Last Updated : 13 Jul, 2016 10:02 AM

 

Published : 13 Jul 2016 10:02 AM
Last Updated : 13 Jul 2016 10:02 AM

தங்கத்தை குறிவைக்குமா சாய்னாவின் ராக்கெட்

‘உலகின் முதல் நிலை பாட்மிண்டன் வீரருக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்?’ என்ற கேள்வியை தன் அம்மாவிடம் கேட்டபோது, சாய்னா நெவாலின் வயது 12. அப்போது தான் மாவட்ட அளவில் இருந்து மாநில அளவிலான போட்டிகளில் கால்பதித்தி ருந்தார் சிறுமியான சாய்னா. அவரது தாய் உஷாராணி, தந்தை ஹர்வீர்சிங் ஆகியோர் ஹரியானாவுக்காக பாட்மிண்டன் விளையாடி மாநில அளவில் சாம்பியன் பட்டம் வென்றவர்கள். பாட்மிண்டன் என்பது சாய்னாவின் ஜீன்களில் ஊறியிருந்தது.

உலகின் நம்பர் ஒன் வீரர் என்ற அந்தஸ்தைப் பிடிக்க எத்தனை படிநிலைகளைக் கடக்க வேண்டும், அந்த இடத்துக்குச் செல்ல என்ன மாதிரியான முயற்சி, உழைப்பு, அர்ப்பணிப்பு தேவை என, மனதில் பதியும்படி சாய்னாவுக்கு எடுத்துக் கூறினார் உஷா ராணி.

எனினும் சாய்னாவை உலகின் நம்பர் ஒன் பாட்மிண்டன் வீராங்கனையாக்க வேண்டும் என்ற ஆசை அவரது தந்தைக்கு இல்லை. அவரது கனவு சாய்னாவை டாக்டர் ஆக்க வேண்டும் என்பதுதான். சாய்னாவுக்கும் அதே கனவு இருந்தது. ஆனால் பாட்மிண்டன் சாய்னா வின் வாழ்வோடு வெகு இயல்பாக பின்னிப் பிணைந்து கொண்டது.

சாய்னாவின் 8 வயதில் ஹர்விர் சிங்குக்கு வேலை இடமாற்றம். ஹைதரா பாத்துக்கு இடம் பெயர்ந்தார்கள். கோடை விடுமுறையில் பாட்மிண்டன் பயிற்சி முகாமில் சேர்க்க சாய்னாவை அழைத்துப் போனார்கள். ஆனால் முகாமில் சேர்க்க இடம் இல்லை.

அப்போது 'ஒரே ஒருமுறை என் மகள் விளையாடுவதைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்’ என்று நம்பிக்கையுடன் வாய்ப்பு கேட்டார் ஹர்விர் சிங். அதுவரை சாய்னா எந்தப் பயிற்சியும் எடுத்தது இல்லை. ஏதோ பொழுதுபோக்குக்காக மட்டுமே விளையாடும் பழக்கத்தை கொண்டிருந்தார்.

தேர்வாளர்கள் சாய்னாவின் கையில் பாட்மிண்டன் ராக்கெட்டைக் கொடுத்தனர். அவள் ராக்கெட்டை கையாண்ட விதம், இறகுப்பந்தை லாகவமாகப் பிடித்து அடித்த முதல் ஸ்ட்ரோக், எதிராளியிடம் இருந்து வரும் இறகுப்பந்து விழும் இடத்தைச் சரியாகக் கணித்து சீறிப் பாய்ந்தது என அவரது ஓட்டு மொத்த செயல்பாட்டையும் கண்டு தேர்வுக் குழுவினர் வாயடைத்து போனார்கள்.

முகாமில் பங்கேற்ற அவர், அடுத்த கட்டப் பயிற்சிக்கும் தேர்வானர். அதிகாலையில் ஆரம்பித்தது பயிற்சி. வீட்டுக்கும் மைதானத்துக்கும் இடையே 25 கிலோ மீட்டர் பயண தூரம். ஹர்விர் சிங்கின் ஸ்கூட்டர் சளைக்காமல் ஓடியது. காலையில் பயிற்சி, பிறகு பள்ளி, மாலையில் மீண்டும் பயிற்சி. இரவில் ஸ்கூட்டரில் தந்தையுடன் திரும்பும்போது சாய்னா அதிலேயே தூங்கிவிடுவார்.

சாய்னாவின் கனவிலும் இறகுப் பந்துகளே பறந்தன. பாட்மிண்டன் ராக்கெட்டை கையில் பிடிப்பதற்கு முன்பாக 8 வயதில், சாய்னாவை அவரது பெற்றோர் கராத்தே வகுப்புக்கு அனுப்பினர். அதில் அவர் பிரவுன் பெல்ட் வாங்கினார். கராத்தேவின் அடுத்த கட்ட பயிற்சிகள் கடினமாக இருந்ததால் அதற்கு சாய்னா “குட்பை” சொன்னார்.

அதன் பிறகு தான் பாட்மிண்டனே தனது வாழ்க்கை என தீர்மானித்தார் சாய்னா. 8-ம் வகுப்பு படிக்கும்போது, ஜூனியர் பிரிவில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார். 14 வயதில் தேசிய சாம்பியன் ஆனார்.

2010-ல் டெல்லி காமன்வெல்த் இறுதிப் போட்டியில் மலேசியாவின் வோங் மியு சூவை வீழ்த்தி தங்கம் வென்றார். இந்த ஆட்டத்தில் சாய்னா புயல் வேகத்தில் ராக்கெட்டை சுழற்றியது அனைவரையும் கவர்ந்தது. சாய்னாவின் கழுத்தில் ஏறிய அந்தத் தங்கப் பதக்கம்தான் இந்தியா, பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடம்பிடிக்க உதவியது.

சாய்னாவின் விளையாட்டு உத்தி, ஆரம்ப காலத்தில் மிக வேகமான தாக்குதல் உத்தியாகத்தான் இருந்தது. மொத்த சக்தியையும் இறக்கி, நேர் செட்களில் எதிரியை வெல்ல வேண்டும் என கடினமாக போராடுவார். 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் சாய்னா, காலிறுதியில் மலேசியாவின் மரியா கிறிஸ்டினோடு மோதினார். அதிரடி வேகம் காட்டி முதல் செட்டை 28-26 எனப் போராடி வென்றார்.

ஆனால், அடுத்த இரண்டு சுற்றுகளில் சாய்னா தோல்வியடைந்தார். அப்போது தான் அதிரடியாக ஆடுவது முக்கியம் அல்ல, இறுதி நொடி வரை சோர்வின்றி நிலைத்து ஆடுவதே வெற்றிக்கான வழி என சாய்னா புரிந்துகொண்டார்.

உயரத்தில் பறந்து வரும் இறகுப் பந்தை, எகிறிக் குதித்து எதிர் களத்தில் தரையோடு தரையாக வேகமாக அடித்து எதிரியை நிலைகுலையச் செய்யும் “ஸ்மாஷ் ஸ்ட்ரோக்” அடிப்பதில் சாய்னா கைதேர்ந்தவர். எதிராளியின் வலையை ஒட்டி இறகுப் பந்தை விழச் செய்யும் “டிராப் ஷாட்” அடிப்பதிலும் சாய்னா கில்லி.

2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் சாய்னா வெண்கலம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இதன் பின்னர் இந்தோனேசியா சூப்பர் சீரிஸ், சுவிஸ் ஓபன், சிங்கப்பூர் சூப்பர் சீரிஸ், டென்மார்க் சூப்பர் சீரிஸ், ஆஸ்திரேலியாவின் சூப்பர் சீரிஸ் என பல சர்வதேசப் பட்டங்கள், பத்ம, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா என பல விருதுகள் வாங்கி குவித்தார் சாய்னா.

இவற்றுக்கு இடையே 2014-ல் தொடர் தோல்விகள், காயங்கள், எதிர்மறை விமர்சனங்களையும் எதிர்கொள்ள தவற வில்லை சாய்னா. ஒருகட்டத்தில் தோல்விமேல் தோல்வி துரத்த, தன் பாட்மிண்டன் வாழ்க்கையில் மிக முக்கிய மாக முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தத் துக்கு ஆளானார் சாய்னா. ஆரம்ப காலம் முதல் சாய்னாவின் திறமையைக் கூர்தீட்டிப் பயிற்சியளித்த ஆஸ்தானப் பயிற்சியாளரான கோபிசந்தின் அகாடமியில் இருந்து விலகினார்.

இந்த முடிவுக்காக நன்றி மறந்துவிட்டார் என்றெல்லாம் சாய்னா மீது விமர்சனங்கள் பாய்ந்தன. அமைதி யாக இருந்தார் சாய்னா. ‘என் தொடர் தோல்விகள், பாட்மிண்டன் விளையாட் டின் மீதே எனக்கு வெறுப்பை உண்டாக் கியது.

‘இதற்குப் பிறகும் இன்னும் ஏன் இந்த விளையாட்டை விளையாட வேண்டும்?’ என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றியது. ஆனால் தோல்விக்கான காரணங்களை அலசியபோது, பயிற்சி முறையில் மாற்றம் தேவை என உணர்ந்தேன்.

சரியோ தவறோ எனக்கும் ஒரு மாற்றம் தேவைப்பட்டது. அதனால் என் பயிற்சி அகாடமியை மாற்றுவது என முடிவெடுத்தேன். என்னை எனக்கே நிரூபிக்க அவசியமான மாற்றமாக இருந்தது” என்றும் சாய்னா விளக்கம் அளித்தார்.

இரண்டு முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற விமல் குமாரை தனது பயிற்சியாளராக தேர்ந்தெடுத்தார். சாய்னாவின் இந்த முடிவு அவரது பாட்மிண்டன் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது.

2015-ம் ஆண்டு ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் உலகின் முதல் நிலை வீராங்கனை என்ற மகுடத்தை சூடினார்.

சீன டிராகன்கள் என வர்ணிக்கப்படும் சீன வீராங்கனைகளே தரவரிசையில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அந்த இடத்தை சாய்னா எட்டிப்பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.

அதே ஆண்டில் இந்தோனேசியாவில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறினார். அதில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோல்வி அடைந்து வெள்ளி பதக்கம் வென்றார்.

சாய்னாவுக்கு வெற்றியை ஆரவா ரமாகக் கொண்டாடக்கூடத் தெரியாது. சிறு வயதில் ஒரு பாட்மிண்டன் போட்டி யில் முதன்முறையாக ஜெயித்தபோது, சாய்னாவுக்கு 300 ரூபாய் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என சாய்னாவுக்குத் தெரியவில்லை. அவரது பெற்றோர் அந்தப் பணத்தில் நிறைய ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத் தார்கள்.

இப்போதும் பெரிய போட்டியில் பட்டமோ, பதக்கமோ ஜெயித்தால், அதிகபட்சக் கொண்டாட்டமாக ஐஸ்கிரீம் உண்பதையே வழக்கமாக கொண்டுள் ளார் சாய்னா. தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சாய்னா 3-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்ற சாய்னா ஒலிம்பிக்கில் இம்முறை நிச்சயம் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே 125 கோடி மக்களின் எதிர்பார்ப்பு.

இதுவரை சாதித்தவை

$ 2010 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம்.

$ 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம்.

$ 2014 ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம்.

$ 2015 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம்

$ 2015-ல் உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடம்.

$ 2010 மற்றும் 216 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம்

$ 2009-ல் அர்ஜூனா விருது

$ 2010-ல் பத்ம விருது

$ 2009-ல் ராஜூவ்காந்தி கேல் ரத்னா விருது

$ 2016 பத்ம பூஷண் விருது



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x