Published : 26 Sep 2016 04:35 PM
Last Updated : 26 Sep 2016 04:35 PM
டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து தானும் அனில் கும்ப்ளேவும் புஜாராவிடம் விவாதித்து அவர் வேகமாக ரன்களை எடுக்க வேண்டியுள்ளதை வலியுறுத்தினோம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மே.இ.தீவுகளுக்கு எதிரான சமீபத்திய தொடரில்தான் சர்ச்சைக்குரிய முறையில் புஜாரா உட்கார வைக்கப்பட்டு ரோஹித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். புஜாரா அங்கு 67 பந்துகளில் 16 ரன்களையும் பிறகு 159 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டும் கேப்டனையும், கும்ப்ளேவையும் அதிருப்திக்குள்ளாக்கியது.
எந்தவொரு ‘நட்சத்திர’ வீரரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடத்தேர்வு செய்யாத நிலையில் தனது விரைவு கதி ரன் குவிப்பை மேம்படுத்த புஜாரா துலிப் கோப்பை கிரிக்கெட்டில் ஆடி, அதுவும் கடினமான பிங்க் பந்தில், பகலிரவு ஆட்டத்தில் 363 பந்துகளில் 256 ரன்களை விளாசினார். பிறகு தற்போது கான்பூர் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் 62, 78 என்று ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து கோலி கூறியதாவது: “அழுத்தங்களை நன்றாக கையாள்கிறார் புஜாரா. இன்னிங்ஸின் ஒரு கட்டத்திற்குப் பிறகு அணிக்காக விரைவாக ரன் எடுக்க வேண்டிய தேவை உள்ளது. அங்குதான் இதனை புஜாரா பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று கருதினோம். இதனை அவரிடம் தெரிவிக்க வேண்டும் அவ்வளவே. அவர் தனது ஆட்டம் குறித்து கடினமாக உழைப்பவர். துலீப் டிராபியில் நல்ல ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார், தற்போதும் கான்பூரில் 65% என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் எடுத்தார். இது என்னைப்பொறுத்தவரை சிறந்த வெளிப்பாடு. புஜாரா இப்படி பேட் செய்வதைப் பார்க்கவே ஆர்வமாக இருந்தோம்.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் இரட்டைச் சதங்களைப் பார்த்தோமானல் ஸ்பின்னர்களை ஆதிக்கம் செலுத்தினார். அதைத்தான் அவரிடமிருந்து எப்போதும் எதிர்பார்க்கிறோம். அவர் தன்னை புதைத்துக் கொண்டு ஆடுவதை நாங்கள் விரும்பவில்லை. அவர் ரன்கள் எடுக்கத் தொடங்கிவிட்டால் எதிரணியினருக்குக் கடினம்தான். இதைத்தான் அவருக்கு தெரிவிக்க விரும்பினோம்.
அணிக்கு என்ன தேவை என்பதை புரிந்து வைத்திருக்கும் வீரர் அவர். இப்போது அவர் பாசிட்டிவ் ஆக ஆடி வருகிறார். ஆனால் அவர் ஒருமுறை கூட எங்களிடம் இதுதான் தனக்கு சவுகரியமானது, இப்படி ஆடுவதுதான் பாதுகாப்பு என்று கூறவில்லை. இப்படிப்பட்ட குணாம்சங்கள்தான் வெற்றிக்கு முக்கியம்.
நாங்கள் ஓய்வறையில் பேசியது என்னவெனில், கிரிக்கெட்டை இந்த விதத்தில் ஆடப்போகிறோம் என்பதையே. இதில் சொந்த ஆட்டங்களில் வெற்றி கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். ஆனால் இலக்கு வெற்றியே. நீண்ட நாட்களுக்கு உயர்தர அணியாக இருக்க விரும்புகிறோம். சொந்த ஆட்டம் பற்றிய கவலைகளை மனதிலிருந்து எடுத்துவிட்டால் தானாகவே அது கைகூடும்” என்றார் விராட் கோலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT