Published : 24 Jan 2014 11:54 AM
Last Updated : 24 Jan 2014 11:54 AM
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நடைபெற்று வரும் இந்திய கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். அதேநேரத்தில் இந்தியாவின் முன்னணி வீரரான காஷ்யப் 2-வது சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.
வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் 2-வது சுற்றில் சாய்னா 21-5, 21-10 என்ற நேர் செட்களில் ரஷியாவின் நடாலியா பெர்மினோவாவைத் தோற்கடித்தார். 28 நிமிடங்களில் தனது 2-வது சுற்றை முடித்த சாய்னா, அடுத்ததாக இந்தோனேசியாவின் பெலட்ரிக்ஸ் மானுபுட்டியை சந்திக்கிறார்.
மற்றொரு 2-வது சுற்றில் இந்தியாவின் சிந்து 21-19, 21-5 என்ற நேர் செட்களில் ஸ்விட்சர்லாந்தின் சப்ரினா ஜாக்கியூட்டை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதேபோல் இந்தியாவின் அருந்ததி பாந்தவானே 21-13, 21-11 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் நாட்சா செங்கோட்டேவைத் தோற்கடித்து காலிறுதியை உறுதி செய்தார்.
ஆடவர் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் சுபாகர் தேய் 21-19, 21-17 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சகநாட்டவரான அஜய் ஜெயராமைத் தோற்கடித்தார். இதேபோல் மலேசியாவின் ஜல்ஃபாட்லி ஜல்கிஃப்லி 21-16, 21-12 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்தியாவின் காஷ்யப்புக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.
இந்தியாவின் ஆனந்த் பவார் 20-22, 11-21 என்ற நேர் செட்களில் மலேசியாவின் ஐஸ்கேன்டர் ஜைனுதீனிடம் தோல்வி கண்டார். இந்தியாவின் சாய் பிரணீத் 15-21, 21-9, 21-16 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான குருசாய் தத்தை தோற்கடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT