Published : 04 Jan 2016 05:03 PM
Last Updated : 04 Jan 2016 05:03 PM
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் ஷேன் வாட்சன், நேதன் லயன் ஆகியோர் இடம்பெறவில்லை. ஷேன் வாட்சன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறார். இந்நிலையில் பிக்பாஷ் லீகில் சொல்லிக்கொள்ளும்படியான இன்னிங்ஸ் எதையும் ஆடவில்லை.
அணியில் ஒரே பகுதி நேர ஸ்பின்னராக கிளென் மேக்ஸ்வெல் மட்டுமே 13 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இந்த அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் கேப்டன், டேவிட் வார்னர் துணை கேப்டன், ஏரோன் பிஞ்ச், ஜார்ஜ் பெய்லி, ஷான் மார்ஷ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
ஆல்ரவுண்டராக மிட்செல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை அறிமுகம் இல்லாத இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக ஜொயெல் பாரிஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜொயெல் பாரிஸ் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இடது கை வேகப்பந்து வீச்சாளர், ஸ்காட் போலண்ட் கடந்த ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட்டில் விக்டோரியா அணிக்காக சிறப்பாக வீசியுள்ளதாக தேர்வுக்குழு தலைவர் ராட் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
கேன் ரிச்சர்ட்சன், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஜேம்ஸ் பேட்டின்சன், பீட்டர் சிடில் ஆகியோர் தேர்வுக்குப் பரிசீலிக்கப்படவில்லை.
முதல் போட்டி பெர்த்தில் ஜனவரி 12-ம் தேதி நடைபெறுகிறது. முழு நேர ஸ்பின்னர் இல்லாதது அமையப்போகும் பிட்சை அறிவுறுத்துவதாக உள்ளது. அஸ்வின், ஜடேஜா ஆகியோரது பந்து வீச்சு பார்ம் ஆஸ்திரேலிய அணி தேர்வில் பிரதிபலித்துள்ளதாக தெரிகிறது.
அணி விவரம்:
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், ஜார்ஜ் பெய்லி, ஸ்காட் போலண்ட், ஜோஷ் ஹேசில்வுட், ஜேம்ஸ் பாக்னர், ஏரொன் பிஞ்ச், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஜோயல் பாரிஸ், மேத்யூ வேட்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT