Published : 17 Jan 2014 12:26 PM
Last Updated : 17 Jan 2014 12:26 PM
ஆஸ்திரேலிய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்ட ஆஸ்திரேலியா, இந்தப் போட்டியிலும் வெற்றியைத் தொடரும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில் தொடர் தோல்விகளைச் சந்தித்த இங்கிலாந்து, கடந்த 14-ம் தேதி நடைபெற்ற பிரதமர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. ஆனால் அதை பெரிய வெற்றியாகக் கணக்கில் கொள்ளமுடியாது என்றாலும், இங்கிலாந்து அணி தோல்வியில் இருந்து மீள்வதற்கு முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங், பௌலிங் என இரு துறைகளிலும் வலுவான அணியாகத் திகழ்கிறது. ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர் இருவரும் கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் அந்த அணிக்கு வலுவான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் விளையாடிய ஷேன் வாட்சன் அடுத்த 3 போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்குப் பதிலாக ஷான் மார்ஷ் இடம்பெறுவார் என தெரிகிறது. மிடில் ஆர்டரில் கேப்டன் கிளார்க், ஜார்ஜ் பெய்லி, கிளன் மேக்ஸ்வெல், பிராட் ஹேடின் ஆகியோரும், பின்வரிசையில் ஜேம்ஸ் ஃபாக்னரும் ஆஸ்திரேலியாவுக்கு பலம் சேர்க்கின்றனர்.
முதல் போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் இந்தப் போட்டியில் களமிறங்குகிறார். அதனால் நாதன் கோல்ட்டர் நீக்கப்படுவார் என தெரிகிறது. வாட்சன் இடம்பெறாத நிலையில் கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் தேவை என தேர்வுக் குழுவினர் நினைத்தால் கோல்ட்டருக்கு இடம் கிடைக்கலாம். டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்ப னமாகத் திகழ்ந்த ஜான்சன், இந்தப் போட்டியிலும் சவால் அளிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
மைக்கேல் கிளார்க் (கேப்டன்), டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ், ஜார்ஜ் பெய்லி, கிளன் மேக்ஸ்வெல், பிராட் ஹேடின், ஜேம்ஸ் ஃபாக்னர், மிட்செல் ஜான்சன், நாதன் கோல்ட்டர், கிளின்ட் மெக்காய் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் ஆடும் லெவனில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணியில் சரியாக விளையாடாத ஜோ ரூட் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மைக்கேல் கேர்பெர்ரி சேர்க்கப்படலாம் என தெரிகிறது. அலாஸ்டர் குக் (கேப்டன்), இயான் பெல், மைக்கேல் கேர்பெர்ரி, கேரி பேலன்ஸ், இயோன் மோர்கன், ரவி போபாரா, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், டிம் பிரெஸ்னன், கிறிஸ் ஜோர்டான், பாய்ட் ரேங்கின் ஆகியோர் இங்கிலாந்து அணியின் ஆடும் லெவனில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைதான கண்ணோட்டம்
போட்டி நடைபெறும் பிரிஸ்பேன் கேபா மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதேநேரத்தில் இங்கு பவுன்சர்களும் எகிறும். இங்கு ஆஸ்திரேலியா 38 போட்டிகளில் விளையாடி 20 வெற்றிகளையும், 14 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 4 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. ஆஸ்தி ரேலியாவும், இங்கிலாந்தும் 6 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலியா 5-லும், இங்கிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றி கண்டுள்ளன.
போட்டி நேரம்: காலை 8.50 நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT