Last Updated : 27 Feb, 2014 10:40 AM

 

Published : 27 Feb 2014 10:40 AM
Last Updated : 27 Feb 2014 10:40 AM

சந்தோஷ் டிராபி: தமிழகம்-கோவா இன்று மோதல்

சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தமிழகம்-கோவா அணிகள் மோதுகின்றன.

68-வது சந்தோஷ் டிராபிக்கான கால்பந்து போட்டியின் பிரதான சுற்று மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று நடைபெறும் பி பிரிவு ஆட்டத்தில் தமிழக அணி, கோவாவைச் சந்திக்கிறது. முதல் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ரயில்வே அணியிடம் தோல்வி கண்ட தமிழக அணி, இந்த ஆட்டத்தில் கோவாவை வீழ்த்தினால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

ரயில்வேக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி நன்றாக ஆடியபோதும், சுமார் 3 கோல் வாய்ப்புகளை கோட்டைவிட்டது. இதனால் “இஞ்சுரி” நேரத்தில் கோலடித்து வெற்றி கண்டது ரயில்வே. கடைசி நேரத்தில் தமிழக தடுப்பாட்டக்காரர்களின்

மோசமான ஆட்டம், கோல் கீப்பர் அருண் பிரதீப்பின் தவறான கணிப்பு ஆகியவையும் ரயில்வே அணிக்கு கோல் கிடைக்க காரணமானது.

கோவா அணி, தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பஞ்சாபுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்த நிலையில் இப்போது தமிழகத்தைச் சந்திக்கிறது. கோவா அணியைப் பொறுத்தவரையில் அதன் தடுப்பாட்டம் வலுவிழந்து காணப்படுகிறது. பஞ்சாபுக்கு எதிராக அந்த அணி துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த இரண்டும் அந்த அணியின் பலவீனமாகக் கருதப்படுகிறது.

அதேநேரத்தில் தமிழக அணி கடந்த ஆட்டத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் பார்த்துக் கொள்ளும்பட்சத்தில் கோவாவை எளிதாக வீழ்த்த முடியும். ரயில்வேக்கு எதிராக கடுமையாகப் போராடி கண்ட தமிழக அணிக்கு இந்த ஆட்டத்தில் அதிக வெற்றி வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. தமிழகம் தனது கடைசி 2 ஆட்டங்களில் வலுவான அணிகளான பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகியவற்றைச் சந்திக்கவுள்ளதால் கோவாவை கட்டாயம் வென்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இது தொடர்பாக தமிழக அணியின் பயிற்சியாளர் ரஞ்சித்திடம் கேட்டபோது, “ரயில்வேக்கு எதிரான ஆட்டத்தில் எங்கள் வீரர்கள் அற்புதமாக ஆடியபோதும் சில வாய்ப்புகளை கோட்டைவிட்டனர். அதை எங்களின் துரதிருஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்தப் போட்டியில் ரயில்வே அணிக்கு தமிழகம் கடும் சவால் அளித்தது. கடைசி நிமிடத்தில்தான் ரயில்வே வெற்றி கண்டது.

எனினும் கோவாவுடனான ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. கோவாவையும், அதன்பிறகு பஞ்சாபையும் தோற்கடித்தால்தான் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க முடியும். அதனால் எப்படியும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவோம்.

கடந்த ஆட்டம் கடும் சவால் மிக்கதாக இருந்ததால் சந்தோஷ், சார்லஸ் ஆனந்தராஜ் ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. போட்டி தொடங்கு வதற்கு முன்னதாகவே அவர்கள் இருவரும் விளையாடுவார்களா, மாட்டார்களா என்பது குறித்து தெரியவரும். மற்றபடி எல்லா வீரர்களும் நல்ல உடற்தகுதியுடனும் நம்பிக்கையோடும் உள்ளனர்” என்றார்.

தமிழகம்-கோவா இடையிலான ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. அதன்பிறகு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாபும் மேற்கு வங்கமும் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x