Published : 15 Aug 2016 02:27 PM
Last Updated : 15 Aug 2016 02:27 PM
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஏ அணிகளுக்கு இடையிலான 4 அணிகள் பங்கேற்கும் ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா ஏ அணி, ஆஸ்திரேலியா ஏ அணியிடம் படுதோல்வி கண்டது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி கேப்டன் ஒயிட்மேன் முதலில் மணீஷ் பாண்டே தலைமையிலான இந்தியா ஏ அணியை பேட் செய்ய அழைத்தார். ஆனால் 15.4 ஓவர்களே இந்திய அணி தாக்குப் பிடித்து 55 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா ஏ அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா ஏ அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான கிறிஸ் ட்ரமெயின், டேனியல் வொரல் தங்களிடையே 9 விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டனர். அக்சர் படேல் மட்டுமே 8-ம் நிலையில் களமிறங்கி அதிகபட்சமாக 15 ரன்களை எடுத்தார்.
ஆட்டம் தொடங்கி 3-வது ஓவரில் டிரிமெய்ன் ஹாட்ரிக் அல்லாமல் 3 விக்கெட்டுகளை சாய்த்தது இந்திய அணியை எழும்பவிடாமல் செய்தது. கருண் நாயர், மந்தீப் சிங், கேப்டன் மணீஷ் பாண்டே ஆகியோரை வீழ்த்தினார் டிரமெய்ன். தனது அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன், தொடக்க வீரர் ஃபைஸ் பாசல் ஆகியோரையும் பெவிலியன் அனுப்பி லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் முதல் முறையாக 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 55 ரன்களில் இந்தியா ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியா ஏ இலக்கைத் துரத்திய போது நிதானமாக ஆடினர். ஸ்டாய்னிஸ் 19 ரன்களில் சாஹல் பந்தில் பவுல்டு ஆக, லின் ரன் எடுக்காமல் அக்சர் படேல் பந்தில் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கடைசியில் தொடக்க வீரர் பேட்டர்சன் 23 ரன்களிலும் ஹேன்ட்ஸ்கோம்ப் 11 ரன்களிலும் நாட் அவுட்டாக திகழ 17.1 ஓவர்களில் 56 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா ஏ வெற்றி பெற்றது.
அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா ஏ-வுடன் இந்தியா ஏ மோதுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT