Published : 09 Jan 2014 09:31 AM
Last Updated : 09 Jan 2014 09:31 AM
இந்திய அணி வீரர்கள் சிலரை ரஞ்சி கோப்பையில் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அனுமதிக்காததற்கு ராகுல் திராவிட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்துக்கு செல்லும் இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா, ரஹானே, முகமது சமி, ஸ்டுவர்ட் பின்னி, புவனேஸ்வர் குமார், சுரேஷ் ரெய்னா ஆகியோரை ரஞ்சி கோப்பையில் விளையாட பிசிசிஐ அனுமதிக்கவில்லை. இதில் ரோஹித் சர்மா, ரஹானே ஆகியோர் மும்பை அணிக்காகவும், ரெய்னா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் உத்தரப் பிரதேச அணிக்காகவும், ஸ்டுவர்ட் பின்னி கர்நாடக அணிக்காகவும், முகமது சமி பெங்கால் அணிக்காவும் விளையாடக் கூடியவர்கள்.
ரஞ்சி கோப்பை காலிறுதிப் போட்டிகள் நேற்று தொடங்கியுள்ள நிலையில், இவர்கள் அதில் பங்கேற்கவில்லை. நியூஸிலாந்து தொடருக்காக வரும் 12-ம் தேதியன்றுதான் இந்திய வீரர்கள் இங்கிருந்து புறப்படுகிறார்கள். எனவே அதற்கு முன்பு இந்த வீரர்களை ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்ற மாநில கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்து விட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக ராகுல் திராவிட் கூறியிருப்பது: நியூஸிலாந்து செல்லும் வீரர்களை ரஞ்சி கோப்பை காலிறுதியில் விளையாட அனுமதிப்பதுதான் சிறந்த முடிவாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து. ரஞ்சி கோப்பை காலிறுதி முடியும் நாளுக்கும், நியூஸிலாந்துக்கு எதிரான தொடர் தொடங்குவதற்கும் இடையே சுமார் ஒரு வாரகால இடைவெளி உள்ளது. எனவே இவர்கள் ரஞ்சி போட்டியை முடித்துக் கொண்டு நியூஸிலாந்துக்கு பயணம் மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ரஞ்சி போட்டியில் விளையாடுவது பந்து வீச்சாளர்களான முகமது சமி, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு சிறந்த அனுபவமாக இருக்கும் என்று திராவிட் கூறியுள்ளார். இஎஸ்பின் கிரிக்இன்போ நிறுவனம் நேற்று நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திராவிட் தனது இந்தக் கருத்தை பகிர்ந்து கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT