Published : 15 Jun 2016 02:25 PM
Last Updated : 15 Jun 2016 02:25 PM
விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் சதங்களை விளாசியது முதல் இவரையும் சச்சினையும் ஒப்பிட்டு பலரும் பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
இதில் சமீபமாக பாகிஸ்தான் ‘கிரேட்’ இம்ரான் கான், விராட் கோலி பேட்டிங் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இது பற்றி கூறியதாவது:
“கிரிக்கெட் ஆட்டம் பல காலக்கட்டங்களைக் கொண்டது. 80’களில் விவ் ரிச்சர்ட்ஸ், அதன் பிறகு சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, இவர்கள் இருவரும் அனைவரையுமே பின்னுக்குத் தள்ளி தனித்துவமாக விளங்கினர். ஆனால் நான் பார்த்ததிலேயே விராட் கோலிதான் ஒரு முழுமையடைந்த பேட்ஸ்மெனாக இருக்கிறார். அவர் பலதிறம் வாய்ந்தவர், இரண்டு கால்களும் விரைவு கதியில் களத்தின் அனைத்து பகுதிகளிலும் இயங்குகிறது.
விராட் கோலியின் திறமை மற்றும் உத்தி தவிர, அவரிடம் ஒரு இயற்கையான மனப்போக்கு உள்ளது, சச்சினை விடவும் இவரிடத்தில் எதிர்பாரா விளைவுகளை ஏற்படுத்தும் மனப்போக்கு உள்ளது. கடினமான சூழ்நிலைகளிலும் விராட் கோலி தன்னை நிரூபிக்கிறார், ஆனால் சில வேளைகளில் சச்சினால் இது முடியாமல் போயுள்ளது” என்றார்.
உலகக்கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான கோலியின் இன்னிங்ஸை விதந்தோதிய இம்ரான் கூறும்போது, “பாகிஸ்தான் தோற்பதை பார்ப்பது வேதனையானது. நான் பேட்ஸ்மெனை ஒரு பவுலர் பார்வையிலிருந்தே பார்ப்பவன். பேட்ஸ்மெனை எப்படி வீழ்த்துவது என்ற கோணத்தில் மட்டுமே நான் பார்ப்பேன். பாருங்கள்! எவ்வளவு கடினமான சூழ்நிலையில் விராட் கோலி எவ்வளவு நன்றாக ஆடிவிட்டார். அவர் மற்றெல்லோரை விடவும் சிறந்தவர், சர்வதேச அளவிலும் விராட் கோலி சிறந்த வீரர் என்றே நான் கூறுவேன். எந்த ஒரு போட்டியிலும் அவர் இனி இப்படி ஆடிவிடுவார் என்றே நான் கருதுகிறேன்” என்றார்.
இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு கிரிக்கெட் தொடர் குறித்து...
பாகிஸ்தான் ஏற்காத (தீவிரவாதம்) ஒன்றை அவர்கள் மீது சுமத்தி அதனை தண்டிப்பது மிகவும் முதிர்ச்சியற்ற மனப்போக்கை காட்டுகிறது. கூட்டு தண்டனை வழங்குவது என்பது எந்த ஒரு மனித உரிமைகள் கொள்கையும் அனுமதிக்காத ஒன்று. அனைவருமே மும்பை மற்றும் பதான்கோட் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்னொன்றையும் நீங்கள் கவனிப்பது நல்லது, பயங்கரவாதத்தாக்குதலுக்கு இந்தியாவை விட அதிகம் பாதிக்கப்படுவது பாகிஸ்தானே. எனவே மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காகி வரும் ஒரு நாட்டை குற்றம்சாட்டி, அதன் மீது கூட்டு தண்டனை விதிப்பது முதிர்ச்சியின்மையைத்தான் காட்டுகிறது, என்று இம்ரான், இந்திய-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்களை அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டி இந்திய அரசை சாடியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT