Published : 09 Jun 2017 10:10 AM
Last Updated : 09 Jun 2017 10:10 AM
ஓவலில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் சங்கக்காரா அன்று கூறியது போல் ‘கர்வத்துடனும், திமிருடனும்’ இலங்கை அணி இந்தியப்பந்து வீச்சை எதிர்கொண்டு மிக அற்புதமாக 322 ரன்கள் இலக்கை தொழில்நேர்த்தியுடன் விரட்டி வெற்றி கண்டனர் என்றே கூற வேண்டும்.
அதிரடி தொடக்க வீரர் டிக்வெல்லாவை வீழ்த்திய பிறகு இந்திய அணி கொஞ்சம் இறுக்கியிருக்கலாம், ஆனால் அதற்கு அஸ்வின் இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும். இலங்கைக்கு எதிராக அஸ்வின் இதுவரையிலும் சிறப்பாக வீசி வந்துள்ளார்.
எனவே ஹர்திக் பாண்டியா அல்லது கேதார் ஜாதவ்வுக்குப் பதிலோ அல்லது மேலும் ஜடேஜாவுக்குப் பதிலோ அஸ்வினை களமிறக்கும் தைரியமான முடிவு தேவைப்பட்டது, ஆனால் கடைசியில் வெற்றி கூட்டணி மாற்றப்படக் கூடாது என்ற செண்டிமெண்ட் மேலோங்கியது போல் தெரிகிறது.
ஹர்திக் பாண்டியா தன் பந்து வீச்சில் பல அடி கீழே இருக்கிறார். 7 ஓவர்களில் 1 மெய்டனுடன் அவர் 51 ரன்களை கொடுத்தார். ரவீந்திர ஜடேஜா பஞ்சுமெத்தை பேட்டிங் பிட்சில் 6 ஓவர்களில் 52 ரன்கள் விளாசப்பட்டார். இந்த பந்து வீச்சுகளைப் பார்க்கும் போது ஒருவேளை அஸ்வின் இருந்திருந்தால் நமக்கு சாதகமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் பலருக்கும் தோன்றுவதில் நியாயம் இருக்கவே செய்கிறது.
குணதிலகா, மெண்டிஸ் இணைந்து சுமார் 23 ஓவர்களில் 159 ரன்களைச் சேர்த்தது, அதுவும் கவலைப்படாமல் மிகவும் சாதாரணமாக ஆடியது சங்கக்காரா, ஜெயவர்தனே போன்ற மூத்த வீரர்களுக்கே சாத்தியம், ஆனால் இந்த இளம் வீரர்கள் இத்தகைய மன முதிர்ச்சியுடன் ஆடியது உண்மையில் இந்திய அணி எதிர்பார்க்க முடியாத ஒன்றே. சங்கக்காரா கூறியது போல் இலங்கை அணி கர்வத்துடனும், அடக்கமான திமிருடனும் இலக்கை தொழில்பூர்வமாக துரத்தி வெற்றி கண்டது.
விராட் கோலி என்னென்னவோ செய்து பார்த்தார், தானே கூட பந்து வீசினார், ஜாதவ்வை பயன்படுத்தினார், ஆனால் ஒன்றுமே வேலைக்கு ஆகவில்லை. சில வேளைகளில் எதிரணியினர் இந்திய அணியை விட உறுதியுடன் ஆடும் தருணங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது.
ஆனால் இந்திய பேட்டிங்கின் போது 25-40 ஓவர்களில் ரன் விகிதம் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை. 25-வது ஓவர் முடிவில் 138/1 என்று இருந்தது 40-வது ஓவர் முடிவில் 218/3 என்று மட்டுமே உயர்ந்தது வெறும் 80 ரன்களே 15 ஓவர்களில் அடித்தது, பாரம்பரிய ஒருநாள் போட்டி போன்று அமைந்தது. இத்தனைக்கும் 3-வது பவர் பிளே இதில் அடங்கும்.
ஆனால் இதே 25-40 ஓவர்கள் இடையே இலங்கை அணி 103 ரன்களை எடுத்தது, கடைசி 10 ஒவர்கள் தொடங்கும் வரை இந்திய ரன் விகிதம் 5 ரன்களுக்கும் கூடுதலாக மட்டுமே இருந்தது. இத்தனைக்கும் ரோஹித் சர்மா, தவன் கூட்டணி 138 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். அன்று பாகிஸ்தானுக்கு எதிராகவும் இப்படித்தான் இருந்தது, ஆனால் யுவராஜ் சிங் அன்று வெளுத்து வாங்கினார், பிறகு விராட் கோலி, பாண்டியா வெளுத்துக் கட்டினர், நேற்று மூன்று பேருமே சோபிக்கவில்லை, குறிப்பாக விராட் கோலியின் டக் அவுட் பெரிய பின்னடைவை கொடுத்தது என்றே கூற வேண்டும். அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் தனது உத்தியை பெரிய அளவில் சரி செய்ய வேண்டியுள்ளது, இல்லையெனில் அவர் அயல்நாடுகளில் இனி சோபிக்க முடியாமல் போகும் வாய்ப்புகள் அதிகம்.
எனவே 25-40 ஓவர்கள் இடையே இங்கிலாந்து வீரர்கள் அடித்து நொறுக்குவது போல் இந்திய அணியும் அடித்து நொறுக்கும் முறைக்குத் திரும்ப வேண்டும். பழைய பாணியில் பிஞ்ச் ஹிட்டர் என்று ஒருவரை திடீர் என முன்னால் களமிறக்குவது பயனளிக்கும்.
25-40 ஓவர்களுக்கு இடையே இன்னும் கொஞ்சம் ரன் விகிதத்தை உயர்த்தியிருந்தால் ஸ்கோர் 321 என்பதற்குப் பதிலாக 345-350 என்று இருந்திருக்கும், அப்போது இலங்கை அணிக்கு அழுத்தம் அதிகமாகியிருக்கலாம், அதேபோல் அஸ்வின் இருந்திருந்தால் அணிக்கு கிடைக்கும் அனுகூலம் என்னவெனில் தொடக்க ஓவர்கள், இடை ஓவர்கள், ஸ்லாக் ஓவர்கள் என்று அவரை எந்த நிலையிலும் பயன்படுத்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்பதே இந்தத் தோல்வியிலிருந்து நமக்கு கிடைக்கும் பாடமாகும்.
2002 சாம்பியன்ஸ் டிராபியை நினைவுக்குக் கொண்டு வந்த தருணம
2002-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கும் இடையே நடந்த போட்டியில், வியாழக்கிழமை நடந்த போட்டியைப் போலவே தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் நிலையில் இருந்தது. சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிப்ஸ் திடீரென தசை பிடிப்பினாலும், வெப்ப அயர்ச்சியினாலும் ஆட முடியாமல் வெளியேறினார். வெற்றி பெறும் நிலையிலிருந்து தென் ஆப்பிரிக்க அணி தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேற்றப்பட்டது. நேற்றைய போட்டியில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த பெரேரா தசை பிடிப்பினால் முக்கியமான கட்டத்தில் வெளியேறியதும், தென் ஆப்பிரிக்கா போன்றே இலங்கையும் சரிவடையும் என்ற எதிர்பார்ப்பையும் தவிர்க்க முடியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT