Published : 20 Jan 2015 11:59 AM
Last Updated : 20 Jan 2015 11:59 AM

இந்தியாவை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தியது இங்கிலாந்து

பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் 3-வது ஆட்டத்தில் பேட்டிங், பவுலிங் என்று இரண்டிலுமே இந்திய அணியை ஒன்றுமில்லாமல் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இயன் பெல் 91 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். ஜேம்ஸ் டெய்லர் 63 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ, இங்கிலாந்து 27.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போனஸ் புள்ளியுடன் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியில் மொயீன் அலி மட்டுமே 8 ரன்களில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து 25/1. அதன் பிறகு பெல், ஜேம்ஸ் டெய்லரை இந்தியாவின் மந்தமான, எந்த வித இலக்குமற்ற பந்துவீச்சினால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

மொத்தமே 70 ஓவர்களுக்குள்ளாக ஆட்டம் முடிந்து விட்டது. மிகவும் ஒருதலைபட்சமான ஆட்டமாக முடிந்தது. பந்துகள் மீதமுள்ள வகையில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியதில் இதுதான் அந்த அணியின் மிகப்பெரிய வெற்றி.

மீண்டும் ஒருமுறை லேசான பவுன்ஸ் இருந்தால் கூட இந்திய பேட்டிங் சரிவு கண்டுவிடும் என்பதற்கு இந்த ஒருநாள் போட்டி ஒரு உதாரணமாகத் திகழ்ந்துள்ளது.

ஃபின், ஆண்டர்சன் வேகத்தில் சுருண்ட இந்தியா:

முதலில் ஆடிய இந்திய அணி 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டீவன் ஃபின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய தரப்பில், அதிகபட்சமாக, பின்னி 44 ரன்களைக் குவித்தார். 6 இந்திய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. சென்ற போட்டியில் சதம் அடித்த ரோஹித் சர்மா, காயம் காரணமாக இன்று விளையாடவில்லை. அவருக்கு பதிலாக அம்பாதி ராயுடு சேர்க்கப்பட்டிருந்தார். மேலும் அஸ்வினுக்கு பதிலாக பின்னி இன்று ஆடும் வாய்ப்பைப் பெற்றார்.

ரஹானே, தவான் ஜோடி துவக்க வீரர்களாக களமிறங்கினர். தொடந்து இந்தத் தொடரில் சொதப்பி வரும் தவான், இன்றும் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ரஹானே - ராயுடு ஜோடி சற்று நிதானித்து ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர்.

ஆனால் 15-வது ஓவரில் இந்த இணையை ஸ்டீவன் ஃபின் உடைத்தார். ரஹானே 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த கோலி 4 ரன்களுக்கும், ரெய்னா 1 ரன் எடுத்தும், நன்றாக ஆடி வந்த ராயுடு 23 ரன்களுக்கும் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

தோனியுடன் களத்தில் இணைந்த பின்னி சூழல் புரிந்து நிதானமான ஆட்டத்தைக் கடைபிடித்தார். இருவரும் இணைந்து 70 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தனர். 37-வது ஓவரில் ஃபின் வீசிய பந்தில் தோனி (34 ரன்கள்) கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே அக்சர் படேல் வீழ்ந்தார்.

ஆண்டர்சன் வீசிய அடுத்த ஓவரில் புவனேஷ்வர் குமார் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டு ஓவர்கள் கழித்து, ஆண்டர்சனின் வேகத்திற்கு பின்னி மற்றும் ஷமி அடுத்தடுத்து பலியாயினர். 40 ஓவர்களைக் கூட ஆட முடியாத இந்திய அணி, 153 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x