Published : 02 Jun 2016 04:56 PM
Last Updated : 02 Jun 2016 04:56 PM

ரன் குவிப்பு பிட்ச்களிலும் ஷர்துல் தாக்கூர் எதிரணியை மூழ்கடிப்பார்: ஜெஃப் தாம்சன் புகழாரம்

இந்திய டெஸ்ட் அணியில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மும்பை வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் பேட்டிங் சாதக ரன்குவிப்பு பிட்ச்களிலும் கூட எதிரணியை மூழ்கடிக்கும் பந்துவீச்சு திறமை கொண்டவர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் அச்சுறுத்தல் வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் தாம்சன் கூறியுள்ளார்.

ஜெஃப் தாம்சன் பொதுவாக பிற நாட்டு வேகப்பந்து வீச்சாளர்களை புகழ்ந்து பேசுவது அரிதுதான். இந்நிலையில் மும்பையிலிருந்து இந்திய டெஸ்ட் அணியில் தேர்வாகி உயர்நிலை பெற்றுள்ள வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் பற்றி ஜெஃப் தாம்சன் புகழ்ந்து பேசியிருப்பது உண்மையில் தாக்கூருக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும்.

சமீபத்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்ச விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷர்துல் தாக்கூருக்கு வயது 24. தவல் குல்கர்னியும் இவரும் சேர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் எதிரணியினரை பாடுபடுத்தியுள்ளனர். இதனால்தான் 2016-ம் ஆண்டு ரஞ்சி கோப்பையை மும்பை அணி கைப்பற்றியது. சவுராஷ்டிரா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தாக்கூர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக 3-ம் நாள் ஆட்டத்தில் இந்திய டெஸ்ட் வீரர் செடேஷ்வர் புஜாராவை, தாக்கூர் வீழ்த்திய விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது என்றால் மிகையாகாது. லெந்திலிருந்து எழும்பிய பந்து புஜாரா மட்டையின் மேல் பகுதியை தொட்டுச் சென்று கேட்ச் ஆனது.

கிரிக்கெட் வாரியத் தலைவர் அணிக்காக ஆடும்போது தென் ஆப்பிரிக்க அணியின் ஃபாப் டு பிளெசிஸ் மற்றும் ஹஷிம் ஆம்லாவை இவர் வீழ்த்தினார்.

இந்நிலையில் தனது வேகத்தினாலும் எகிறு பந்துகளினாலும் பல வீரர்களின் உடலைப் பதம் பார்த்த அச்சமூட்டும் ஜெஃப் தாம்சன் இவரைப் புகழ்ந்து கூறும்போது, “ஷர்துல் தாக்கூரைத் தவிர, நான் வேறு பவுலர்களைப் பார்க்கவில்லை. ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சை பார்த்தேன், அவரது பந்து வீச்சு முறை என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

ரன்குவிப்பு பிட்ச்களிலும் கூட அவர் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிகளை மூழ்கடிக்கக் கூடியவர். எனவே மே.இ.தீவுகளுக்கு எதிராக 11 வீரர்களுக்கான அணியில் ஷர்துலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் நிச்சயம் மற்ற வீச்சாளர்களை விடவும் இவர் ஜொலிப்பார் என்பது உறுதி” என்றார்.

எம்.சி.ஏ. - பெடரல் லைஃப் இன்சூரன்ஸ் பந்துவீச்சு அகாடமியில் ஆலோசகராக இருந்து வரும் ஜெஃப் தாம்சன், இந்தியாவில் வேகப்பந்து வீச்சு வளர்ச்சி குறித்து கூறும்போது, “கடந்த ஓராண்டில் என்னால் வித்தியாசத்தை உணர முடிகிறது. இளம் வீச்சாளர்கள் உடல் தகுதியில் சிறந்து விளங்குகிறார்கள், வேகமாக வீசுகிறார்கள். 16 வயதுடைய இளம் ரத்தங்கள் ஏழ்மையான பகுதிகளிலிருந்து வந்தவர்கள். இவர்களிடம் பணபலம் இல்லை. வேகப்பந்து வீச்சாளர்களாகத் திகழ சாதாரண மனநிலையிலிருந்து மாறுபட்ட மனநிலை தேவை, பேட்ஸ்மென்களை வெறுக்க வேண்டும், இந்த வெயிலில் கடின உழைப்புக்குத் தயாராக வேண்டும். இந்த விதத்தில் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x