Published : 22 Nov 2014 12:36 PM
Last Updated : 22 Nov 2014 12:36 PM

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதன் மூலம் தொடரையும் கைப்பற்றியது.

268 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, ஸ்டீவ் ஸ்மித் சதமடித்ததோடு மட்டுமின்றி, மேத்யூ வேடுடன் இணைந்து 6-வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி தேடித்தந்தார்.

இதன்மூலம் மெல்போர்ன் மைதானத்தில் தென் ஆப்பிரிக் காவை முதல்முறையாக தோற் கடித்துள்ளது ஆஸ்திரேலியா. 1993 முதல் 2009 வரை இங்கு 6 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக் காவை சந்தித்துள்ள ஆஸ்தி ரேலியா, அவையனைத்திலும் தோல்வி கண்டிருந்த நிலையில், இப்போது வெற்றி கண்டு வரலாற்றை மாற்றியுள்ளது.

டிவில்லியர்ஸ் 91

மெல்போர்னில் நேற்று நடைபெற்ற 4-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆம்லா 18, டி காக் 17, பின்னர் வந்த டூ பிளெஸ்ஸி 28 ரன்களில் வெளியேறினர். இதையடுத்து கேப்டன் டிவில்லியர்ஸும், டேவிட் மில்லரும் ஜோடி சேர்ந்தனர். 4-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த இந்த ஜோடி, தென் ஆப்பிரிக்கா 199 ரன்களை எட்டியபோது பிரிந்தது. மில்லர் 45 ரன்களில் (61 பந்துகள்) ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் டிவில்லியர்ஸ் 91 ரன்களில் (88 பந்துகள்) ஆட்டமிழந்தார். பின்னர் வந்தவர்கள் விரைவாக வெளியேற, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் குவித்தது தென் ஆப்பிரிக்கா.

அதிர்ச்சி தொடக்கம்

இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. டேவிட் வார்னர் 4, ஷேன் வாட்சன் 19, ஆரோன் ஃபிஞ்ச் 22, ஜார்ஜ் பெய்லி 16, மேக்ஸ்வெல் 2 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 24.1 ஓவர்களில் 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா. காயம் காரணமாக கோல்ட்டர் நீல் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் 98 ரன்களுக்கு ஏறக்குறைய 6 விக்கெட்டுகள் என்ற நிலை ஏற்பட்டது.

ஸ்மித் சதம்

ஆனால் 5-வது விக்கெட்டுக்கு இணைந்த ஸ்டீவ் ஸ்மித்தும், மேத்யூ வேடும் சிறப்பாக ஆடி ஆட்டத்தின் போக்கை மாற்றினர். ஸ்மித் 63 பந்துகளிலும், மேத்யூ வேட் 55 பந்துகளிலும் அரைசதம் கண்டனர். மேத்யூ வேட் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 44.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து வந்த ஃபாக்னர் அதிரடியில் இறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஸ்மித் 109 பந்துகளில் சதமடித்தார். ஸ்கோர் சமநிலையை எட்டியபோது ஸ்மித் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஃபாக்னர் 31 (19 பந்துகள்), பட் கம்மின்ஸ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஸ்மித் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

போட்டித் துளிகள்

ஒருநாள் போட்டியில் 100 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த பிறகு ஆஸ்திரேலியா இலக்கை எட்டிப்பிடிப்பது 10-வது முறையாகும்.

கடந்த 12 ஆண்டுகளில் முதல்முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட இலக்கை சேஸ் செய்துள்ளது ஆஸ்திரேலியா.

இந்தப் போட்டியில் 31 ரன்கள் எடுத்தபோது தென் ஆப்பிரிக்காவுக்காக 7 ஆயிரம் ரன்களை குவித்த 3-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார் டிவில்லியர்ஸ். அவர் தென் ஆப்பிரிக்க லெவன் அணிக்கு எதிராக எடுத்த 150 ரன்களோடு சேர்த்து மொத்தம் 7,210 ரன்கள் குவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x