Published : 17 Mar 2017 02:55 PM
Last Updated : 17 Mar 2017 02:55 PM

குவிண்டன் டி காக் அதிரடி, தெம்பா பவுமா அபாரம்: தென் ஆப்பிரிக்கா 349/9

வெலிங்டனில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாள் ஆட்டத்தில் நியூஸிலாந்தைக் காட்டிலும் தென் ஆப்பிரிக்கா 81 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

2-ம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்துள்ளது. மோர்னி மோர்கெல் 31 ரன்களுடனும், பிலாண்டர் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக டுபிளெசிஸ் ஆட்டமிழப்புடன் 94/6 என்று திணறிய தென் ஆப்பிரிக்க அணி தெம்பா பவுமா (89), குவிண்டன் டி காக் (91) ஆகியோரது 160 ரன்கள் கூட்டணி மூலம் மீண்டெழுந்தது.

நியூஸிலாந்து அணியின் கொலின் டி கிராண்ட்ஹோம் அருமையாக வீசி ஹஷிம் ஆம்லா (21), டுபிளெசிஸ் (22) ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டுமினி மீண்டும் சொதப்பி 16 ரன்களில் நீல் வாக்னரிடம் வீழ்ந்தார்.

இந்தத் தொடரில் ஜீதன் படேல் 4 முறை டி காக் விக்கெட்டை வீழ்த்திய நிலையில் இன்றும் டிகாக் இறங்கும் போது கொண்டு வரப்பட்டார், ஆனால் இம்முறை டிகாக் அடிபணியவில்லை.

டி காக் உறுதியான அதிரடி முறையை கையாண்டார், சவுதியை அப்பர் கட் மூலம் தேர்ட் மேனில் சிக்ஸும், நீல் வாக்னரை ஹூக்கில் ஒரு சிக்சரையும் அடித்தார். 33 பந்துகளில் 17 ரன்களிலிருந்த டி காக், அதிரடி மூலம் 55 பந்துகளில் அரைசதம் கண்டார். குவிண்டன் டி காக்கிற்கு அதிகமாக ஷார்ட் பிட்ச் பவுலிங் செய்தனர், அது உருப்படியான பலனை அளிக்கவில்லை, மாறாக டி காக் வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து ஆடினார்.

94/6 என்ற நிலையில் ஸ்லிப்பில் குழுமியிருந்தவர்கள் டி காக் அதிரடியினால் பவுண்டரிக்கு இடம்பெயர்ந்தனர். ஜீதன் படேலையும் மேலேறி வந்து நேராக சிக்சருக்குத் தூக்கினார் டிகாக். நியூஸிலாந்துக்கு என்ன செய்வது என்று தெரியாத தருணத்தில் தன் 4-வது சதத்திற்கு 9 ரன்கள் மீதமிருந்த நிலையில் டி காக், நீஷம் பந்தை விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார், ஆனால் நியூஸிலாந்தின் கட்டுக்கோப்பை தன் அதிரடி மூலம் குலைத்தார் டி காக்.

மறுமுனையில் டிகாக் அதிரடியை பார்த்துக் கொண்டிருந்த தெம்பா பவுமா உறுதுணை இன்னிங்ஸை ஆடி 88 பந்துகளில் அரைசதம் கண்டார். பவுமா ஆஃப் திசையில் மிகவும் ஸ்டைலிஷாக ஆடக்கூடியவர் இன்றும் அது தொடர்ந்தது, முன்னால் வந்து ஆடும் போதும் சரி, பின்னால் சென்று ஆடும் போதும் சரி ஆஃப் திசையில் இவர் ஆடும் போது இந்திய முன்னாள் லிட்டில் ஜீனியஸ் விஸ்வநாத்தை நினைவூட்டுகிறார்.

160 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்த பவுமா, நீல் வாக்னர் பந்தை ஹூக் செய்யும் முயற்சியில் நீஷமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் இதன் பிறகும் கூட விரைவில் நியூஸிலாந்து தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை. மோர்கெல், பிலாண்டர் இணைந்து 47 ரன்களை ஆட்டமிழக்காமல் சேர்த்தனர், ஒரு முறை மோர்கெல், பவுன்சரில் ஹெல்மெட்டில் அடி வாங்கி கீழே சாய்ந்ததைத் தவிர இந்த ஜோடியை நியூசிலாந்தினால் பிரிக்க முடியவில்லை.

இன்று 24/2 என்று தொடங்கிய தென் ஆப்பிரிக்கா ரபாடா விக்கெட்டை சவுதியிடம் பவுல்டு முறையில் இழந்தது. டுமினியை இந்தத் தொடரில் 3-வது முறையாக வாக்னர் சொற்ப ரன்களில் வீழ்த்தினார். ஆம்லாவும், கிராண்ட்ஹோமின் பவுண்டரி விரட்ட வேண்டிய பந்தை மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

டுபிளெசிஸ் இறங்கி ஆக்ரோஷம் மூலம் நிலைமையை சீர் செய்யும் முயற்சியில் டாப் எட்ஜில் வாக்னரை சிக்ஸ் அடித்தார், ஆனால் இது சரியான ஷாட் அல்ல. உணவு இடைவேளைக்கு முன்பாக டுபிளெசிஸ் மட்டையின் உள் விளிம்பில் பட்டு கிராண்ட்ஹோம் பந்தில் வெளியேற தென் ஆப்பிரிக்கா 94/6 என்று சரிவு கண்டது, அதன் பிறகே பவுமா, டிகாக் கூட்டணி 160 ரன்களைச் சேர்த்தது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு 131 ரன்களை வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து தென் ஆப்பிரிக்க அணி சேர்த்தது. இதன் மூலம் 81 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு விதத்தில் டெஸ்ட் போட்டியை நியூஸிலாந்து கையிலிருந்து பிடுங்கிச் சென்றார் டி காக் என்றே கூற வேண்டும்.

நியூஸிலாந்து தரப்பில் வாக்னர், கிராண்ட் ஹோம் தலா 3 விக்கெட்டுகளையும், சவுதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x