராட் கோலியைக் காட்டிலும் அதிக ஷாட்கள் உள்ளது, இவரது இன்னிங்ஸின் முக்கிய அம்சம் சக்தி வாய்ந்த ஸ்வீப்ஷாட்கள், ரிவர்ஸ் ஸ்வீப், அப்பர் கட் ஆகியவை அடங்கும், இதைத்தவிர கட், புல், டிரைவ் என்று அனைத்து ஷாட்களையும் அவர் வெளிப்படுத்தி சேவாகிற்குப் பிறகு முச்சதம் கண்ட வீரரானார் கருண் நாயர். மேலும் டெஸ்ட் வரலாற்றில் முதல் சதத்தையே முச்சதமாக மாற்றிய 3-வது வீரராகத் திகழ்கிறார் கருண் நாயர். ரஷீத் படேல் பந்தை கட் செய்து பவுண்டரிக்கு விரட்டி தான் எடுத்த இந்த முச்சத ஷாட்டை அவர் வாழ்நாள் முழுதும் மறக்க மாட்டார்.

சென்னையில் சேவாக் தென் ஆப்பிரிக்காவை புரட்டி எடுத்து 319 ரன்கள் எடுத்த பிறகு கருண் நாயர் சென்னையில் 2-வது முச்சத நாயகரானார். கடைசி 10 ஓவர்களில் 79 ரன்கள் விளாசப்பட்டது.

கருண் நாயர் 30களில் இருந்த போது அவருக்கு கேட்ச் விடப்பட்டது, மேலும் ஒருமுறை ரிவர்ஸ் ஸ்வீப்பில் அவுட் முறையீட்டை நடுவர் நிராகரிக்க இங்கிலாந்திடன் ரிவியூ இல்லாமல் போனதும் கருண் நாயரின் அதிர்ஷ்டம். இரட்டைச்சதம் கடந்த பிறகு ஜோ ரூட் கேட்ச் விட்டார், விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ ஸ்டம்பிங் வாய்ப்பைக் கோட்டை விட்டார்.

இங்கிலாந்து ஒரு சமயத்தில் இந்திய அணியின் டிக்ளேரை எதிர்நோக்கி சொதப்பலாக ஆடினர், குக் கேப்டன்சி உண்மையில் மறுபரிசீலனைக்குரியதே. இன்று அவரது மனநிலை ஆட்டத்திலேயே இல்லை என்று கூறும் அளவுக்கு சொதப்பல்கள் நிரம்பி வழிந்த்து.

இன்று 391/.4 என்ற நிலையில் கருண் நாயர் 71 நாட் அவுட் என்று தொடங்கினார், ஒரே நாளில் 232 ரன்களை விளாசியுள்ளார். முரளி விஜய் 17-ல் இருந்தவர் 29 ரன்களில் டாசனின் முதல் விக்கெட்டாக எல்.பி.ஆனார். அஸ்வின் (67), கருண் நாயர் இணைந்து ஸ்கோரை 435 ரன்களிலிருந்து 616 ரன்களுக்கு உயர்த்தினர், அஸ்வின் 6 பவுண்டரி 1 சிக்சர் அடித்து பிராடிடம் ஆட்டமிழந்தார்.

தற்போது அஜிங்கிய ரஹானே இடமே கேள்விக்குறியாகிவிட்டது. 282 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. கருண் நாயர் 303 நாட் அவுட். இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கி ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி 190 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். 3 பிரதான ஸ்பின்னர்கள் மட்டும் இந்த 759 ரன்களில் 472 ரன்களை வாரி வழங்கியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் மூவர் இணைந்து 249 ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x