Published : 01 Mar 2017 10:50 AM
Last Updated : 01 Mar 2017 10:50 AM
இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்ற புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஆடுகளம் மோசம் என ஐசிசி நடுவர் கிறிஸ் பிராடு அறிக்கை அளித்துள்ளார்.
3 நாட்களுக்குள் முடிவடைந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதன்முறையாக டெஸ்ட் போட்டி நடைபெற்ற மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓஃகீப் 12 விக்கெட்கள் வீழ்த்தினார்.
ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடம் வகிக்கும் இந்திய அணி இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 105 மற்றும் 107 ரன்களில் சுருண்டது. முதல் நாளில் இருந்தே சுழலுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்ததால் தற்போது ஆடுகளத்தின் தரம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி யின் நடுவராக செயல்பட்ட கிறிஸ் பிராடு ஐசிசிக்கு அறிக்கை அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆடுகளம் மற்றும் அவுட்பீல்டு கண்காணிப்பு செயல்முறைகளில் ஐசிசியின் உட்கூறு விதி 3-ன் படி, கிறிஸ் பிராடு ஆடுகளத்தின் தன்மை குறித்து கவலை தெரிவித்துள்ளார்’’ என கூறப்பட்டுள்ளது.
மேலும் கிறிஸ் பிராடின் அறிக்கையை பிசிசிஐ-க்கு ஐசிசி அனுப்பி வைத்துள்ளது. இதற்கு 14 நாட்களுக்குள் பிசிசிஐ தரப்பில் இருந்து விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விளக்கத்தை ஐசிசி பொது மேலாளர் ஜெஃப் அலார்டிஸ், மேட்ச் ரெப்ரியின் எலைட் பேனலை சேர்ந்த உறுப்பினர் ரஞ்ஜன் மதுகலே ஆகியோர் ஆய்வு செய்து, ஆடுகளம் தரமானதா, இல்லையா என்பதை அறிவிப்பார்கள்.
முதன் முறையாக டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டுள்ளதால் இந்த விவகாரத்தில் அபராதத் துடன் புனேவில் ஆடுகளம் தப்பிக்கும் என தெரிகிறது. அதிகபட்சமாக சுமார் ரூ.10 லட்சம் வரை அபாரதம் விதிக்கப்படலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT