Published : 08 Nov 2014 03:37 PM
Last Updated : 08 Nov 2014 03:37 PM

ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிராக சொதப்பிய சேவாக், கம்பீர்

சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டியில் ஜம்மு-காஷ்மீர் அணியிடம் வலுவான டெல்லி அணி அதிர்ச்சித் தோல்வி அடைந்தது.

பிலாஸ்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் மந்தமான பிட்சில் டெல்லி அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து மடிந்தது. ஜம்மு காஷ்மீர் அணி 49.2 ஓவர்களில் 216/8 என்று வெற்றி பெற்றது.

இதில் கேப்டன் கம்பீர் 36 ரன்கள் அடிக்க 75 பந்துகள் எடுத்துக் கொண்டார். அதிரடி வீரர் சேவாக் 37 பந்துகளைச் சந்தித்து 11 ரன்களை எடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

டெல்லி அணியில் ரஜத் பாட்டியா மட்டுமே 52 பந்துகளில் அரைசதம் கண்டார். இதனால் டெல்லி 200 ரன்களைக் கடக்க முடிந்துள்ளது.

சமியுல்லா பெய்க் என்ற ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர், கம்பீர், சேவாக், உன்முக்த் சந்த் ஆகியோர் விக்கெட்டுகளை அடுத்தடுத்து கைப்பற்ற டெல்லி 59/0 என்ற நிலையிலிருந்து 74/3 என்று ஆனது. தொடக்க 4 ஓவர்களில் இவருக்கு லைன் மற்றும் லெந்த் சிறப்பாக அமையவில்லை. ஆனால் முனை மாற்றி பந்து வீசிய போது அடுத்த 6 ஓவர்களில் 8 ரன்களுக்கு சேவாக், கம்பீர், உன்முக்த் சந்த் போன்ற அபாய வீரர்களை அவர் வீழ்த்தினார்.

சேவாக், கம்பீர், உன்முக்த் சந்தை வீழ்த்தியது எப்படி?

சமியுல்லா பெய்க் 3 அபாய வீரர்களை வீழ்த்தியது பற்றி கூறும் போது, ‘சேவாகிற்கு வைட் ஆஃப் த கிரீசிலிருந்து இன்ஸ்விங்கர் வீசினேன் அவர் எட்ஜ் செய்து கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார்.

பிறகு ரவுண்ட் த விக்கெட் எடுத்து கவுதமிற்கு பந்தை சற்றே லேட் ஸ்விங் செய்தேன் அவர் பவுல்டு ஆனார்.

மீண்டும் வைட் ஆஃப் த கீரிசிலிருந்து உன்முக்த் சந்திற்கு வீசினேன் அவரும் எட்ஜ் செய்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்” என்றார்.

ஆல்ரவுண்டர்-கேப்டன் பர்வேஸ் ரசூல் அபாரம்:

213 ரன்கள் வெற்றி இலக்குடன் இறங்கிய ஜம்மு காஷ்மீர் 31/3 என்று சரிவு கண்டது. ஆனால் கேப்டன் பர்வேஸ் ரசூல் தாக்குதல் ஆட்டம் ஆடி 12 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸ் மிக ஜம்மு காஷ்மீர் வெற்றிக்கு வித்திட்டது.

இவருடன் ஹர்தீப் சிங் (21), பந்தீப் சிங் (25), வசீம் ரசா (27) ஆகியோரும் பங்களிப்பு செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் பயிற்சியாளராக கர்நாடகாவின் முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் சுனில் ஜோஷி பணியாற்றி வருகிறார்.

வெள்ளத்தில் மூழ்கிய காஷ்மீர் மைதானங்களினால் பயிற்சி வாய்ப்பை இழந்த ஜம்மு காஷ்மீர் மன உறுதியுடன் ஆடி டெல்லி அணிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஆனால், அதை விட மன உறுதியுடன் ஆடி உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முயற்சி செய்ய வேண்டிய கவுதம் கம்பீர், சேவாக் ஆகியோர் திக்கித் திணறியதோடு சோபிக்காமல் போய், அணியின் தோல்விக்குக் காரணமாகியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x