Published : 06 Jan 2014 11:02 AM
Last Updated : 06 Jan 2014 11:02 AM
வேகம் விவேகம் அல்ல என்பது நமது ஊரில் சாலைகளில் காணப் படும் எச்சரிக்கை வாசகம். ஆனால் வேகத்துடன், விவேகமும் இணைந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்ற ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நிரந்தர அடையாளமாக இருப்பவர் ஜெர்மனியின் மைக்கேல் ஷூமாக்கர்.
கிரிக்கெட்டுக்கு சச்சின் என்றால், ஃபார்முலா 1 கார் பந்தயத்துக்கு ஷூமாக்கர்தான். ஃபார்முலா 1 கார் பந்தயம் என்றாலே இந்தியர்கள் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஷூமாக்கரும், அவருடைய சிவப்பு நிற ஃபெராரி காரும்தான். ஏனெனில் அவர் 1990-களில் ஃபார்முலா 1 போட்டியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியிருந்தபோதுதான் இந்தியத் தொலைக்காட்சிகளில் ஃபார்முலா 1 கார் பந்தயம் ஒளிபரப்பானது. அதுதான் இந்திய ரசிகர்களின் இதயத்தில் ஷூமாக்கர் இடம்பிடிக்கக் காரணமானது.
ஒன்றல்ல, இரண்டல்ல... 7 முறை பட்டம் வென்று ஃபார்முலா 1 உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த ஷூமாக்கர், இன்றளவிலும் உலகின் தலைசிறந்த ஃபார்முலா 1 வீரராக போற்றப்படுகிறவர்.
கண் இமைக்கும் நேரத்தில் கார்கள் கடந்து செல்லும் இந்த ஃபார்முலா 1 போட்டியில் நிகழ்த்தப்பட்டிருக்கும் சாதனைகளில் பெரும்பாலானவை ஷூமாக்கருக்கு சொந்த மானவையே. ஃபார்முலா 1 போட்டியில் அதிக முறை (7) சாம்பியன் பட்டம் வென்றவர், அதிக ரேஸில் (91) வெற்றி பெற்றவர், அதிகமுறை (77) “ஃபாஸ்டஸ்ட் லேப்” சாதனை, அதிகமுறை (68) முதல் வரிசையில் இருந்து புறப்பட்டவர், அதிக ரேஸ்களில் (308) பங்கேற்றவர், அதிகமுறை (155) முதல் 3 இடங்களுக்குள் வந்தவர், ஓர் ஆண்டில் அதிக ரேஸ்களில் (13) வெற்றி பெற்றவர், ஒரு சீசனில் எல்லா ரேஸ்களிலும் முதல் 3 இடங்களுக்குள் பிடித்த ஒரே வீரர் என ஸூமேக்கரின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
7 முறை பட்டம் வென்ற போதிலும், தனது காரில் உள்ள வேகக் கட்டுப்பாட்டு கருவியின் அளவைத் தாண்டி ஒருபோதும் அவர் காரை செலுத்தியதில்லை. கார் தொழில்நுட்பத்தில் மிகுந்த அறிவு பெற்றவரான ஷூமாக்கர், 2006-ல் ஃபார்முலா 1-லிருந்து ஓய்வு பெற்றார். 2010-ல் மீண்டும் கார் பந்தயத்தில் நுழைந்தாலும் அடுத்த 3 ஆண்டுகளில் அவர் ஒரு ரேஸில்கூட வெற்றி பெறவில்லை. தலைசிறந்த கார் பந்தய வீரரான அவருக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஷூமாக்கரின் இந்த பின்னடைவுக்கு மெர்ஸிடஸ் கார்களில் இருந்த குறைபாடுதான் காரணம் என அப்போது கூறப்பட்டது.
4 வயதில் கோ கார்ட்டிங் மூலம் தொடங்கிய ஷூமாக்கரின் கார் பந்தய வாழ்க்கையில் சாதனைகளுக்கு நிகராக சர்ச்சைகளுக்கும் இடம் உண்டு. போட்டியின்போது சண்டை போடுவது, மற்ற வீரர்களை முன்னேற விடாமல் இடைமறிப்பது, அணியின் சகவீரர்களை ஒரு பொருட்டாக நினைக்காதது, பிட் லேனில் அதிவேகமாக காரை செலுத்தியது போன்ற விஷயங்களால் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறார். 2012-ல் கார் பந்தயத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு சாகச விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்த ஷூமாக்கர், கடந்த வாரம் பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது பாறையில் மோதி விபத்துக்குள்ளானார். தலையில் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
கோமா நிலையில் இருந்து மீண்டுவிட்டாலும், அவரின் நிலை குறித்து மருத்துவர்கள் எதையும் உறுதியாக தெரிவிக்க மறுக்கின்றனர். கர்ணம் தப்பினால் மரணம் என்று சொல்லக்கூடிய ஆபத்து நிறைந்த கார் பந்தயத்தில் கலக்கிய ஷூமாக்கர், மோட்டார் சைக்கிள் விபத்தில் இருந்துகூட எளிதாக தப்பினார். அப்போதெல்லாம் கெட்டியாக இருந்த ஷூமாக்கரின் விதி, ஆல்ப்ஸ் மலையில் பனிசறுக்கின்போது சற்று சறுக்கிவிட்டதோ என தோன்றுகிறது!
மருத்துவர்களின் கண்காணி ப்பில் இருக்கும் ஷூமாக்கர் விரைவில் பூரண குணமடைய உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக் கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT