Published : 01 Feb 2014 11:45 AM
Last Updated : 01 Feb 2014 11:45 AM
சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டிக்கான தென் மண்டல தகுதிச்சுற்றில் சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் தமிழக அணி, கர்நாடகத்தைச் சந்திக்கிறது.
சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி தமிழக அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். முதல் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் கேரளத்தையும், 2-வது போட்டியில் 10-1 என்ற கோல் கணக்கில் அந்தமானையும் வீழ்த்தியிருக்கும் தமிழக அணி இந்தப் போட்டியில் கர்நாடகத்தை தோற்கடித்தால் மட்டுமே பிரதான சுற்று வாய்ப்பை பிரகாசமாக்கிக் கொள்ளமுடியும். ஒருவேளை தமிழக அணி இந்த ஆட்டத்தில் தோற்குமானால் பிரதான சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும்.
ஒரே கோலோடு கேரளத்தை வீழ்த்திய தமிழகம், அந்தமானுக்கு எதிரான போட்டியில் 10 கோல்களை அடித்தாலும், தமிழக வீரர்களின் ஆட்டம் மோசமானதாகவே அமைந்தது. தமிழக வீரர்கள் கார்த்திக், கேப்டன் சுதாகர், ஸ்டிரைக்கர் ரீகன் ஆகியோர் தவறு செய்ததோடு, பல நல்ல கோல் வாய்ப்புகளையும் கோட்டைவிட்டனர்.
ரீகன் தனக்கு கிடைத்த பந்துகளை உடனடியாக கோல் அடிக்காமல் தாமதப்படுத்தியதால் அந்தமான் தடுப்பாட்டக்காரர்கள் சுதாரித்துக் கொண்டனர். எனவே அந்தமானுக்கு எதிராக அதிகளவில் கோல் அடிக்க முடியாமல் போனது. அந்தமானுக்கு எதிராக ஆடியதைப் போன்று கர்நாடகத்துக்கு எதிராக ஆடினால் அது தமிழக அணிக்கு ஆபத்தானதாகவே முடியும். தமிழக அணி முன்களத்தில் ரீகனை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால் கர்நாடக அணி சிறந்த ஸ்டிரைக்கர்களையும், வலுவான தடுப்பாட்டக்காரர்களையும் கொண்டுள்ளது. தமிழக வீரர்கள் அந்தமானுக்கு எதிரான ஆட்டத்தில் செய்த தவறுகளை கர்நாடகத்துக்கு எதிரான ஆட்டத்தில் மீண்டும் செய்யாமல் இருப்பது முக்கியமானதாகும்.
கர்நாடகத்திடம் தமிழகம் தோற்குமானால் ஆந்திரத்துடனான கடைசி போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆந்திர அணியையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அந்த அணியில் பலம் வாய்ந்த ஸ்டிரைக்கர்கள் இல்லையென்றாலும், தாத்தம் நாயுடு போன்ற தலைசிறந்த தடுப்பாட்டக்கார்கள் பலம் சேர்க்கின்றனர். அதனால் அவர்களுக்கு எதிராக கோலடிப்பது அவ்வளவு எளிதல்ல. மேலும் வாழ்வா, சாவா போட்டியாக இருக்கும் பட்சத்தில் தமிழக அணிக்கும் நெருக்கடி ஏற்படும்.
அருண் பிரதீப் ஆடுகிறார்
இது தொடர்பாக தமிழக அணியின் பயிற்சியாளர் ரஞ்சித்திடம் கேட்டபோது, அவர் கூறியது: அணியில் எந்த மாற்றமும் இருக்காது. கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாத கோல் கீப்பர் அருண் பிரதீப் முழு உடற்தகுதியைப் பெற்றுவிட்டார். அதனால் அவர் இந்தப் போட்டியில் விளையாடுவார்.
இந்தப் போட்டியிலும் 4-5-1 என்ற பார்மட்டிலேயே களமிறங்குவோம். தேவைப்படும்பட்சத்தில் சூழலுக் கேற்றவாறு பார்மட்டை மாற்றிக்கொள்வோம். கர்நாடகம் பலம் வாய்ந்த அணி என்றாலும், அவர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் சிறப்பாகத் தயாராகியிருக்கிறோம். போட்டி கடும் சவால்மிக்கதாக இருக்கும் என்றாலும், நாங்கள் சிறப்பாக விளையாடி போட்டியை வெற்றியில் முடிப்பதில் கவனம் செலுத்துவோம் என்றார்.
கேரளம்-அந்தமான் மோதல்
மற்றொரு போட்டியில் கடந்த சந்தோஷ் டிராபியில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய கேரள அணியும், அந்தமான் நிக்கோபார் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியைப் பொறுத்தவரையில் பலம் வாய்ந்த அணியான கேரள அணி, பலவீனமான அந்தமானுக்கு எதிராக பெருமளவில் கோலடிக்க முயற்சிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT