Published : 26 Jul 2016 03:24 PM
Last Updated : 26 Jul 2016 03:24 PM
இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்ட் போட்டி முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணியை 117 ரன்களுக்குச் சுருட்டியது.
பல்லகிலேயில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஞ்சேலோ மேத்யூஸ் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். பிட்சில் கொஞ்சம் ஸ்பின், கொஞ்சம் ஸ்விங் அவ்வளவே, ஆனால் இலங்கை பேட்டிங்குக்கு என்ன ஆனது என்ற கேள்வியே எஞ்சுகிறது.
5-வது ஓவரில் திமுத் கருணரத்னே, மிட்செல் ஸ்டார்கின் வேகமான புல் லெந்த் பந்தை காலில் வாங்கி எல்.பி.ஆனார். தேவையில்லாமல் தொடக்கத்திலேயே ஒரு ரிவியூவையும் விரயம் செய்தார்.
மெண்டிஸும், ஹேசில்வுட் பந்து ஒன்று நன்றாக உள்ளே வர பிளிக் செய்ய முயன்று நேராக வாங்கி எல்.பி.ஆனார். ஜே.கே.சில்வா ஒரு மாறுதலுக்காக ஹேசில்வுட்டின் வெளியே சென்ற அவுட் ஸ்விங்கரை தொட்டு வெளியேறினார். இலங்கை 18/3 என்று ஆனது. 15-வது ஓவரில் ஆஸ்திரேலிய அறிமுக இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஓ’கீஃப் அருமையாக ஒரு பந்தை நன்றாக டாஸ் செய்து திருப்ப ஏற்கெனவே கமிட் ஆன மேத்யூஸ் எட்ஜ் செய்தார், ஸ்மித் ஸ்லிப்பில் கேட்ச் பிடித்தார், மேத்யூஸ் 15 ரன்களில் அவுட் ஆனார்.
சந்திமால் 54 பந்துகள் போராடி 15 ரன்களில் ஓரளவுக்கு செட்டில் ஆவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஹேசில்வுட் பந்து ஒன்று லேட்டாக ஸ்விங் ஆக, இவர் டிரைவ் ஆட எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பர் நெவிலிடம் கேட்ச் ஆனது. உணவு இடைவேளையின் போது 83 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்று இலங்கை தட்டுத்தடுமாறியது.
இடைவேளைக்குப் பிறகு லயன் புகுந்தார், அவர் டி சில்வா (24, 3 பவுண்டரி 1 சிக்சர்), அதே ஓவரில் தில்ருவான் பெரேரா (0) ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தினார்.
பிறகு குசல் பெரேராவை 20 ரன்களில் பவுல்டு செய்தார், நேராக பந்தை ஆடாமல் விட்டு பவுல்டு ஆனார். ரங்கனா ஹெராத், ஸ்டார்க்கின் அதிவேக யார்க்கருகு பிளம்ப் எல்.பி. ஆனார். நுவான் பிரதீப்பை, ஓ கீஃப் வீழ்த்த இலங்கை அணி 35 ஓவர்கள் தாங்காமல் 117 ரன்களுக்குச் சுருண்டது.
ஆஸ்திரேலிய அணியில் ஹேசில்வுட், லயன் தலா 3 விக்கெட்டுகளைச் சாய்க்க, ஸ்டார்க், ஓகீஃப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்ஸில் சற்று முன் வரை மழையால் ஆட்டம் நிறுத்தப்படும் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்கள் எடுத்துள்ளது. டேவிட் வார்னர் 0-வில் நுவான் பிரதீப் பந்தில் பிளேய்ட் ஆன் ஆனார். ஜோ பர்ன்ஸ், ஹெராத் பந்தில் 3 ரன்களுக்கு பவுல்டு ஆனார்.
ஆனால் அதன் பிறகு உஸ்மான் கவாஜா (25), ஸ்டீவ் ஸ்மித் (28) ஆகியோர் நிலைநிறுத்தி ஆடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT